Published:Updated:

``சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா..?” - ராகுல், மோடிக்கு சீமான் கேள்வி

``சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா..?” - ராகுல், மோடிக்கு சீமான் கேள்வி
``சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியுமா..?” - ராகுல், மோடிக்கு சீமான் கேள்வி

``காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சிக்கனம் செய்து சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர்" என்று தஞ்சாவூரில் சீமான் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்கட்சியின்  நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கிருஷ்ணகுமார், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்  கார்த்திக் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற  பிரசார பொதுக் கூட்டத்தில் வாக்குகள் கேட்டுப் பேசினார். அப்போது, ``எத்தனையோ தேர்தல்கள் வந்தாலும் மக்களுக்கு எந்த மாறுதலும் இல்லை. எல்லா கட்சிகளும் பணத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.  நாங்கள் உயர்ந்த கருத்தை வைத்து களம் காணுகிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்தது. அப்போது செய்யாத காங்கிரஸ் இப்போது என்ன செய்யப்போகிறது என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கப்போவதாக ராகுல் காந்தி கூறுகிறார். காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகள் ஏழையாகினர்.

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 6,000 போடப்போவதாக மோடி கூறுகிறார். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 100 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இவர்களை ஒரு முறைகூட மோடி பார்க்கவில்லை. கோரிக்கை என்னவென்று கேட்கவில்லை. 6,000 ரூபாயை முன்பே கொடுத்திருந்தால், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைந்திருக்கும். இப்போது, வாக்கைப் பெறுவதற்காகப் பணம் கொடுக்கின்றனர். இது நல்ல திட்டமல்ல, நயவஞ்சகத் திட்டம்.
50 ஆண்டு கால சாதனைகளைக் கூறி வாக்கு கேட்க முடியாத நிலையில் ராகுல் காந்தி உள்ளார். இதேபோல, ஐந்தாண்டு கால சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் மோடி இருக்கிறார். காசு கொடுத்து வாக்கு கேட்கும் கூட்டத்தை மக்கள் விரட்டியடிக்கும் காலம் வரும்.

கஜா புயலில் நான்கு மாவட்டம் பாதி அழிஞ்சுபோச்சு. மரங்கள் மட்டும் முறிந்து விழவில்லை மனமும் முறிந்துவிட்டது .உலகுக்குகே சோறுபோட்ட விவசாயிகள், ஒரு வேளை சோற்றுக்கு கையேந்தி  நிற்கிற அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். புயலினால் 89 பேர் இறந்தனர். வாழ்வாதாரத்தை இழந்து தவித்த விவசாயிகளுக்கு மோடி ஒரு வார்த்தைகூட ஆறுதல் கூறவில்லை. ஏன் ராகுலும் ஆறுதல் வார்த்தை கூறவில்லை. இப்போது, வாக்கு கேட்பதற்கு  அடிக்கடி வருகின்றனர். ஐந்து ஆண்டு சாதானைகளில் ஒன்றைச் சொல்லி வாக்கு கேட்க முடியுமா மிஸ்டர் மோடி.

பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் ராகுல் காந்திக்கும் மோடிக்கும் வித்தியாசமில்லை. இருவரும் ஏமாற்றுபவர்கள்தான். இந்த நாட்டின் பாதுகாப்பில்கூட தற்சார்பு இல்லை.போர் விமானம் உட்பட  ஒவ்வொரு கருவியும் வெளிநாட்டிலிருந்துதான் வாங்குகின்றனர். இதனால், வாங்கி வாழ்கிற வாட்ச் மேன்கள் இவர்கள். இந்தியாவை ஒரு சந்தையாக்கிவிட்டனர். வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து தொழில் தொடங்குபவர்கள் வியாபாரம் முடிந்தவுடன், ஓடிவிடுகின்றனர். ஒரு வாடகைத் தாயைப் போலவே இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை உள்ளது. இதனால், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கோர்டுக்கு சென்றது நாம் தமிழர்தான். இப்போது அந்தத் திட்டத்தை  ரத்துசெய்துள்ளது நீதிமன்றம் அதை நாங்கள் செய்தோம் என இன்று பலர் சொந்தம் கொண்டாடுகிறார்கள். காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நினைத்த அரசு, நீரையும் சோறையும் பெறுக்குவதற்கு நினைக்கவில்லை. எரிபொருளை சேமிக்க நினைத்த அரசு, நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க பிரசவித்த குழந்தைதான் அ.தி.மு.க. ஒன்றுமே இல்லாத கட்சியான பி.ஜே.பி-யை இவர்கள்தான் தமிழகத்திற்கு அழைத்துவந்தனர். இப்போது, பி.ஜே.பி-யை எதிர்க்கிறார் ஸ்டாலின். பி.ஜே.பி போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிடுவதற்கு கூட்டணி கட்சிக்குக் கொடுத்துவிட்டது தி.மு.க.

ராகுல் காந்தி ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பேசும்போது, மீத்தேன் திட்டத்திற்கு நாங்கள் கையெழுத்திடச் சொல்லவில்லை; தி.மு.க தான் கையெழுத்திட்டது என்றார். இவர்கள்,  நாங்கள் ஆய்விற்குத்தான் ஒப்புதல் தந்தோம் என மக்கள் போராட்டத்திற்குப் பிறகு சொன்னார்கள். பா.ஜ.க வரக் கூடாது. ஆனால், பா.ஜ.க-வுக்கு மாற்று காங்கிரஸ் கிடையாது. சிஸ்டத்திற்குள் வேலை செய்ய வந்தவர்கள் நாங்கள் இல்லை. கொள்கையையே மாற்ற வந்தவர்கள். நாம் தமிழர் கட்சியை 40 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்தால், கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்றார்.