Published:Updated:

`விவசாயிகளுக்கு ஓய்வூதியம், நதிகள் இணைப்பு, சபரிமலை விவகாரம்!’ - வெளியானது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை

`விவசாயிகளுக்கு ஓய்வூதியம், நதிகள் இணைப்பு, சபரிமலை விவகாரம்!’ - வெளியானது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை
`விவசாயிகளுக்கு ஓய்வூதியம், நதிகள் இணைப்பு, சபரிமலை விவகாரம்!’ - வெளியானது பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை

ந்திய நாடாளுமன்றத் தேர்தல், ஏழு கட்டங்களாக நாடு முழுவதும்  நடைபெற உள்ள நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்க உள்ளது. தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணிகளில்  ஒன்றாக, கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் மாறியுள்ளன. சமீபத்தில், கங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது, அதில் இடம் பெற்ற ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கும் திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பி.ஜே.பி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா, நரேந்திர மோடி,ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “ வரும் 2022-ம் ஆண்டு, இந்தியா தன்னுடைய 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில், அதைச் சிறப்பிக்கும் விதமாக 75 முக்கிய உறுதிமொழிகளை பி.ஜே.பி வெளியிட உள்ளது. அதை நிறைவேற்ற, மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்” என்று கூறினார்.

பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில், விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன் வழங்கும் திட்டம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதுபோன்ற விவசாயிகளின் வாக்குகளைக் கவரும் விதமான வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான வாக்குறுதி, பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், மாநில அரசுடன் கலந்தாலோசித்து ஜி.எஸ்.டி எளிமைப்படுத்தப்படும், 2022 -க்குள் குடிசையில்லா இந்தியா உருவாக்கப்படும் போன்ற திட்டங்களும் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம், சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள் சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து அவற்றைப் பாதுகாப்பது உள்ளிட்ட நடவடைக்கைகள் மேற்கொள்ளப்படும். சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் சமஸ்கிருத பாடம் அதிகரிக்கப்படும், சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் இதில் இடம் பெற்றுள்ளன.    

இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய, பி.ஜே.பி-யின் கடந்த மக்களவைத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த, காலச் சூழலுக்கு ஏற்ப பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி, இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.