Published:Updated:

'தட்ஸ்ஆல் யுவர் ஆனர்..!' - சீமானுடன் ஒருநாள் பயணம்

கோடை வெயிலின் அனலையும் தாண்டி தமிழகத் தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சி தலைவர்களும் அவர்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றி வருகின்றனர். பிரசாரத்தின்போது ஒருவரை ஒருவர் விமர்சித்து பேசும் வார்த்தைகள் மைக்கில் பட்டு வெயிலின் வெப்பத்தைவிட சூடாகத் தெறிக்கிறது. நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரசாரத்தில் பி.ஜே.பி, காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க என அனைத்து கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். இந்த நிலையில் அவர் பிரசார பயணத்தை பற்றி அறிய சீமானுடன் ஒரு நாள் பயணம் சென்றோம்.

'தட்ஸ்ஆல் யுவர் ஆனர்..!' - சீமானுடன் ஒருநாள் பயணம்
'தட்ஸ்ஆல் யுவர் ஆனர்..!' - சீமானுடன் ஒருநாள் பயணம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஒருநாள் பயணம் மேற்கொண்டு, அவரின் பிரசாரம், அணுகுமுறையைப் பார்த்து வந்தோம்.

கோடை வெயிலின் அனலையும் தாண்டி தமிழக தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு மாநிலம் முழுவதும் சூறாவளியாய் சுழன்று, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துப் பேசும் வார்த்தைகள் ஒலிபெருக்கியில் பட்டு வெயிலின் தாக்கத்தைவிடவும் சூடாகத் தெறிக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து செய்யும் பிரசாரத்தில் பி.ஜே.பி, காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க என அனைத்துக் கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார். இந்த நிலையில் சீமான் மேற்கொண்டுள்ள பிரசாரப் பயணத்தில் ஒருநாள் நாம் அவருடன் சென்றோம்.

சீமானைப் பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் என பயணத்திட்டத்தை வகுத்து பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார். 'புதியதொரு தேசம் செய்வோம்', 'உழவுத் தொழிலை மீட்போம்; உலகைக் காப்போம்' என்ற அடைமொழியோடு திருவள்ளுவர், நம்மாழ்வார், பிரபாகரன், சீமான் ஆகியோரின் படங்களுடன் நாம் தமிழர் கட்சியின் சின்னமான 'கரும்பு விவசாயி' போட்டோவும் அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நடைமுறையைத்தான் அந்தக் கட்சியினர் பின்பற்றுகின்றனர். 

புதுச்சேரியில் தன் முதல் பிரசாரத்தைத் தொடங்கிய சீமான், பல மாவட்டங்களுக்கும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். சிவகங்கையிலிருந்து தஞ்சாவூரில் வந்து ஓய்வெடுத்தவர், காலை 9 மணி அளவில் எழுந்து டீயை ருசித்துக்கொண்டே செய்தித் தாள்களைப் படித்தார். தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்த சீமான், குளித்து முடித்ததும் சின்ன வெங்காயத்துடன் கம்பங்கூழை காலை உணவாகப் பருகினார்.

காலை நேரத்தில் சீமானைப் பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மாலை 4 மணிக்கு வருமாறு அவரின் உதவியாளர் சிவக்குமார் சொல்லிவிடுகிறார். பிறகு மதியம் 3 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு, கட்சி நிர்வாகி வீட்டிலிருந்து சமைத்துக் கொண்டுவரப்பட்ட அரிசி சாதம், நாட்டுக்கோழி குழம்பு, மீன் வறுவல் ஆகியவற்றை ஒருகை பார்த்தார்.  'தஞ்சாவூர் சாப்பாட்டுக்கென்று தனியான ஒரு சுவை இருக்கு, எல்லாமே அருமை' என உணவு கொண்டு வந்தவரை சீமான் பாராட்ட அவர் முகத்தில் புன்னகை. அதுவரை எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக இருந்த அந்த நட்சத்திர ஹோட்டல் மதியம் 3 மணிக்குப் பிறகு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருகையால் பரபரப்படைந்தது.

பச்சைத் துண்டில் முண்டாசு கட்டியும் கரும்பு விவசாயி அச்சிடப்பட்ட டீ ஷர்ட் அணிந்தும் வந்திருந்த தொண்டர்கள் ஒருவருக்கொருவர்,  சீமான் விரல்களை மடக்கி கையை உயர்த்தி காண்பிப்பதுபோல் காட்டி வரவேற்றனர். மணி 5-ஐ நெருங்கியதும் 'அண்ணன் என்ன இன்னும் வெளியே வரலை?' என ஆர்வமாக விசாரித்தவர்களிடம், 'சேனலுக்குப் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதோ வந்துவிடுவார்' என்றார் நிர்வாகி ஒருவர். அறைக்கு வெளியே பெரும் கூட்டம் காத்திருந்தது. இளைஞர் ஒருவர், 'சிங்கப்பூரிலிருந்து அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறேன், சந்திப்பாரா?' என செக்யூரிட்டியிடம் கேட்க, 'நிச்சயம் பார்ப்பார்' என்றார். இதேபோல் கையில் குழந்தையுடன் குடும்பத்தோடு பார்க்க வந்திருந்த பெண், சோழர்கால வரலாற்றுப் புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்திருந்த ராஜேஷ் கண்ணா எனப் பலரும் சீமானைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். 

இதற்கிடையில், சீமானின் காரைச் சுத்தம் செய்து ஏசி-யைப் பரவவிட்டு ரெடியாக இருந்தார் டிரைவர். அறைக்கதவு திறந்தது. வெளியே நின்றவர்கள் முண்டியடித்தனர். "அண்ணே, 12 மணியிலிருந்து கையில் குழந்தையுடன் உங்களைப் பார்ப்பதற்கு நிற்கிறாங்க" என்றதும் அவர்களைச் சந்தித்து குழந்தையைத் தூக்கிக் கொஞ்சி முத்தம் கொடுத்தார் சீமான். அப்போது போட்டோகிராபர் ஒன்ஸ்மோர் சொல்ல "தம்பி, அது குழந்தைப்பா போதும்" என அன்பாகக் கண்டித்துவிட்டு அவர்கள் கொண்டு வந்த பிரபாகரன் படத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். பிறகு பெரிய கூட்டம் முண்டியடித்தது. யாரையும் பார்க்கவில்லை. "எல்லோரும் கூட்டம் நடக்கிற இடத்துக்குப் போங்க" என்றார். அதைக் கேட்காமல் எல்லோரும் முண்டியடிக்கவே, "என்ன இப்படிச் செய்றீங்க" என தொண்டர்களைப் பார்த்து கேட்டுவிட்டு, அவர்களை நகரச் சொன்னார்.

ஹோட்டலின் லிப்டில் வராமல் மாடிப்படிகள் வழியே கீழே வந்த சீமான், நேராகக் கூட்டம் நடக்கும் இடத்துக்குச் சென்றார். காருக்கு முன்னே 20-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்திலும் பின்னே ஐந்துக்கும் மேற்பட்ட கார்களும் வந்தன. கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்ததும் உற்சாகமாகச் சத்தம் எழுப்பி சீமானை அங்கிருந்த தொண்டர்கள் வரவேற்றனர். மேடையில் திலீபன் என்பவர் பேசிக்கொண்டிருக்க, 'நீ பேசு' என சைகையால் காட்டிவிட்டு பார்வையாளர்கள் அமரும் பகுதியில் அமர்ந்து அவருடைய பேச்சைக் கேட்டார். 'நோட்டாவுக்குப் போட்டாலும் போடுவோம்; ஆட்டோவுக்குப் போட மாட்டோம்' எனப் பேசியதைக் கைதட்டி ரசித்தார். அழுக்கு, வேட்டி சட்டையில் இருந்த ஒருவர், "நாடே என்னைப் போலத்தான் இருக்கு. நீங்கதான் வெள்ளையா மாத்தணும்" எனச் சீமானின் கைகளைப் பற்றிக்கொண்டு சொல்ல, அவரின் கைகளை முகத்தில் ஒற்றிக்கொண்டார்.

பின்னர், மேடையேறிய சீமான் முன்னிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். அவர் பேசத் தொடங்கியதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கைகளைத் தட்டினர். அவர், "எத்தனை தேர்தல் வந்திருக்கு. ஆனாலும் எந்த மாறுதலும் வரவில்லை. நாம் தமிழர் கட்சி மாற்று அரசியலை முன்னெடுத்து நிற்கிறது. ஒரு நாள் பெரும் புரட்சியை உண்டாக்கும். எல்லோரும் பணத்தை முன்வைத்து தேர்தலில் நிற்க, உயர்ந்த கருத்தை வைத்து களம் காண்கிறோம். உலகத்துக்கே சோறு போட்ட தஞ்சை பூமியில் நிற்கிறோம். சோழப் பேரரசர்கள், உலகின் பல நாடுகளை வென்று புலிக் கொடியை பறக்கவிட்டவர்கள். தமிழனின் பரம்பரை கொடிதான் நம் கொடியும். கொஞ்ச நேரம் ஓலைக் குடிசைக்குச் சென்று, அங்கு வாழும் ஏழைகளைப் பார்ப்பதால் ராகுல் காந்தியை மிகப்பெரிய தலைவராகப் பேசுகிறார்கள். வாழ்நாள் முழுவதும் அந்தக் குடிசையிலேயே வாழ்கிறவன், எவ்வளவு பெரிய தலைவன். அவர்கள் ஏழைகள் ஆனதே காங்கிரஸ் ஆட்சியில்தான். டெல்லியில் எலியைக் கடித்து, பாம்பைக் கடித்து, அரை நிர்வாணம் என பலவகையில் போராடிய போதிலும், விவசாயிகளை ஒருமுறைகூடச் சந்தித்து பிரதமர் மோடி பேசவில்லை. தேர்தல் வருகிறது என்றதும் விவசாயிகளுக்கு ரூ 6,000 தருவதாக அறிவிக்கிறார். வாக்குகளுக்கு மோடி கொடுக்கும் காசுதானே தவிர, விவசாயிகளுக்கான  நலத்திட்டமாகாது. நயவஞ்சகத் திட்டம்" என மோடியையும் ராகுல் காந்தியையும் சரமாரியாகத் தாக்கிப் பேசினார். 

மேலும், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லாத மோடி, ராகுல் இருவரும் தேர்தல் வந்ததும் தமிழகத்துக்கு வருகிறார்கள். தன்மானம் இருந்தால் தமிழர்களின் நிலத்துக்கு வரக்கூடாது. தட்ஸ் ஆல் யுவர் ஆனர். ஒருவன், 'ரூ. 400 கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் இருந்து சாப்பிடலாம்' என விளம்பரம் கொடுக்கிறான். அதைக்கேட்ட அனைவரும் பணத்தை எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்தவனிடம் செல்கிறார்கள். அவர், 'வாங்க சார் வெறும் 400 ரூபாய்தான் இந்த நாற்காலி. வாழ் நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்' என நாற்காலியை விற்பனை செய்துகொண்டிருக்கிறான். இதையேதான் மோடி கோஷ்டியும் ராகுல் கோஷ்டியும் செய்கிறது. மக்களின் தற்காலிகப் பசியைப் போக்குபவன் தலைவன் இல்லை. நிரந்தரப் பசியைப் போக்குபவன்தான் தலைவன்" என பேசியதை கூட்டத்தினர் ரசித்துக் கேட்டனர்.

"சிஸ்டத்துக்குள் வேலைசெய்ய வந்தவர்கள் நாங்கள் இல்லை. ஒருமுறை எங்களை வெற்றி பெற வைத்து, டெல்லிக்கு அனுப்பி வையுங்கள். மத்திய அரசின் கொள்கையையே மாற்றிவிடுவோம்" எனப் பேசி முடித்தார் சீமான். கூட்டம் முடிந்த பிறகு,  நாற்காலியில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் அனைவரும் தாங்களாகவே நாற்காலியை அடுக்கிவிட்டுச் சென்றனர். கூட்டத்தினர் மத்தியில் உண்டியல் குலுக்கி நிதி திரட்டப்பட்டது. அதில் கிடைக்கும் பணத்தை அடுத்த கூட்டத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்.

'விவசாயிகளையும் விவசாயத்தையும் பெருக்குவோம்' என்பது சீமானின் முக்கிய வாக்குறுதியாக இருக்கிறது. போதிய பணம் இல்லாதது, நேரம் இருந்தும் தொகுதியில் சீமான் வலம் வராதது உள்ளிட்டவை அவரின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் கூட்டத்தை முடித்துக்கொண்டு திருவாரூர் பொதுக்கூட்டத்துகுக் கிளம்பினார். திருவாரூர் பொதுக்கூட்டத்தை இரவு 10 மணிக்குள் முடித்துவிட்டு, இரவு வேளாங்கண்ணியில் ஒரு ஹோட்டலில் தங்கினார். அத்துடன் சீமானின் ஒருநாள் பிரசாரம் நிறைவடைந்தது.