Published:Updated:

காஷ்மீரிகள் இந்தியாவின் செல்லக்குழந்தைகள்... எப்படி? 

எம்.குமரேசன்
காஷ்மீரிகள் இந்தியாவின் செல்லக்குழந்தைகள்... எப்படி? 
காஷ்மீரிகள் இந்தியாவின் செல்லக்குழந்தைகள்... எப்படி? 

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, காஷ்மீர் மாநிலத்துக்கு என்று தனி பிரதமர் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.  இதுபோன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தால், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்து சட்டத்தை (370 , 35 ஏ) நீக்கிவிடுவோம் என்று ஆளும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.  இந்தச் சட்டத்தை நீக்குவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். இது தவிர, இந்தியாவின் ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்க வேண்டும். அப்படியென்றால்,  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்தால் மட்டுமே இது சாத்தியம். 

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவை காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்தச் சட்டத்தினால், காஷ்மீரிகள்தான் இந்தியாவின் செல்லக் குழந்தைகள் ஆகிறார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டபோது, மன்னர் ஹரிசிங், தன் மக்களின் நலன் கருதி பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இந்து மன்னராக இருந்தாலும் தன் மக்கள்மீது ஹரிசிங் அளவற்ற பிரியம் கொண்டிருந்தார். நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒப்புக்கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். பாகிஸ்தான், காஷ்மீரைக் கைப்பற்ற துடித்துக்கொண்டிருந்த காரணத்தினால், இந்தியத் தலைவர்கள் காஷ்மீருக்காக சிறப்பு அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டார்கள். இந்தச் சட்டம், காஷ்மீர் மக்களுக்கு அளிக்கும் சிறப்பு உரிமைகளைப் பார்க்கலாம்...

இந்தியாவில், எங்கு வேண்டுமானாலும் காஷ்மீர் மக்கள் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பொருந்தாது.

காஷ்மீர் பெண்கள், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்தால், காஷ்மீரில் நிலம் வாங்கும் உரிமையை இழக்கிறார்கள். அதே வேளை, ஆண்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்களை மணம் புரிந்தால், அங்கே நிலம் வாங்க உரிமை உண்டு. 

அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தர குடியேறிகளுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது. 

இப்படி இந்தியாவில் சிறப்பு அந்தஸ்துடன் இருக்கும் காஷ்மீருக்கு, தனிப் பிரதமர் வேண்டுமென்று உமர் அப்துல்லா கோரியதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதையடுத்து,  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சிறப்பு அந்தஸ்தை நீக்கிவிடுவதாக  எச்சரித்துள்ளார். ராஜ்நாத் சிங்கின் இந்தப் பேச்சுக்கு, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'நெருப்புடன் விளையாட வேண்டாம்' என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார். 

இதற்கிடையே , டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில், 'தேசிய மாநாட்டு கட்சித் தலைவர்கள் பாருக் அப்துல்லா, உமர் அப்துல்லா, காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தேர்தலில் போட்டியிட இவர்கள் மூன்று பேருக்கும் தடை விதிக்க, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் ' என்று கூறப்பட்டுள்ளது. 

இதற்குப் பதில் அளித்துள்ள மெகபூபா முப்தி , 'நீதிமன்றத்துக்குச் சென்று ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள். 370 சட்டத்தை நீக்கிப்பாருங்கள் அதன்பிறகு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் எந்த விதத்திலும் காஷ்மீருக்குப் பொருந்தாது'' என்று தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் அரசியலமைப்புச் சட்டம் 370-ஐ நீக்கப்போவதாகக் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தேர்தல் அறிக்கை வாக்குறுதியைவைத்து காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியுடன் ட்விட்டரில் மோதலில் ஈடுபட்டார். முடிவில், மெகபூபா முப்தி கௌதம் கம்பீரை பிளாக் செய்துவிட்டார்.