Published:Updated:

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி ரவுடிகளால் தாக்கப்பட்ட விகடன் போட்டோகிராபர்!

விருதுநகரில் காங்கிரஸ் கட்சி ரவுடிகளால் தாக்கப்பட்ட விகடன் போட்டோகிராபர்!
விருதுநகரில் காங்கிரஸ் கட்சி ரவுடிகளால் தாக்கப்பட்ட விகடன் போட்டோகிராபர்!

விருதுநகரில்  நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தைப் படம் பிடிக்கச் சென்ற ஜூனியர் விகடன் போட்டோகிராபர் முத்துராஜ், அக்கட்சியை சேர்ந்த குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தால் தமிழகம் முழுக்க பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விளக்கி விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். கூட்டம் முடிந்த நேரத்தில்தான் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்துள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், ''தேர்தல் அறிக்கை கூட்டம் முடிவடையும் நேரத்துக்கு முன்பே கூட்டம் கலையத் தொடங்கியது. விகடன் போட்டோகிராபர் முத்துராஜ் வாட்ஸ் ஆப்பில் லைவ் கொடுத்துக் கொண்டிருந்தார்.  இதை ரொம்ப நேரமாக  பார்த்து  கொண்டிருந்த ஒரு கும்பல் ஒன்று முத்துராஜ் அருகே நெருங்கி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் முகம் தெரியாத வகையில் தலையில் துண்டு கட்டியிருந்தனர். கூட்டமில்லாத நாற்காலிகளை காட்டுகிறார்களே என்ற ஆத்திரம் இருந்திருக்கும் போல, நாங்களும் அங்கிருந்து கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தோம். அதற்குள் தாக்குதல் நடக்கும் சத்தம் கேட்டது. ஆறு குண்டர்கள் மாறி மாறி முத்துராஜை தாக்கினார்கள். அதில் அவர் நிலைகுலைந்து போய்விட்டார். கேமிரா எங்கோ விழுந்து விட்டது. அதற்குள் நாங்கள் ஓடிப்போய் முத்துராஜை அவர்களிடமிருந்து மீட்டோம். அதன் பின்பும் எல்லோரும் சேர்ந்து அந்த காங்கிரஸ் கட்சி ரவுடிகளை பிடிக்க முயற்சித்தோம். அதற்குள் எஸ்கேப்பாகி விட்டார்கள்.

இதை மேடையிலிருந்து பார்த்த விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஓடி வந்தார். முகம், நெஞ்சு கழுத்தில் கடுமையாக தாக்கப்பட்டுள்ள முத்துராஜுவை அரசு மருத்துவமனையில்  கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகிறோம். விருதுநகர் எஸ்பி உட்பட காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளோம். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகள் ஓடிவிட்டனர். காங்கிரஸ் நிர்வாகிகளிடம்   விசாரித்தால் அவர்கள் யார் என்பது தெரிந்து விடும். போலிஸ வழக்கு பதிவு செய்து உடனே அவர்களை கைது செய்ய வேண்டும்'' என்றனர்.