Published:Updated:

சோழர்கள் ஆண்ட மண்ணில் சோறு இல்லையே! - திருவள்ளூரின் ஸ்டேட்டஸ் நிலவரம்

சோழர்கள் ஆண்ட மண்ணில் சோறு இல்லையே! - திருவள்ளூரின் ஸ்டேட்டஸ் நிலவரம்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி வேணுகோபால்... இந்தப் போராட்டத்தில் வெல்லப்போவது இலையா, கையா?

Published:Updated:

சோழர்கள் ஆண்ட மண்ணில் சோறு இல்லையே! - திருவள்ளூரின் ஸ்டேட்டஸ் நிலவரம்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி வேணுகோபால்... இந்தப் போராட்டத்தில் வெல்லப்போவது இலையா, கையா?

சோழர்கள் ஆண்ட மண்ணில் சோறு இல்லையே! - திருவள்ளூரின் ஸ்டேட்டஸ் நிலவரம்

தொகுதி: 

திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மாதவரம் உட்பட 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 

சுருக்கமான வரலாறு:

சோழர்கள், பல்லவர்கள், முகலாயர்கள், விஜய நகரப் பேரரசர்கள் ஆண்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகத் திருவள்ளூர் இருந்தது. இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரியான பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம், வீரராகவப் பெருமாள் கோயில், பூண்டி, புழல், சோழவரம் ஏரிகள் ஆகியவற்றைக் கொண்ட தொகுதி. ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, ராணுவ சீருடைத் தொழிற்சாலை ஆகியவை தொகுதியின் சிறப்பம்சங்கள். மோட்டார் வாகன உதிரிபாகங்கள், மின் சாதனங்கள், மின்னணு சாதனங்கள், இரும்புப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் தயாரிப்பு என 500-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய், சமையல் எரிவாயு நிறுவனங்கள், எண்ணூர் துறைமுகம், அனல்மின் நிலையங்கள், தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், சிமென்ட் ஆலைகள் என தனித்துவமான மாவட்டமாக உள்ளது. நெல், கரும்பு, காய்கறி, பூக்கள் ஆகியவை முக்கிய விளைச்சல்கள். 

தொகுதி பற்றிய குட்டிக் கதை:

கற்கால மனிதர்கள் வாழ்ந்த குடியம் குகை அதிரம்பாக்கம் என்னும் கிராமத்தில் இருக்கிறது. இந்தக் குகைக்குள் உள்ள மனாசியம்மன் கோனையில் நீர் ஊற்று ஒன்று வற்றாமல் இருக்கிறது. இந்தச் சுனைக்குள் யாரும் இறங்கியதில்லை. அப்படி இறங்கியவர்கள் எவரும் உயிருடன் திரும்பி வந்ததில்லை. கற்கால மனிதர்கள் இறந்துவிட்டால், அவர்களை அந்த இடத்தில் புதைத்துவிட்டு அடையாளத்துக்காகக் கற்களை அடுக்கி வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அந்தப் பழக்கம்தான் இன்றைக்கு கல்லறை கட்டும் நடைமுறையாக மாறியுள்ளது என்கிறார்கள். இந்தப் பழக்கத்தைத்தான் நாடோடியின மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். 

அரசியல் வரலாறு:

1952-ம் ஆண்டு நடந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பெண் எம்.பி-க்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் ஒருவர் திருவள்ளூர் தொகுதியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் மரகதம் சந்திரசேகர். மத்திய அமைச்சராகவும் 5 முறை எம்.பி-யாகவும் 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். விடுதலைப் போராட்ட வீரர் என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு. 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் தற்போதைய திருவள்ளூர் எம்.பி தொகுதியின் பெரும்பகுதிகள் அடங்கிய அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் வென்றவர் மரகதம். நேருவின் அமைச்சரவையில் இடம்பிடித்த பெருமைக்குரியவர். 

