Published:Updated:

`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா?’ - சிவகங்கை ப.சி ஃபேக்டர்

`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா?’ - சிவகங்கை ப.சி ஃபேக்டர்
`வெட்டுடையாள் காளி ஹெச்.ராஜாவுக்குக் கை கொடுப்பாளா?’ - சிவகங்கை ப.சி ஃபேக்டர்

தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்குப் பலம். மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் ஹெச்.ராஜாவே போட்டியிடுவதையும் ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார் ப.சிதம்பரம்.

தொகுதி: சிவகங்கை

சிவகங்கை, மானாமதுரை (தனி), திருப்பத்தூர், காரைக்குடி, திருமயம், ஆலங்குடி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி

சுருக்கமான வரலாறு:

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சிவகங்கைக்கென்று தனிப் பெருமை உண்டு. சசிவர்ண தேவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் ஒரே மகன் முத்துவடுகநாதன் அரசராக பொறுப்பேற்றார். இவர் சிவகங்கையின் இரண்டாவது ராஜா என அழைக்கப்பட்டார். ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக அவர்களுக்கு வணிக வசதிகளை வழங்காமல் டச்சுக்காரர்களை ஆதரித்தார் வடுகநாதன். இதன் காரணமாக கோபமுற்ற கிழக்கிந்தியப் படை அதிகாரிகள், சிவகங்கையின் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்த நினைத்தனர். இதன் தொடர்ச்சியாக சிவகங்கையின் இரு முனைகளையும் தாக்குவதற்காக கிழக்கிலிருந்து ஜோசப்ஸ்மித்தும் மேற்கிலிருந்து பெஞ்சூரும் சிவகங்கை பாளையம் மீது படையெடுத்தனர். இந்தப் படையெடுப்பின் விளைவாக, ராஜா முத்துவடுக நாதனுடன் அவரின் வீரர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதன் பிறகு, மருது சகோதரர்களின் துணையோடு ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து சிவகங்கை சீமையை மீட்டார் வேலுநாச்சியார். இதன் பிறகு மருது சகோதரர்களுக்கு நாட்டை ஆள்கின்ற அதிகாரத்தை வழங்கினார். இறுதியில், ஆங்கில ஆதிக்கத்திலிருந்து தாய்நாட்டை விடுவிக்கப் போராடிய குற்றத்துக்காக மருதுபாண்டியர்கள் கைது செய்யப்பட்டனர். 1801-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கோட்டையின் சிதறல்கள் மீது மருது சகோதரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

குட்டிக் கதை ஒன்று:

வீரமங்கை வேலுநாச்சியாரை சிறைபிடிப்பதற்காகக் காளையார்கோவில் காடுகளுக்குள் படையோடு வந்தனர் ஆங்கிலேயர்கள். அப்போது, வேலுநாச்சியாரின் இருப்பிடம் குறித்து உடையாள் என்கிற சிறுமி காட்டிக்கொடுக்க மறுத்ததால் அந்தச் சிறுமியின் கை, கால்கள், தலை ஆகியவை தனித்தனியாக வெட்டப்பட்டன. இந்தச் சிறுமிதான் வெட்டுடையாள் காளியாக இன்றும் அப்பகுதி மக்களுக்கு நீதி வழங்கும் தெய்வமாக விளங்குகிறாள். 

அரசியல் வரலாறு:

சிவகங்கைத் தொகுதியிலிருந்து தி.மு.க சார்பில் 2 முறை தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் தா.கிருட்டினன். இதன் பிறகு காங்கிரஸ் சார்பில் 5 முறையும் ஜி.கே.மூப்பனாரின் த.மா.கா சார்பில் 2 முறையும் வெற்றி பெற்றிருக்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். கடந்த 2014 தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட செந்தில்நாதன், தி.மு.க வேட்பாளர் துரைராஜைத் தோற்கடித்தார். இந்தத் தேர்தலில் 1,04,678 வாக்குளைப் பெற்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். 1980-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையில் இத்தொகுதியில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருந்தாலும், சிவகங்கைத் தொகுதியில் சொந்த செல்வாக்கை வளர்த்து வைத்திருக்கிறார் சிதம்பரம். முக்குலத்தோர்களும் சிறுபான்மை, தலித் மக்கள் நிரம்பியுள்ள தொகுதியாகவும் இருக்கிறது. 

