Published:Updated:

``வெறும் ஆள்சேர்ப்பதற்காகத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள்?’’ - கொதிப்பில் தீபா பேரவை!

``வெறும் ஆள்சேர்ப்பதற்காகத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள்?’’ - கொதிப்பில் தீபா பேரவை!
``வெறும் ஆள்சேர்ப்பதற்காகத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள்?’’ - கொதிப்பில் தீபா பேரவை!

``வெறும் ஆள்சேர்ப்பதற்காகத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள்?’’ - கொதிப்பில் தீபா பேரவை!

2019 நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவித்தார். அவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே களத்தில் குதித்த அவரது பேரவையினர், அ.தி.மு.க-வினரிடமும் கூட்டணிக் கட்சிகளிடமும் அவமானப்பட்டுத் திரும்புவதே வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற ஒரு சம்பவம், தீபா பேரவை நிர்வாகிகளைக் கோபத்தின் உச்சியில் நிறுத்தியுள்ளது.

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க-வுக்கு கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருச்சியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு, விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் முகாமிட்டுள்ள அவரைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற தீபா பேரவை நிர்வாகிகளை, தே.மு.தி.க-வினர் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வினரும் வெறும் ஆள்சேர்ப்பதற்கே தங்களைப் பயன்படுத்திக்கொள்வதாகப் பேரவை நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தீபா பேரவையின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.சி.கோபி, "தே.மு.தி.க வேட்பாளருக்காகப் பிரசாரம் செய்வதற்கு விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் வந்திருந்தார். கூட்டணிக்கட்சி என்கிற முறையில் அவரைச் சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவிக்க விரும்பினோம். கடந்த ஏப்ரல் 2-ம் தேதி பிரசாரத்தை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு வந்தவரை சந்திக்க, எனது தலைமையில் தீபா பேரவை நிர்வாகிகள் சென்றோம். இரவு 10.30 மணிக்கெல்லாம் ''அண்ணன் தூங்கப்போய்ட்டாரு, நீங்க அப்புறம் வாங்க'' என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக வெளியே போகச் சொன்னார்கள். 

''இப்பதானேப்பா பிரசாரம் முடிச்சுட்டு வர்றாரு. அதுக்குள்ளயா தூங்கப் போய்ட்டாரு? அவரைச் சந்திக்க நாங்க ஒருநாள் முழுக்க காத்திருக்கோம். நாங்க சின்ன அமைப்புதான். அதுக்காக ஆதரவு தர வர்றவங்களை இப்படி அவமானப்படுத்துறது சரியில்ல'' என்றேன். அதை, விஜய் பிரபாகரனோடு இருந்தவர்கள் காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. கோபத்தில் வெளியே வந்துவிட்டோம். நாங்கள் ஒன்றும் கிள்ளுக்கீரைகள் அல்ல. பின்னர், தே.மு.தி.க திருச்சி மாவட்டச் செயலாளர் போன்செய்து வருத்தம் தெரிவித்தார். சிறியவர்களோ, பெரியவர்களோ, தன்னைத் தேடி ஆதரவு தெரிவிக்க வந்தவர்களை மதிப்பதுதான் அரசியல் பண்பு. விஜய் பிரபாகரன் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

இவர்கள் மட்டுமல்ல, அ.தி.மு.க-வில் இருப்பவர்களே கூட்டத்துக்கு ஆள்சேர்க்கத்தான் எங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட மூன்றரை லட்ச ரூபாய் இந்தத் தேர்தலுக்காகச் செலவு செய்துள்ளேன். யாரிடமும் நாங்கள் பணம் பெற்றதில்லை. தீபா அம்மா சொல்லிவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான், எங்கள் உழைப்பையெல்லாம் கொட்டுகிறோம். ஆனால், கூட்டணிக்கட்சிகளிடம் அதற்கான மரியாதை இல்லாதபோது வருத்தமாக உள்ளது'' என்றார்.

இதுகுறித்து தே.மு.தி.க தரப்பிடம் பேசியபோது, "விஜய் பிரபாகரன் யாரையும் உதாசீனப்படுத்தவில்லை. பிரசாரம் முடித்துவிட்டு வந்து மிகச் சோர்வாக இருந்ததால், பிறகு சந்திப்பதாகக் கூறிவிட்டார். தீபா பேரவையினரிடமும் விளக்கமளித்துவிட்டோம்'' என்றனர்.

தீபா பேரவை ஆதரவு தெரிவித்ததற்கு ஒரு நன்றிகூட இதுவரை அ.தி.மு.க தலைமை தரப்பில் வெளிவராத நிலையில், கிராமப்புறங்களில் பிரசாரம் செய்யும் வேட்பாளர்கள் தீபாவின் படத்தைத் தங்களது விளம்பரப் பேனர்களில் போடத் தொடங்கியுள்ளனர். ஆனாலும், அ.தி.மு.க தலைமையும் கூட்டணிக்கட்சிகளும் தங்களைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்துவதாகத் தீபா பேரவைக்குள் கொதிப்பு எழுந்துள்ளது. 

'ஆதரவு தெரிவியுங்கள்' என்று தீபா சொல்லிவிட்டதன் காரணமாகவே, விருப்பமனுக்குக் கட்டிய 5,000 ரூபாயையும் மறந்துவிட்டு, களத்தில் லட்சக்கணக்கில் சொந்த பணத்தைச் செலவழித்து, அவமானப்பட்டு நிற்கும் தன் லட்சோப லட்சம் தொண்டர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் தீபா? பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு