Published:Updated:

லோக்பால் அமைப்பில் பி.ஜே.பி ஆதரவாளர்கள்?

லோக்பால் அமைப்பில் இடம்பெற்றுள்ள பலரும் பி.ஜே.பி ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், லோக்பால் நியமனத்தின் நடுநிலைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

லோக்பால் அமைப்பில் பி.ஜே.பி ஆதரவாளர்கள்?
லோக்பால் அமைப்பில் பி.ஜே.பி ஆதரவாளர்கள்?

ழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை விசாரிப்பதற்கு மத்தியில் லோக்பால் மாநிலங்களில் லோக்ஆயுக்தா என்கிற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டுவந்த விஷயம். சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் போராட்டத்துக்குப் பிறகு, 2013-ல் இதற்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் உச்ச நீதிமன்ற உத்தரவால், லோக்பால் அமைப்பதற்கான நடைமுறைகள் 2018-ல் தொடங்கப்பட்டன. 

லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைப்பதற்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில், எட்டுப் பேர் கொண்ட தேடுதல் குழுவை 2018 செப்டம்பரில் மத்திய அரசு அமைத்தது. பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், சட்ட வல்லுநர் முகுல் ரோத்தகி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழுவானது, தேடுதல் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களைப் பரிசீலனை செய்தது. தேர்வுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்க மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மறுத்துவிட்டார். 
இந்நிலையில், லோக்பால் அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ், சமீபத்தில் நியமிக்கப்பட்டார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்த இவர், லோக்பால் தலைவராக அமர்த்தப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.கே.மொஹண்டி, குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிலஷா குமாரி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.கே.திரிபாதி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மகாராஷ்டிரா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் டி.கே.ஜெயின், ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான மகேந்திர சிங், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஐ.பி.கௌதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஐந்து பேரில் ஒருவரை தலைவர் பதவிக்கும், 24 பேரில் எட்டுப் பேரை லோக்பால் உறுப்பினர்களாகவும் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும். தேர்வின்போது கருத்து வேறுபாடுகள் வந்தால் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வுசெய்யலாம். தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களைத் தெரிந்துகொள்வதற்கு பொதுமக்களுக்கு உரிமை உண்டு. யாருடைய பெயரெல்லாம் பரிசீலிக்கப்பட்டது, என்ன காரணத்துக்காகப் பரிசீலிக்கப்பட்டது என்பவற்றையும் தெரிந்துகொள்ள ஒவ்வொருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இந்த நியமனம் மிகவும் ரகசியமாக நடைபெற்றதாகவும், அது லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தையே அவமதிப்பதாக இது இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

லோக்பால் தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களைத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் கேட்டுள்ளார். ஆனால், பெயர் விவகாரங்கள்  தரப்படவில்லை. மேலும், தேர்வுக்குழுவில் இடம்பெற்ற பிரதமர் மோடியும், மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் பி.ஜே.பி-காரர்கள். சட்ட வல்லுநரான முகுல் ரோத்தகி, பி.ஜே.பி ஆட்சியில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்தவர். அத்துடன், லோக்பால் அமைப்பில் இடம்பெற்றுள்ள பலரும் பி.ஜே.பி ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால், லோக்பால் நியமனத்தின் நடுநிலைத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

லோக்பால் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் குரல் கொடுத்துவந்தவர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம். அவரிடம் இது குறித்து கேட்டபோது, ``பி.ஜே.பி ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து லோக்பாலை அமைத்துள்ளார்கள். அதுவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, இதைச் செய்திருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். மேலும், அதில் நியமிக்கப்பட்டுள்ள பலரும் பி.ஜே.பி-காரர்கள். லோக்பால் அமைப்பின் நோக்கத்தையே சிதைத்துவிட்டார்கள். இப்போது அமைக்கப்பட்டுள்ள லோக்பால் சுத்த வேஸ்ட்” என்றார் வேதனையுடன். 

இது குறித்து பி.ஜே.பி சட்டப்பிரிவின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரான குமரகுருவிடம் கேட்டபோது, ``லோக்பால் அமைப்பு, சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி வழிகாட்டுதலில் நியமனங்கள் நடைபெற்றுள்ளன. அதனால், இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் ஆகாது. எதிர்க்கட்சி சார்பில் சிறப்பு அழைப்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேயை அழைத்தும், அவர் பங்கேற்க மறுத்துவிட்டார். அரசியல் சார்பு இல்லாமல், சட்டப்படி இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்கது” என்றார். 
ஆனாலும், லோக்பால் நியமனம் தொடர்பான சர்ச்சை நீடிக்கவே செய்கிறது.