Published:Updated:

தென்னிந்தியாவில் எடுபடுமா பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை?

விஷ்ணுராஜ் சௌ
தென்னிந்தியாவில் எடுபடுமா பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை?
தென்னிந்தியாவில் எடுபடுமா பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை?

தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், அண்மைக்காலமாக முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. அதற்கேற்ப அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை மக்களைக் கவரும் வகையில் தயாரிப்பதில் முக்கியக் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தநிலையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பி.ஜே.பி. வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் பெரிய அரசியல் கவனம் பெற்றதைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் அறிக்கையை ராணுவம் சார்ந்த வாக்குறுதிகளோடு ஆரம்பித்திருந்தது பி.ஜே.பி. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கி உள்ள நிலையில் பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் இதே வாக்குறுதி இடம்பெற்றுள்ளது.

ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியைக் காங்கிரஸ் அளித்துள்ள நிலையில் அந்த வாக்குறுதியை ஈடுசெய்யும் விதமாக, விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் பி.ஜே.பி. சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

பி.ஜே.பி-யின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுப் பகுதியில் கடந்த தேர்தலில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகள் இந்தத் தேர்தலிலும் இடம் பெற்றுள்ளன. இந்திய அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பது போன்ற வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் வாக்குகளைக் கவரும் விதமான வாக்குறுதிகளும் இந்திய அரசியலமைப்பு வழிகாட்டு நெறிமுறையில் பிரிவு 44-ல் குறிப்பிட்டுள்ளதைப் பின்பற்றி பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற சர்ச்சைக்குரிய வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் வடஇந்தியாவை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன, தென்னிந்தியாவில் எடுபடாது என்ற கருத்துகளும் நிலவுகின்றன.

இதுகுறித்துப் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், ``கடந்த ஆறு தேர்தல்களாக பி.ஜே.பி-யின் சார்பில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருதல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்று வருகின்றன. இந்தத் தேர்தலிலும் அதே வாக்குறுதிகளே இடம் பெற்றுள்ளன. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அடுத்த தேர்தலிலாவது வாக்குறுதிகளைக் கொடுக்காமல், பி.ஜே.பி. அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க வேண்டும். மோடி தலைமையிலான ஆட்சியில் அதைச் செய்து முடிப்பார்கள் என நம்புகிறேன். மற்றபடி  நதி நீர் இணைப்பு போன்ற சிறப்பு வாய்ந்த திட்டங்களும் இந்தத் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. பெருவாரியான மக்களின் ஆதரவோடு மீண்டும் மோடி ஆட்சி அமைப்பார்” என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஷா நவாஸ், ``தென்னிந்திய மக்களை முற்றிலுமாக புறக்கணித்து வெறும் வட இந்திய மக்களின் ஓட்டுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு, பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பி.ஜே.பி-யோடு கூட்டணியில் உள்ளவர்கள் நாங்கள் வெற்றிபெற்றால் நிறைவேற்றுவோம் எனச் சொல்கிற வாக்குறுதிகள்கூட பி.ஜே.பியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை.

நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசால் செயல்பட முடியாது என பி.ஜே.பி சொல்கின்ற நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் செயல்படுத்த முற்படுகின்றார். ஆனால் அதற்கு எதிராக பி.ஜே.பி இருக்கிறது. சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ளனர். பாபர் மசூதி சட்டப்படி, இடிக்கப்பட்டால்தான் சட்டத்திற்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டமுடியும். பாபர் மசூதி இடிந்த வழக்கில் அத்வானி உட்பட 68 பேரை குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுத்தபாடில்லை. தென் இந்தியாவில் பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை எடுபடாது” என்றார்.

தி.மு.க. செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் சரவணன், ``பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் விவாதிக்கக் கூடிய அளவிற்கான எந்தச் சிறப்பு அம்சங்களும் இல்லை. கடந்த 2014-ல் வெளியான தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த பெருவாரியான வாக்குறுதிகளைத்தான், இப்போதைய தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளனர். தமிழக மக்களின் கோரிக்கைகளாக உள்ள நீட் குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. தமிழகத்தில் ஏற்கெனவே முப்பது மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், இப்போதுதான் இந்தியா முழுக்க 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என பி.ஜே.பி. குறிப்பிட்டுள்ளது. பண மதிப்பிழப்பை தங்களுடைய வெற்றி எனச் சொன்ன மோடி, அதை ஏன் இந்தத் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தவில்லை. பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை என்பது எதற்கும் உதவாத வெற்று ஆவணம் அவ்வளவுதான். இதைத் தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார்.

பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கை மக்களிடையே எடுபடுமா என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியவரும்.