Published:Updated:

``இங்கிருக்கும் ஒருவர் டெல்லிக்கு விரட்டப்படுவார்” - புதுச்சேரி பிரசாரத்தில் முழங்கிய ஸ்டாலின்

``இங்கிருக்கும் ஒருவர் டெல்லிக்கு விரட்டப்படுவார்” - புதுச்சேரி பிரசாரத்தில் முழங்கிய ஸ்டாலின்
``இங்கிருக்கும் ஒருவர் டெல்லிக்கு விரட்டப்படுவார்” - புதுச்சேரி பிரசாரத்தில் முழங்கிய ஸ்டாலின்

``இங்கிருக்கும் ஒருவர் டெல்லிக்கு விரட்டப்படுவார்” எனப் புதுச்சேரி பிரசாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலின் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், ``தலைவர் கலைஞர் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. அண்ணாவுக்குப் பக்கத்தில் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் இல்லையென்றாலும், அவருடைய உணர்வுகள், லட்சியங்கள் எப்போதும் நம்முடன் இருந்துகொண்டுதான் இருக்கிறது. பகைக் கூட்டத்தை கிழித்தெறியத்தான் இங்கு நாம் கூடியிருக்கிறோம். இதே புதுச்சேரியில்தான் திராவிட கழக மாநாட்டில் சிவகுரு வேடத்தில் கலைஞர் நாடகத்தை அரங்கேற்றினார்.

ஆனால், அந்த நாடகத்தில் நடித்ததற்காக ஒரு சில கயவர்கள் கலைஞரை  ஓட ஓட விரட்டி அடித்தார்கள். அப்போது புதுச்சேரி மக்களும் தந்தை பெரியாரும் கலைஞருக்கு ஆதரவு அளித்தனர். கலைஞரையும், தந்தை பெரியாரையும் இணைத்த ஊர் புதுச்சேரி. கலைஞர் கருணாநிதி ஒருபோதும் புதுச்சேரியை கைவிட்டது கிடையாது. தற்போது சேர்ந்துள்ள கூட்டணி 40 ஆண்டுகளுக்கு முன்பே சேர்ந்த கூட்டணி.  `கூட்டணி தர்மத்தை குழிதோண்டிப் புதைத்தவர்’ என என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சித்திருக்கிறார். ஜெயலலிதாவை எதிர்த்தவரோடுதான் தற்போது அ.தி.மு.க-வினர் கூட்டணி வைத்துள்ளனர். வன்முறைக் கட்சி என்று பா.ம.க-வை சட்டப்பேரவையில் விமர்சித்துப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. 

அ.தி.மு.கவைப் பற்றி தி.மு.க செய்யும் விமர்சனம் தரம் தாழ்ந்ததாக இருக்காது. ஆனால் அ.தி.மு.க அரசையும், எடப்பாடி பழனிசாமியையும் தரம் தாழ்ந்து பேசியவர் ராமதாஸ். ஆனால், அவர்களோடுதான் அ.தி.மு.க தற்போது கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பொல்லாத ஆட்சிக்கு ஒரே சாட்சி பொள்ளாச்சி சம்பவம். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறியது பா.ஜ.க. ஆனால், ஒருவருக்குக்கூட வேலை கொடுக்கவில்லை. வங்கிக் கணக்கில் 15 லட்சம் போடப்படும் என்று சொன்னார்கள். ஆனால் 15 பைசாகூட போடவில்லை. பா.ஜ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே வடிவேல் கூறுவது போலத்தான். வரும்... ஆனா வராது.

பா.ஜ.க தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை கனவு காணும் தேர்தல் அறிக்கை. பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் பலகோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மோடி வெளிநாடு வாழ் பிரதமர். கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி மோடி காலியாகிவிடுவார். மோடியை மோசடி என்று கூப்பிடுங்கள். மோடியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்து கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற என்.ஆர்.காங்கிரஸ் எம்.பி-யால் ஏன் மாநில அந்தஸ்து வாங்கித் தர முடியவில்லை. புதுச்சேரிக்கு முதன் முதலில் மாநில அந்தஸ்து கேட்டது தி.மு.கதான். இந்தியாவுக்கு பிரதமர் மோடி, தமிழகத்துக்கு எடப்பாடி, புதுச்சேரிக்கு கிரண் பேடி என மக்களை ஏமாற்ற மூன்று பேர் இருக்கின்றனர். அதேபோல நாட்டை நாசமாக்குவதற்கென்றே ஆளுநர்கள் உள்ளனர்.

தமிழகத்தின் ஆளுநர் தனியாக ஒரு ஆட்சி செய்துகொண்டிருக்கிறார். அதைத் தட்டிக் கேட்க முதல்வர் எடப்பாடிக்கு தைரியம் இல்லை. ஆனால், புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியின் அராஜகத்தை எதிர்த்து முதல்வர் நாராயணசாமி போராடிக்கொண்டிருக்கிறார். ராகுல்காந்தியே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர். நிச்சயம் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும். கிரண்பேடியின் ஆணவத்தை அடக்க, அவரை விரட்ட அனைவரும் கைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.