Published:Updated:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 'எம்.ஜி.ஆர்' பெயர் : மக்கள் என்ன சொல்றாங்க?

1873-ம் ஆண்டு முதல் சென்னையின் அடையாளமாகிப்போன இந்தக் கட்டடம், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற பெயரிலிருந்து 'சென்னை சென்ட்ரல்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 'எம்.ஜி.ஆர்' பெயர் : மக்கள் என்ன சொல்றாங்க?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 'எம்.ஜி.ஆர்' பெயர் : மக்கள் என்ன சொல்றாங்க?

சென்னையின் அடையாளங்களில் ஒன்று அந்தச் சிவப்பு வெள்ளைக் கட்டடம். 1873-ம் ஆண்டு முதல் சென்னையின் அடையாளமாகிப்போன இந்தக் கட்டடம், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'மெட்ராஸ் சென்ட்ரல்' என்ற பெயரிலிருந்து 'சென்னை சென்ட்ரல்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னைக்கு வரும் வெளிமாநிலத்தவர்கள், முதலில் வரும் இடமும் இதுதான். அதனால் சென்னை சென்ட்ரல் என்று சொல்ல அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. நூற்றாண்டு கண்ட இந்தக் கட்டடம், தற்போது அந்த அடையாளத்தை இழந்து நிற்கிறது. 

தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடி சென்னை வந்தபோது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, 'தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்' பெயர் வைக்கப்படும்' என்று அறிவித்தார். இதையடுத்து, தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் குறித்து வெளியிடப்பட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, `புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ``புதிதாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயரில், சென்னை என்று ஊரின் அடையாளமே இல்லை. இதனால் வெளிமாநில மக்கள் குழப்பத்துக்கு ஆளாகிறார்கள். அதோடு இந்தப் பெயர், மக்கள் சொல்லும் அளவுக்கு அவ்வளவு எளிதாகவும் இல்லை" என்கிற குற்றச்சாட்டுகளை ரயில் பயணிகள் முன்வைக்கும் அதேவேளையில், ``ஊர்ப் பெயர் இல்லாதது குறித்து எந்த அரசியல் தலைவர்களும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை. அதேபோல், தெற்கு ரயில்வேயும் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை" என்றும் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் அதேநேரத்தில், அதற்குள் அவசர அவசரமாகப் பெயர் பலகைகளை மாற்றிவிட்டது, ரயில்வே நிர்வாகம். 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டபிறகு, அங்கு சென்று மக்களின் கருத்துகளைப் பதிவு செய்தோம்.

ரமேஷ், ரயில் நிலைய வியாபாரி:  ``பெயர் மாற்றம் செய்தபோது ஊர்ப் பெயரைக்கூடக் கவனிக்கமாட்டாங்களா? பெயர் மாற்றி இருப்பது  நிறைய வெளி மாநில மக்களுக்குத் தெரியவில்லை. ரயிலிலும் பெயர் மாற்றி இருப்பதால், எந்த ரயிலில் ஏற வேண்டும் என்று அவர்கள் குழம்பி நிற்கிறார்கள்''.

லெட்சுமி, பழ வியாபாரி :  ``இவங்க என்ன பேரு மாத்துனாலும், எங்களுக்கு இது சென்ட்ரல் ஸ்டேஷன்தான். மக்களுக்கு ஆட்சி நடத்துறாங்களா, இல்ல பேரு மாத்த ஆட்சி நடத்துறாங்களானே தெரியலை.'' 

செந்தில் குமார், பயணி: ``இந்தப்பேர சொல்றதுக்கே ரொம்ப நேரம் ஆகுது. டிக்கெட் எடுக்குறப்போ 'சென்ட்ரல்'னு சொல்லதான் வருது. சுருக்கமா 'எம்.ஜி.ஆர்' ஸ்டேஷன்னு சொன்னாலும் மனசுல ஒட்டவேயில்லை. இதுக்கு பழைய பேரே இருந்திருக்கலாம். போர்டுல வேணும்னா பேரு மாறும், இத்தனை வருஷமா நிலைச்சி நின்னது மாறாது.''

பொதுமக்களின் கருத்து இப்படியாக இருக்க., சமூக ஊடகங்களிலும் பெயர் மாற்றம் செய்ததற்கு அதிருப்தியைப் பதிவுசெய்து வருகிறார்கள் பொதுமக்கள். ``புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று மாற்றப்பட்டுள்ளது. இவ்வளவு நீளமான பெயரைச் சொல்லி கவுண்டரில் ஒருவர் டிக்கெட் கேட்க முடியுமா? அதற்குள் அவர் செல்ல வேண்டிய ரயிலே கிளம்பிவிடுமே'' என்ற கிண்டல் பதிவுகள்தான் சமூக வலைதளங்களில் அதிகம் காணப்படுகின்றன.

இதுகுறித்து சமூக ஊடகங்களைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்...

ராஜராஜன்:  ``கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கும் இதுபோன்று தேர்தல் நேரத்தில்தான் பெயர் மாற்றம் செய்தார்கள். தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் இதையேதான் செய்திருக்கிறார்கள். இதுபோன்ற பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் எப்போதும் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. சம்பந்தமே இல்லாமல் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைத்திருக்கிறார்கள். இந்திய, இந்து தொடர்பு எம்.ஜி.ஆருக்கு இருப்பதனால், அவரைத் தங்கள் சார்பாகக் காட்டிக்கொள்ள சென்ட்ரலுக்கு அவர் பெயர் வைத்திருக்கிறார்கள். இது தேவையில்லாத ஒன்றே. இதனால் மக்களுக்கு எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. மக்கள் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆருக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு துறையில், அவர் பெயர் வைக்கப்படும்போது, சென்ட்ரல் ஜெயிலுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயர் வைப்பார்களா?''


சோனியா அருண்குமார்: ``தமிழகத்தில் கொண்டாடப்பட வேண்டிய எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிக்குப் பரிசாக இந்தப் பெயர்மாற்றம் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. ரயில்வே வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில், ரயில் நிலையத்துக்குப் பெயர் மாற்றம் செய்தால், என்ன முன்னேற்றம் நடந்திடப்போகிறது? ரயில்வே துறையைப் பொறுத்தவரை தமிழகத்தில் ஆக்கபூர்வமாகச் செய்ய நிறைய இருக்கிறது. அதையெல்லாம் செய்யாமல், தற்போதைய சூழலில் யாருக்கும் தேவையில்லாததைச் செய்கிறது இந்த அரசு''.

ஸ்வரா வைத்தி: ``புதிய திட்டங்களுக்கு இதுபோன்று பெயர் வைப்பதைவிட்டு, ஏற்கெனவே மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பெயரை மாற்றிவைப்பது தேவையில்லாதது. சென்னை சென்ட்ரல் என்ற பெயர்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும். தற்போதைய பெயரை யாரும் பயன்படுத்துவார்களா என்று தெரியவில்லை. தமிழகத்தில் ஏற்கெனவே பிரமாண்டமாக கன்னிமாரா நூலகம் இருக்கிறது. அப்போதைய அரசு நினைத்திருந்தால், அதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பெயரை மாற்றி இருக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல், புதிதாக ஒரு நூலகத்தை பிரமாண்டமாகக் கட்டி, அதற்கு அண்ணாவின் பெயரை வைத்தார்கள். இதுபோல் ஏதாவது செய்யலாமே? அதைவிட்டுவிட்டு, தேவையே இல்லாமல் சென்ட்ரலுக்கு பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.''