Published:Updated:

சர்வ அமாவாசை.. கவிழ்ந்த வேன்..! கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்

சர்வ அமாவாசை..  கவிழ்ந்த வேன்..!  கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்
சர்வ அமாவாசை.. கவிழ்ந்த வேன்..! கலக்கத்தில் ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ்.-ன் பிரசார வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, அவருக்கு வரும் ஆபத்தை குறிப்பதாக ஜோதிடர்கள் ஓ.பி.எஸ்க்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கடும் கலக்கத்தில் ஓ.பி.எஸ். உள்ளாராம்.

நீலகிரிக்குப் பிரசாரம் செய்ய வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் பிரசார வாகனம் அமாவாசையான நேற்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஜோதிடத்தின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள ஓ.பி.எஸ்., இச்சம்பவத்தால் கலக்கமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் ஜோதிடம், சகுணத்தின் மீது அபார நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறையும் வீட்டிலிருந்து புறப்படும்போது, போயஸ் தோட்ட வாசலில் அமைந்துள்ள விநாயகர் சிலையை வணங்கிவிட்டுத்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புறப்படுவார். தேர்தலின்போது, ஜாதக கட்டத்தைப் பார்த்த பின்னர்தான் வேட்பாளர் பட்டியலே இறுதியாகும். ஜோதிடர்கள் குறித்து கொடுக்கும் திசையிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்குவார். ஒரு சிறு தடங்கல் என்றாலும், அதற்காக பலகட்ட பூஜைகள் போயஸ் தோட்டத்தில் அரங்கேறும். உதாரணத்துக்கு, முதுமலை புலிகள் காப்பகத்தில் காவேரி என்கிற குட்டி யானை ஒன்று ஜெயலலிதாவை முட்டித் தள்ளிய பின்னர், கொடநாட்டில் அரங்கேறிய பரிகார பூஜைகளைச் சொல்லலாம்.

புருவ மத்தியில் செந்தூரம் வைக்கத் தொடங்கிய பிறகுதான் உயர்பதவி கிடைத்தது என்பதால், மெல்லிசாக ஒரு கோடு எப்போதும் ஓ.பி.எஸ். புருவ மத்தியில் இருக்கும். எடப்பாடி பச்சைக் கயிறு, ஓ.பி.எஸ். சிவப்புக் கயிறு என ஆளுக்கொரு கயிற்றைப் பூஜை செய்து அணிந்திருப்பார்கள். அவ்வளவு ஏன், பகுத்தறிவின் வித்தகராக விளங்கிய மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிகூட கடைசி வரையில் தான் அணிந்திருந்த மஞ்சள் துண்டைக் கழற்றவில்லை.

இந்நிலையில், நீலகிரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தியாராஜனை ஆதரித்து பிரசாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஏப்ரல் 3-ம் தேதி ஊட்டி வந்திருந்தார். அடுத்தநாள் ஏப்ரல் 4-ம் தேதி, கூடலூர், பந்தலூர் பகுதியில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக, அவரது பிரசார வேன் அவருக்கு முன்னர் கூடலூர் புறப்பட்டது. கூடலூர் அருகே நடுவட்டம் பகுதியில் வந்தபோது, நிலைதடுமாறி வேன் குப்புற கவிழ்ந்தது. இதில், வேன் ஓட்டுநரும், உதவியாளர் ஒருவரும் காயமடைந்தனர். அந்த வாகனத்தில் ஓ.பி.எஸ். பயணம் செய்யவில்லை என்பதால் தப்பித்தார். இச்சம்பவம் ஓ.பி.எஸ்.-ஐ மனரீதியாகப் பாதித்துள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ``கடந்த மார்ச் 29-ம் தேதி ஓ.பி.எஸ். கலந்துகொண்ட கூட்டத்துக்காக ஆள் ஏற்றிக்கொண்டு வந்த வேன், திருச்செங்கோடு அருகே விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் காயமடைந்தனர். இப்போது, சர்வ அமாவாசை தினத்தன்று அவரது பிரசார வேன் கவிழ்ந்து விபத்தாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து அபசகுணங்கள் தென்படுவதால் ஓ.பி.எஸ். கலக்கமடைந்துள்ளார்.

ஜெயலலிதாவைக் காட்டிலும் கேரளாவில் உள்ள மாந்திரீகர்கள், ஜோதிடர்களோடு ஓ.பி.எஸ்ஸுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. வியர்வை படிந்த தன் உடையை வைத்து யாரும் சூனியம் வைத்துவிடக் கூடாது என்பதற்காக, குளிப்பதற்கு முன்னர் தன்மீது தண்ணீரை ஊற்றிவிட்டு, பிறகுதான் உடையையே கழற்றுவார். எந்த ஒரு விஷயம் தொடங்குவதற்கு முன்னர், நேரம் காலம் பார்ப்பது அவரது வழக்கம். தர்மயுத்தம் தொடங்கியதே பிப்ரவரி 7, 2017 சர்வ ஏகாதசி தினத்தில்தான். கெளரி நல்ல நேரத்தில்தான் தியானத்தைத் தொடங்கினார்.

ஜோதிட ரீதியாக, சர்வ அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ரு கடன்களைக் கழிப்பது வழக்கம். நீலகிரி, ஜெயலலிதாவின் இரண்டாவது வாசஸ்தலமாக இருந்தது. அங்கு இவ்விபத்து நடைபெற்றிருப்பது, ஓ.பி.எஸ்ஸுக்கு வரும் ஆபத்தைக் குறிப்பதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக, பகை உணர்வுள்ள அசுர கோபத்தில் இருக்கும் ஆன்மாக்களின் வேலையாக இருக்கலாம். ஆகவே, பித்ரு கோபத்திலிருந்து தப்பிக்க சில பரிகார பூஜைகளைச் செய்யுமாறும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்’’ என்றார்.

எவ்வளவு ஜோதிட நம்பிக்கை இருந்தாலும், அதைப் பணி செய்யும் இடத்தில் ஜெயலலிதா வெளிக்காட்டியதில்லை. ஆனால், இரண்டு முறை தலைமைச் செயலகத்திலேயே பரிகார யாகம் நடத்தியவர் ஓ.பி.எஸ். சர்வ அமாவாசையில் வேன் கவிழ்ந்த சம்பவம், அவருக்குத் தூக்கமில்லா இரவுகளைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவிலேயே, அவருடைய இல்லத்தில் சிறப்புப் பூஜைகளும் நடைபெற இருக்கிறதாம்.

அடுத்த கட்டுரைக்கு