தலையாய பிரச்னை?

ப.சிதம்பரத்துக்கென தனி செல்வாக்கு இருந்தாலும் வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் செல்லும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். 

வேலைவாய்ப்புகளைப் பெருக்குவதற்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் கிடக்கிறது. இதைப் பற்றி வாக்குறுதிகளாக மட்டுமே வேட்பாளர்கள் அள்ளி வீசுகிறார்கள். 

விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள பூமி. போதிய மழை பெய்யாத காரணத்தால் வறட்சி தாண்டவமாடுகிறது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் மெதுவாக நடப்பதால், சிவகங்கை எப்போது வளமாக மாறும் என்ற ஏக்கம் தொகுதி முழுக்க உள்ளது. 

விவசாயமின்மை, வேலைவாய்ப்பின்மை, குடிநீர் தட்டுப்பாடு போன்றவை முக்கிய பிரச்னைகள்

நீண்டகால பிரச்னை என்ன? 

சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலையைக் கொண்டு வரும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி. அப்போது பேசியவர், 50,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் ஒரு லட்சம் கோடியில் முதலீடு செய்யப்படக்கூடிய திட்டம் என்றும் பெருமிதப்பட்டுக் கொண்டார். இதனால், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று வரையில் விரிவாக்கம் செய்யப்படாமல் வெறும் 200 தொழிலாளர்களுடன் இயங்கிவருகிறது.

கட்சிகளின் செல்வாக்கு? 

தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது காங்கிரஸ் கட்சிக்குப் பலம். மத்திய மாநில அரசுகள் மீதான எதிர்ப்பும் ஹெச்.ராஜாவே போட்டியிடுவதையும் ப்ளஸ்ஸாகப் பார்க்கிறார் ப.சிதம்பரம். அதேநேரம், அ.ம.மு.க வேட்பாளர் தேர்போகி பாண்டி பிரிக்கக்கூடிய வாக்குகள் குறித்த அச்சமும் பிரதான கட்சிகளுக்கு இருக்கிறது. கடந்த தேர்தலில் 1 லட்சம் வாக்குகளைப் பெற்றார் ஹெச்.ராஜா. இந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடுவது அவருக்கான ப்ளஸ். 

18 வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை?

1. மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு. 
2. சிலிண்டர் விலை உயர்வு.
3. பணமதிப்பிழப்பு.
4. வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட இருக்கும் பணம். 
5. கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்குகள்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கப்பட்டதை முக்கியமானதாகப் பார்க்கிறது ஆளும்கட்சி. வெற்றி பெற்றாலும் கார்த்தியால் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்றெல்லாம் பேசப்படுவதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சிதம்பரம் தரப்பு. சிவகங்கை வேட்பாளராக கார்த்தி அறிவிக்கப்பட்டதும், கடும் விமர்சனத்தை முன்வைத்தார் சுதர்சன நாச்சியப்பன். அவரையும் சிதம்பரம் தரப்பினர் சமாதானப்படுத்திவிட்டனர். 

மோடியின் சாதனைகளையும் தேசத்தைக் காத்த விதத்தையும் பிரசாரத்தில் முன்வைத்துப் பேசி வருகிறார் ஹெச்.ராஜா. அ.தி.மு.க அரசின் மக்கள் விரோதச் செயல்களைப் பட்டியலிட்டு பிரசாரம் செய்து வருகிறார் அ.ம.மு.க-வின் தேர்போகி பாண்டி. மொத்ததில் தி.மு.க கூட்டணி பலத்தோடு தற்போதைய சூழலில் முந்திக்கொண்டிருக்கிறார் கார்த்தி சிதம்பரம். `கடைசி நேர பண விநியோகமும் ஆளும்கட்சியின் வியூகமும் தன்னைக் கரையேற்றும்' என்ற நம்பிக்கையில் தொகுதிக்குள் வலம் வந்துகொண்டிருக்கிறார் ஹெச்.ராஜா. 

 
 
பின் செல்ல