திருவள்ளூர் தொகுதியில் 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது. தற்போதைய திருவள்ளூர் மக்களவைத் தொகுதியின் பெரும்பகுதிகள் அடங்கிய ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 1967 முதல் 6 தேர்தல்களில் தி.மு.க-வும், 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும் வென்றன. 4 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டு இருந்த கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளோடு, புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி திருவள்ளூர் மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. தொகுதி சீரமைப்புக்குப் பின்பு தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றார் டாக்டர் வேணுகோபால். தொகுதி முழுக்க நிறைந்திருக்கும் பட்டியலின மக்களே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.

டாப் 5 பிரச்னைகள்: 

1. தொகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏரிகளும் கால்வாய்களும் தூர்வாரப்படாமல் இருப்பதால், மழைக்காலங்களில் நீரைச் சேமித்து வைக்க முடியாமல்போவது.

2. கொசஸ்தலை, ஆரணி ஆகிய ஆறுகளின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லாதது.

3. சென்னையின் குடிநீர்த் தேவைக்காக விவசாய நிலங்களில் அரசே நிலத்தடிநீரை உறிஞ்சுவது.

4. ஆறுகள், ஏரிகளில் சட்டவிரோதமாகவும் அரசு இயந்திரங்களின் துணையோடும் அதிகளவில் மணல், சவுடு மண் அள்ளப்படுவது.

5. கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது, கொசஸ்தலை, நகரி ஆறுகளின் குறுக்கே நடைபெற்று வந்த பாலம் கட்டும் பணிகள் நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டிருப்பது.

நீண்டகால பிரச்னை: 

1. அனைத்து வசதிகளுடன்கூடிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும். 

2. அனைத்து விரைவு ரயில்களும் திருவள்ளூரில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 

3. புறவழிச்சாலை, பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு கிடப்பிலேயே இருப்பது. 

4. மாம்பழக் கூழ், சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள், காய்கறி பதப்படுத்தும் மையம் போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்பது.

வாக்குப்பதிவை தீர்மானிக்கும் `டாப்-5’ காரணிகள் எவை? 

1. மத்திய மாநில அரசுகளின் மீதான மக்களின் கோபம்.  
2. கேபிள் டி.வி கட்டண உயர்வு.  
3. பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு.
4. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.
5. பண விநியோகம்.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார், "ஆவடியில் செயல்பட்டு வரும் படைத்துறை ஆடைத் தொழிற்சாலையை மூட மத்திய அரசு முடிவு செய்யுள்ளது. நான் வெற்றி பெற்றால் தொழி்ற்சாலையைத் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுப்பேன். அடிப்படை பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை கொடுப்பேன்" என்கிறார். 

அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.பி வேணுகோபால், "2 முறை எனக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தீர்கள். தொகுதிக்குள் விடுபட்ட பணிகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றித் தருவேன்" எனக் கூறி நம்பிக்கையோடு வாக்கு சேகரித்து வருகிறார். 

அ.ம.மு.க வேட்பாளர் பொன்.ராஜாவோ, "தமிழகத்தை வழிநடத்தச் சரியானவர் தினகரன்தான். மாவட்டம் முழுவதும் தண்ணீர் பிரச்னை இருக்கிறது. இதைப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவேன். பாதாள சாக்கடை திட்டத்தைச் செயல்படுத்துவேன்" என ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். 

நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் இல்லாததும், காங்கிரஸ் வேட்பாளரை உள்ளூர் கட்சிக்காரர்களே புறக்கணித்ததும் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான அம்சங்கள். "அ.தி.மு.க-வின் அடிப்படை வாக்குகளை அ.ம.மு.க பிரிப்பதால், தனக்கான வெற்றி உறுதி" என நம்பிக்கையோடு பிரசாரம் செய்து வருகிறார் காங்கிரஸ் ஜெயக்குமார். தொகுதியில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சம பலத்துடன் இருந்தாலும் வி.சி.க, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுக்குக் கணிசமான வாக்குகள் இருப்பது தி.மு.க அணிக்கு லாபம். மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, தொகுதியில் நிலவும் அதிருப்தி ஆகியவற்றைச் சமாளிக்க பெரும் போராட்டமே நடத்திக்கொண்டிருக்கிறார் அ.தி.மு.க வேணுகோபால். 

இந்தப் போராட்டத்தில் வெல்லப்போவது இலையா, கையா என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.