Published:Updated:

``இச்சகதி தேர்தல் வரை கிடந்து நாறட்டும்!’’- நாசரின் தீர்க்கம்

``இச்சகதி தேர்தல் வரை கிடந்து நாறட்டும்!’’- நாசரின் தீர்க்கம்
``இச்சகதி தேர்தல் வரை கிடந்து நாறட்டும்!’’- நாசரின் தீர்க்கம்

நடிகர் நாசரின்  மனைவி கமிலா நாசர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மக்கள் நீதி மையம் சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் நிலையில், அவரைக் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில், நாசரின் சகோதரர் `கமிலாவுக்கு சீட் கொடுக்கக் கூடாது. அவர் சொந்த குடும்பத்தையே பார்த்துக்கொள்ளவில்லை. நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனக்கு மன வளர்ச்சி குன்றிய தம்பி இருக்கிறார். அவரையும் நான்தான் பார்த்துக்குறேன்’ என்று பேசி கண்ணீர்விட்டார். வீடியோகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நாசர், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  

அந்த அறிக்கையில், ``என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள் . சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்னைகள் எல்லா ஊடகங்களிலும் வந்துகொண்டிருக்கின்றன.

கமிலா நாசருக்கு “ஓட்டு போட்டுவிடாதீர்கள் “ என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்குப் பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள், பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமிலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது.

நான் அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை விளக்க என் 40 வருட வாழ்க்கை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்க்குச் செய்யவேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடைசெய்யப்பட்டது. அதை மீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறேன்.

பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலுசேர்க்க சிலவற்றைப் புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.

வேட்பாளர் ஒருவர்மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காதபோது வீசப்பட்ட சகதி, எங்கள் பொது வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன்வைத்து வீசப்பட்ட இச்சகதி, தேர்தல் வரை எங்கள் மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவேசெய்கிறேன்.

தேர்தல் நிறைவுறட்டும், நானும் கமிலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப்போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே’’ என்று குறிப்பிட்டுள்ளார்.