Published:Updated:

``அந்தக் குறை மனதை உறுத்துகிறது!’’ - ஈரோட்டில் உருகிய ஸ்டாலின்

``அந்தக் குறை மனதை உறுத்துகிறது!’’ - ஈரோட்டில் உருகிய ஸ்டாலின்
``அந்தக் குறை மனதை உறுத்துகிறது!’’ - ஈரோட்டில் உருகிய ஸ்டாலின்

``அந்தக் குறை மனதை உறுத்துகிறது!’’ - ஈரோட்டில் உருகிய ஸ்டாலின்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் ம.தி.மு.க பொருளாளரான கணேசமூர்த்தியை ஆதரித்து, ஈரோட்டில் நேற்று நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ``தி.மு.க-வினுடைய தேர்தல் அறிக்கை சாமானிய மக்களுக்கானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று நாம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். ஆனால், தமிழகத்தில் நீட் தேர்வு நுழையக் காரணமாக இருந்த அ.தி.மு.க-வும் அதனுடைய தேர்தல் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் ஒருசில அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். ‘தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியாது. ஸ்டாலின் வாய்க்கு வந்ததையெல்லாம் அறிவித்திருக்கிறார்’ என்று அவர்கள் சொல்கிறார்கள். நான் என்ன அவ்வளவு மாங்கா மடையனா... 50 ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையில் கலைஞரின் வழிகாட்டுதலோடு இருந்தவனுக்கு அது தெரியாதா... மத்தியில் நம்முடைய ஆட்சி வரப்போகிறது. ராகுல் பிரதமராகப் போகிறார். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றையெல்லாம் நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம். அதேபோல காங்கிரஸினுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்து பயந்துபோன மோடி, ‘இது பொய்யான தேர்தல் அறிக்கை!’ என்று கூறியிருக்கிறார். அதாவது ஒரு போலியே போலி என்று கூறுகிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “மத்தியில் ஒரு சர்வாதிகாரி இருக்கிறாரென்றால், இங்கு ஒரு அறிவாளி இருக்கிறார். அதாவது, கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று சொல்கின்ற அளவுக்கு அறிவாளி அவர். அவரும் தி.மு.க அறிக்கை சாத்தியமில்லையென்று சொல்லியிருக்கிறார். என்ன விஷயம் சாத்தியமில்லையென்று எடப்பாடி பழனிசாமி சொன்னா, நான் அதைப் பரிசீலிக்கிறேன். ஹெலிகாப்டரைப் பார்த்து கும்பிட்டவங்க, அதே ஹெலிகாப்டர்ல கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடப் போறாங்க. அதுவும் க்ளைமேட் சரியில்லையென்று பாதியிலேயே திரும்ப வந்துட்டாங்க. பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகப் போய் சந்திக்கவில்லை. என்னுடைய ஆட்சியில் 35,000 போராட்டம் நடந்துருக்கு. போராட்டத்தோடுதான் ஆட்சியை நடத்திக்கிட்டு இருக்கேன்னு எடப்பாடி சொல்றார். இது பெருமைப்படுகின்ற விஷயமா. மக்கள் பொழுதுபோகவில்லை என்றா போராட்டம் நடத்துகிறார்கள். இந்த அரசால் அவர்கள் படும் பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் நடத்துகிறார்கள். இதைக்கூட எடப்பாடியால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

“துரைமுருகன் தி.மு.க-வில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் எனவே எங்களை மிரட்டிப் பார்க்க அவர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள். நாங்க பனங்காட்டு நரி, எந்தச் சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். மிசா, தடா, பொடாவை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள். எனக்கென்னவோ, அவர்களே பணத்தை வேண்டுமென்றே வைத்து எடுத்திருப்பார்களோ என்று தோன்றுகிறது. இப்படி எது நடந்தாலும், நாம் விழிப்போடு இருந்து, நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம் எனத் தொண்டர்கள் செயல்பட வேண்டும். ஈரோட்டில் வெற்றிச் சின்னத்தில் போட்டியிடும் கணேசமூர்த்தியினுடைய வெற்றி உறுதியாகியிருக்கிறது. கலைஞர் உயிரோடு இருக்கும்போதே உங்களுடைய உதவியால் வெற்றி பெற்று அதை அவரிடம் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதுமுடியாமல் மனதில் ஒரு குறையாய் உறுத்துகிறது. அந்தக் குறை வருகின்ற 18-ம் தேதி நிறைவேறப்போகிறது. கலைஞர் கொடுத்த பயிற்சி, ஊட்டிய உணர்வு நம்மிடம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அதைக் கலைஞரின் காலடியில் சமர்ப்பிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு