Published:Updated:

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5

Vikatan Correspondent
கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5
கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5


-எஸ். முத்துக்கிருஷ்ணன்

மிழ்நாட்டில் நடக்கும் கல்வி கொள்ளையை தடுக்கவே முடியாதா என்ற கேள்விதான் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழுந்து கொண்டிருக்கிறது. இதற்கான எத்தனையோ போராட்டங்கள் நடந்து விட்டன. இன்னும் நடக்க இருக்கின்றன. சென்னை தனியார் பள்ளி ஒன்றில் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று கடந்த 27 ஆம் தேதி அன்று ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அதுபோலவே, பொறியில், மருத்துவ கல்லூரிகளிலும் கட்டணக் கொள்ளை நடப்பதை தட்டிக் கேட்ட முடியாமல் எத்தனையோ பெற்றோர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கூடுதல் கட்டணத்தை செலுத்த வசதி இல்லாததால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாத அவலநிலை தொடர்கிறது.

காற்றில் பறக்கும் அரசு உத்தரவு

 

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5

தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. ஒரு கல்லூரிக்கு சராசரியாக 100 சீட் அனுமதி உள்ளது. இந்த மருத்துவ கல்வி படிப்புக்கு அரசு கல்லூரிகளில் டியூசன் பீஸ் ஆண்டுக்கு ரூ.12,290 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கு டியூசன் பீஸ் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல, அரசு பல் மருத்துவ கல்லூரி டியூசன் கட்டணம் 10,290 ரூபாய் என்றும், சுயநிதி பல் கல்லூரிகளுக்கு ஆண்டு டியூசன் கட்டணம் ரூ.1 லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விபரம், இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகவல் அறிக்கை குறிப்பில் இடம்பெற்றுள்ளது.

ஆனால், எந்தவொரு சுயநிதி மருத்துவ கல்லூரியிலும் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில். அதிலும் இந்த கட்டணத்தை மட்டுமே வாங்காதது மட்டுல்ல சட்டத்துக்கு புறம்பாக நன்கொடையும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில், அதிலும் சென்னையை சுற்றியுள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் ஒரு சீட்டுக்கு 50 லட்சம் ரூபாயை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆண்டுக்கு டியூசன் பீஸ் மட்டும் ரூ.9 லட்சம் கேட்கிறார்கள். பாண்டிச்சேரியில் 40 லட்சம் ரூபாய் நன்கொடை; ஆண்டு டியூசன் பீஸ் ரூ.6 லட்சம் கேட்கிறார்கள். இதுதான் இந்த ஆண்டு டாக்டர் சீட் விலை. இன்னும் சில நாள் ஆனால் நன்கொடை அதிகமாகும்.

வெள்ளை பேப்பரில் ரேட்

தொலைபேசி மூலம், சமீபத்தில் நமது நண்பர் ஒருவர் மெடிக்கல் சீட் சேர்க்கை விபரம் கேட்டுள்ளார்.

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5

நேரில் வாருங்கள் என்றார்களாம். சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி நிர்வாக அலுவலகத்துக்கு சென்றார். போனவுடன் வரவேற்பு அறையில் அவருடைய செல்போன், பேனா, பேப்பர் உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்களாம். வேறு ஏதாவது ரெக்கார்டு செய்யும் கருவிகள் வைத்துள்ளாரா என்றும் சோதனை செய்து பார்த்து விட்டு, ஒன்றும் இல்லை என்ற பிறகே உள்ளே அனுமதித்தார்களாம். அப்ளிகேஷன் விலையே ரூ.1000 என்றார்களாம். அதை வாங்கிய பிறகே உள்ளே அதிகாரி ஒருவரிடம் கூட்டிக் கொண்டு சென்றார்களாம். அவர் முன்னிலையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாராம். அடுத்து இன்னொரு அதிகாரியை சென்று பார்த்தாராம். அவர்தான் கட்டண விபரங்களை கூறினாராம்.

அவர், முதலில் பெற்றோரின் ஆண்டு வருவாய், இதர வருவாய் விபரங்களை கேட்டுக் கொண்ட பிறகு விபரமாக பேச ஆரம்பித்தாராம். நன்கொடை பற்றித்தான் முதலில் பேச ஆரம்பித்தாராம். அந்த மெடிக்கல் கல்லூரி நிர்வாகத்துக்கு தமிழகம், பாண்டிச்சேரியிலும் சில மருத்துவ கல்லூரி உள்ளதாம். ஒவ்வொரு கல்லூரியிலும் என்ன ரேட் என்பதை ஒரு வெள்ளை பேப்பரில் பென்சில் மூலம் எழுதி பட்டியல் போட்டாராம். சென்னை அருகில் உள்ள கல்லூரி என்றால் நன்கொடை மட்டும் 55 லட்சம் ரூபாய். ஆண்டு டியூசன் பீஸ் 10 லட்சம் என்றாராம். பாண்டிசேரி என்றால் 45 லட்சம் ரூபாய். ஆண்டு டியூசன் பீஸ் கட்டணம் ரூ.8 லட்சம் என்றாராம்.

ரசீது கிடையாது

கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 5

ஒருமணி நேரம் கவுன்சலிங்கிற்கு பிறகு பணத்தை கட்டும் முறைகளை விளக்கினாராம். 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஜெராக்ஸ், சாதி சான்றிதழ் ஆகியவற்றோடு அட்வான்ஸ் பணம் ரூ.10 லட்சத்தோடு வாருங்கள்.. சீட்டை ஓ.கே. செய்து விடலாம். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் மீதி பணத்தை கட்ட வேண்டும். இல்லையென்றால் அட்வான்ஸ் திரும்ப கிடைக்காது. அரசு அறிவித்துள்ள டியூசன் கட்டணத்துக்கான பில் மட்டும் தரப்படும். அதற்கு வங்கியில் லோன் வாங்கிக் கொள்ளலாம். மீதி எந்த பணத்துக்குக்கும் ரசீது கிடையாது. என்னென்ன பீஸ் என்ற விவரத்தை ஒரு துண்டு சீட்டில் பென்சிலால் எழுதி காட்டினார்களாம். அந்த சீட்டை கடைசி வரை அவரிடம் கொடுக்கவே இல்லையாம். இப்படித்தான், மருத்துவ மாணவர் சேர்க்கையானது மூடு மந்திரமாகவே நடந்து வருகிறது. பிடிபட்டு விடக்கூடாது என்று ரொம்பவும் எச்சரிக்கையோடு செயல்படுகிறார்கள்.

நன்கொடை வாங்குவது தவறு என்றும், அப்படி வாங்கினால் மூன்று ஆண்டு ஜெயில்தண்டனை அல்லது அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கபடும் என்றும் கடந்த 2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. அது என்ன செய்கிறது என்றே தெரியவில்லை.

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தில்லாலங்கடிகளை நாளை பார்க்கலாம்... 

 கல்லா கட்டும் தனியார் கல்வி நிறுவனங்கள் - ஒரு மினி தொடர்: பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க