Published:Updated:

பெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா'!  - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள் 

பெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா'!  - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள் 
பெங்களூரில் முடங்கிய தினகரனின் `கஜானா'!  - கதிகலக்கும் கடைசிநேரக் காட்சிகள் 

` கிருஷ்ணகுமார் எஸ்.பிக்கு நீங்கள்தான் 2 கோடி ரூபாயை கொடுத்தீர்கள். தனி பிளாட் எடுத்து சசிகலாவை இங்கு தங்க வைத்தீர்கள், அந்த பிளாட்டுக்கு வாடகை கொடுக்குகிறீர்களா அல்லது சொந்தமாக வாங்கிவிட்டீர்களா..' என்றெல்லாம் கேள்வி கேட்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக்கட்ட பிரசாரத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தனிப்பட்ட விமர்சனங்கள், பணப்பட்டுவாடா என அரசியல் களம் தகித்தாலும், அ.ம.மு.க கூடாரம் முடங்கிப் போயுள்ளது. ` சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் விசாரணையில் விவேக் ஜெயராமனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் செலவுகளுக்குப் பணம் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்' என்கின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் அவருடன் இளவரசியும் சுதாகரனும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். இதற்கிடையில், சிறைத்துறையின் டி.ஐ.ஜியாகப் பொறுப்பேற்ற ரூபா, சிறைவிதிகளை மீறி சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியதாக சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயணாவுக்கு ரூ.2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சிறையில் சசிகலா வலம் வரும் காட்சிகளும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. அரசியல்ரீதியாகவும் இந்த விவகாரம் பூதாகரமானதால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை அமைத்தது கர்நாடக அரசு. இந்தக் குழு கடந்தாண்டு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. 

அந்த அறிக்கையில், ' சிறையில் சசிகலா சிறப்புச் சலுகை அனுபவித்தது உண்மைதான். டி.ஐ.ஜி ரூபாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நேரில் விசாரித்து உறுதிப்படுத்தினோம். சிறைத்துறை அதிகாரிகளுக்கு வெளியில் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தைக் கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அ.ம.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, இரட்டை இலைக்கு லஞ்சம் பேசிய வழக்கில் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில்தான், இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனைக் கடந்த 10 நாள்களாக விசாரணை செய்து வருகிறது கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவு. 

சசிகலா உறவினர்களிடம் பேசினோம். `` அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களால் அ.தி.மு.க தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். ஏறக்குறைய 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வின் வெற்றிவாய்ப்புக்குத் தினகரனால் பாதிப்பு ஏற்படப் போகிறது. அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் தயாரானபோது, சசிகலாவிடம் நேரில் காண்பித்து ஒப்புதலைப் பெற்றார் தினகரன். தேர்தல் செலவுக்காக சசிகலா தரப்பில் இருந்து தொகுதிக்குத் தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இந்தப் பணத்தைக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் விவேக் ஜெயராமன் இருக்கிறார். அவரிடம்தான் மொத்த கஜானா சாவியும் இருக்கிறது. பணத்தை நேரடியாகக் கொடுக்க முடியாது என்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் இதற்கென தனக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆரம்பத்தில் இந்த விநியோகம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. இதை அறிந்த சிலர், சிறைத்துறைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விவேக்கை நெருக்குவதற்குத் தூண்டியுள்ளனர். இதனால் தினம்தினம் கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவின் நெருக்குதல்களை எதிர்கொண்டு வருகிறார்" என விவரித்தவர்கள், 

`` டி.ஐ.ஜி ரூபா கொடுத்த புகாரின்பேரில் தினமும் ஆஜராகுமாறு விவேக்கை அழைக்கின்றனர். விசாரணையின்போது, ` கிருஷ்ணகுமார் எஸ்.பி-க்கு நீங்கள்தான் 2 கோடி ரூபாயைக் கொடுத்தீர்கள். தனி பிளாட் எடுத்து சசிகலாவை இங்கு தங்க வைத்தீர்கள், அந்த பிளாட்டுக்கு வாடகை கொடுக்குகிறீர்களா அல்லது சொந்தமாக வாங்கிவிட்டீர்களா... அந்த பிளாட்டில் மாலை நேரத்தில் சசிகலா வந்து தங்குவதாகச் சொல்கிறார்களே..' என்றெல்லாம் கேள்வி கேட்கின்றனர். இதற்குச் சரியான பதில்களைக் கொடுத்தாலும் மீண்டும் மீண்டும் இதே கேள்விகளைக் கேட்கின்றனர். சிறையில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலா வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், அதைக் கெடுக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்துப் பணப் போக்குவரத்துகளும் விவேக் மூலமாக நடப்பதால், கடைசிநேர பிரசாரத்துக்குப் பணம் கொடுக்கவிடாமல் அவரை முடக்கிவிட வேண்டும் எனச் சிலர் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிந்து சென்னை வந்தாலும், `நாளைக்கு வந்துவிடுங்கள்' என செல்போனில் அழைத்துச் சொல்கின்றனர். 

ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 15 கோடி ரூபாய் வரையில் கொடுப்பதாக உறுதி கொடுத்திருந்தார் தினகரன். இதில், ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே சரியான விநியோகம் நடந்துள்ளது. மற்ற தொகுதிகளுக்குப் பணத்தை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் நடக்கும் விசாரணையில் செல்போனை அணைத்து வைத்துவிடுகிறார் விவேக். இதனால் அவரை யாரும் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பதற்றத்துடனே வைத்திருக்கின்றனர். இதன் தொடர்ச்சியாக கைது வரையில் நடவடிக்கை பாயலாம் என இளவரசி தரப்பினர் அச்சப்படுகின்றனர். அ.ம.மு.க வேட்பாளர்களுக்குக் கடைசிநேரத்தில் நெருக்கடி கொடுப்பதுதான் சிலரது எண்ணம். அதற்குச் சிறைத்துறை ஊழல் வழக்கைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்த விசாரணையை தள்ளி வைக்குமாறு குமாரசாமி தரப்பிலும் சசிகலாவுக்கு வேண்டியவர்கள் அணுகியுள்ளனர். அங்கிருந்து பாசிட்டிவ்வாக எந்தப் பதிலும் வராததால், தினசரி விசாரணையை எதிர்கொண்டு வருகிறார் விவேக்" என்கின்றனர் ஆதங்கத்துடன். 

அடுத்த கட்டுரைக்கு