Published:Updated:

டெல்லி கணக்குப்பிள்ளை; தேர்தல் அறிக்கை நாயகன்! `பாலம் பாலு’வைக் கரையேற்றுமா ஸ்ரீபெரும்புதூர்?

டெல்லி கணக்குப்பிள்ளை; தேர்தல் அறிக்கை நாயகன்! `பாலம் பாலு’வைக் கரையேற்றுமா ஸ்ரீபெரும்புதூர்?

தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டி.ஆர்.பாலு. அவரது பாசத் தளபதிகளில் மிக முக்கியமானவராக வலம் வந்தார்.

Published:Updated:

டெல்லி கணக்குப்பிள்ளை; தேர்தல் அறிக்கை நாயகன்! `பாலம் பாலு’வைக் கரையேற்றுமா ஸ்ரீபெரும்புதூர்?

தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக கடைசிவரை செயல்பட்டவர் டி.ஆர்.பாலு. அவரது பாசத் தளபதிகளில் மிக முக்கியமானவராக வலம் வந்தார்.

டெல்லி கணக்குப்பிள்ளை; தேர்தல் அறிக்கை நாயகன்! `பாலம் பாலு’வைக் கரையேற்றுமா ஸ்ரீபெரும்புதூர்?

நட்சத்திர வேட்பாளர்: டி.ஆர்.பாலு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி: 

தளிக்கோட்டை இராசுத்தேவர் பாலு என்பதுதான் டி.ஆர்.பாலுவின் ஒரிஜினல் பெயர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றாலும், சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில்தான் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். திராவிட இயக்கத்தின் மீதான ஈர்ப்பு காரணமாக, சென்னையிலேயே தங்கினார். 1957-ம் ஆண்டில் இருந்தே தி.மு.க-வில் பணியாற்றி வருகிறார். டி.ஆர்.பாலு யார் என அடையாளம் காட்டியது என்பது மிசா கைதுதான். சுமார் ஒரு வருட காலம் சிறைவாசத்தை அனுபவித்தார். இதன் பயனாக 1980-களில் சென்னை மாவட்ட தி.மு.க செயலாளராக உயர்ந்தார். இதன்பின் தொடர்ந்து ஏறுமுகம்தான். அந்தக் காலகட்டத்திலேயே தி.மு.க-வில் தனக்கென தனி செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். சென்னையைத் தி.மு.க-வின் கோட்டையாக மாற்றியதில் டி.ஆர்.பாலுவுக்கும் முக்கிய பங்கு உண்டு. 

ராஜ்ய சபா என்ட்ரி: 

கருணாநிதியின் குட்புக்கில் இருந்ததால், 1986-ம் ஆண்டு ராஜ்ய சபா எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 1996, 1998, 1999, 2004 எனத் தொடர்ந்து 4 முறை தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2009-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, தென்சென்னை தொகுதியில் இருந்த தாம்பரம், ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் வந்துவிட்டன. அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்த சில பகுதிகளும் தென்சென்னை தொகுதியில் ஏற்கெனவே இருந்தவை. இதனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியைத் தேர்வு செய்தார் டி.ஆர்.பாலு. பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே.மூர்த்தியை வீழ்த்தி 5 வது முறையாக வெற்றிபெற்றார்.

தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கும் பாலுவுக்கும் இடையிலான மோதல் ஊரறிந்த ஒன்று. தஞ்சை வடசேரியில் சாராய ஆலை நிறுவனம் ஒன்றை டி.ஆர்.பாலு தொடங்கியபோது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைக் கிளப்பினர். இந்தப் போராட்டத்தின் பின்புலத்தில் பழனிமாணிக்கம் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தக் கோபத்தின் காரணமாக, பழனிமாணிக்கத்தை வீழ்த்துவதற்காக 2014 நாடாளுமன்றத் தொகுதியில் தஞ்சையில் போட்டியிட்டார் பாலு. இதனால் அதிருப்தி அடைந்த பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் பாலுவுக்கு எதிராகக் களமிறங்க சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவினார் பாலு. இந்தப் படுதோல்விக்குப் பிறகு, மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கே இடம் பெயர்ந்தார்.

முரசொலி மாறனுக்குப் பிறகு, தி.மு.க-வின் டெல்லி கணக்குப்பிள்ளையாக இருந்தார் டி.ஆர்.பாலு. சாராய ஆலை அதிபர், தொழிலதிபர் என இவருக்குப் பலமுகங்கள் உண்டு. மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்தவர். மன்மோகன்சிங் அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்துத்துறையின் அமைச்சராகப் பதவி வகித்தார். இவரது காலத்தில்தான் நாடு முழுவதும் சாலைகள் அமைப்பதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டது. 

