Published:Updated:

திரிணாமுல் கட்சிக்காக அந்தமானில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்!

திரிணாமுல் கட்சிக்காக அந்தமானில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்!
திரிணாமுல் கட்சிக்காக அந்தமானில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்!

அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இக்கூட்டணியின் சார்பாக, அந்தமானில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் இன்று அந்தமானில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தேசிய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது அணியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கட்டமைத்து வருகிறார். இக்கூட்டணியில் இடம்பெறும் பொருட்டு, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த மார்ச் 25-ம் தேதி மம்தா பானர்ஜியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், அந்தமான் நிகோபார் தீவுகளில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அயான் மொன்டலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக கமல்ஹாசன் இன்று அந்தமானில் பிரசாரம் மேற்கொள்கிறார். அந்தமானில் எட்டு முறை எம்.பி.யாக இருந்த மனோரஞ்சன் பக்தாவின் பேரன் தான் அயான் மொன்டல். வரும் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் அந்தமான் தேர்தலை சந்திக்கிறது.

கமல்ஹாசனின் அந்தமான் பயணம் குறித்து நம்மிடம் பேசிய ம.நீ.ம. செய்தி தொடர்பாளர் முரளி அப்பாஸ், ``பா.ஜ.க.வுக்கு எதிராக எங்கள் தலைவர் கமல்ஹாசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தும், சிலர் நாங்கள் பா.ஜ.க.வின் ‘பி’ டீம் என்கிற கூப்பாட்டை போட்டு வந்தார்கள். இன்று திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு அந்தமானில் கமல்ஹாசன் பிரசாரம் செய்வதில் இருந்தே, அந்தக் கூப்பாடு வெற்றுக் கூச்சல் என்பது மக்களுக்குப் புரிந்திருக்கும். இரண்டு நாள்கள் அந்தமானில் பிரசாரம் மேற்கொள்பவர், நாளை (7-ம் தேதி) இரவு சென்னை திரும்புகிறார்’’ என்றார்.

தேசிய நீரோட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளும் விதமாக, முதல் முயற்சியை அந்தமானில் இருந்து கமல்ஹாசன் தொடங்குகிறார். முயற்சி எந்த அளவுக்கு பலனளிக்கும் என்பது பிரசாரத்தின் இறுதியில் தெரியும்.