கருணாநிதியின் தளபதி: 

தி.மு.க முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராகக் கடைசிவரை செயல்பட்டவர் பாலு. அவரது பாசத் தளபதிகளில் மிக முக்கியமானவராக வலம் வந்தார். அதனால்தான் முரசொலி மாறன் மறைவுக்குப் பிறகு, தி.மு.க-வின் டெல்லி அரசியலை இவரே கவனித்து வந்தார். தி.மு.க-வின் அறிவிக்கப்படாத டெல்லி தலைமையாகவே இவர் அறியப்பட்டார். கருணாநிதி மீது அதீத பாசம் கொண்டவர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 2001-ம் ஆண்டு அ.தி.மு.க அரசு கருணாநிதியைக் கைது செய்தபோது, ஆத்திரமும் கோபமும் அடைந்த டி.ஆர்.பாலு, சி.பி.சி.ஐ.டி அலுவலக கேட்டின் மீது காரை மோத வைத்து உள்ளே நுழைய முயன்றார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பிடித்தார். இதன் காரணமாகவே, துரைமுருகன் வசம் இருந்த முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. 

டாப் 5 சுவாரஸ்ய தகவல்கள்: 

* 'பாலம்' பாலு எனக் கருணாநிதியால் அழைக்கப்பட்டவர். 

* கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது அதிக அளவில் மேம்பாலங்களைக் கட்டியதையும் 58,000 கோடிக்கு திட்டங்களைக் கொண்டுவந்ததையும் பெருமையாக நினைக்கிறார். 

* 1980-ம் ஆண்டுகளில் சென்னையைத் தி.மு.க கோட்டையாக மாற்றிக் காட்டியவர்.

* தென்சென்னை தொகுதியில் இருந்து தொடர்ந்து 4 முறை எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டவர்.

* 2006-ம் ஆண்டு தி.மு.க-வின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையைத் தயார் செய்து கொடுத்தவர். தற்போது நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவரும் பாலுதான். 

டாப் 3 விமர்சனங்கள்:

* வெற்றி பெற்றுவிட்டால் தொகுதிப் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டார்.

* கட்சியினர் மத்தியில் செல்வாக்கு இல்லாதது, யாருக்கும் உரிய மரியாதை கொடுக்காமல் இருப்பது. 

* மக்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்ப்பது.

சக போட்டியாளர்களின் ப்ளஸ், மைனஸ்:

பா.ம.க வேட்பாளர் வைத்தியலிங்கம் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ரெட்டியார் சமூகத்தினர் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. அ.தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை மட்டுமே நம்பியிருக்கிறார். 

கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாதது வைத்தியலிங்கத்துக்கு மைனஸ்.  

சிட்டிங் எம்.பி கே.என்.ராமச்சந்திரன் தொகுதிப் பக்கம் தலைகாட்டாதது பா.ம.க வேட்பாளருக்கு மைனஸ். 

அ.ம.மு.க வேட்பாளர் நாராயணனுக்குப் பெரிதாக செல்வாக்கு இல்லை. ஆனால், தினகரனின் பிரசாரமும் தாம்பரம் முன்னாள் நகரமன்றத் தலைவர் கரிகாலனின் ஆதரவு வாக்குகளும் கணிசமாகக் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. தொகுதிக்குள் அடிப்படைக் கட்டமைப்பே இல்லாததால் மக்கள் நீதி மய்யம் திணறுகிறது.

பிரசாரத்தில் என்ன நடக்கிறது? 

தனது முந்தைய சாதனைகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறார் டி.ஆர்.பாலு. `கத்திபாரா மேம்பாலம், ஜி.எஸ்.டி சாலையில் உள்ள பல பாலங்கள், புதிய சாலைகள், சாலை விரிவாக்கப் பணிகள்' ஆகியவற்றை முன்வைத்துப் பிரசாரம் செய்கிறார். `தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் நிறைவேற்றப்படும்' என நம்பிக்கையோடு பேசி வருகிறார் பாலு.

பாம.க வேட்பாளர் வைத்தியலிங்கமோ, `ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்டுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளும் திறக்கப்படும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை கொடுப்போம்' எனப் பிரசாரம் செய்து வருகிறார். அ.ம.மு.க வேட்பாளர் பிரிக்கப் போகும் வாக்குகளை நினைத்துதான் உள்ளூர் அ.தி.மு.க நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். 

தற்போதைய சூழலின்படி, பிரசாரக் களத்தில் வேகமாக முன்னேறி வருகிறார் டி.ஆர்.பாலு.