Published:Updated:

`இப்படியொரு பரிதாபத் தேர்தலைப் பார்த்ததில்லை!' - கரன்ஸி பஞ்சத்தால் பரிதவிக்கும் தி.மு.க நிர்வாகிகள்

`தொகுதி நிலவரம் நன்றாக இருக்கிறது' என்ற எண்ணத்தில் அறிவாலய நிர்வாகிகள் உள்ளனர். தலைமையில் இருந்து கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பணமும் முறையாகச் சென்று சேரவில்லை. வேட்பாளர்களும் செலவு செய்ய மறுக்கின்றனர். மக்களுக்குப் பணம் கொடுப்பதா... வேண்டாமா என்ற குழப்பத்தில் தலைமை உள்ளது.

`இப்படியொரு பரிதாபத் தேர்தலைப் பார்த்ததில்லை!' - கரன்ஸி பஞ்சத்தால் பரிதவிக்கும் தி.மு.க நிர்வாகிகள்
`இப்படியொரு பரிதாபத் தேர்தலைப் பார்த்ததில்லை!' - கரன்ஸி பஞ்சத்தால் பரிதவிக்கும் தி.மு.க நிர்வாகிகள்

நாடாளுமன்றத் தேர்தல் ப்ளஸ் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்காக அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் தீவிரமாகத் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. ` தலைமையில் இருந்தும் வேட்பாளர்கள் தரப்பில் இருந்தும் பூத் கமிட்டியின் செலவுகளுக்குக்கூடப் பெரிதாக செலவு செய்யவில்லை. இத்தனை ஆண்டுக்கால தேர்தலில் இப்படியொரு சூழலை எதிர்கொண்டதில்லை' என வேதனைப்படுகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 

பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரது வருகையால் தமிழக அரசியல் களம் அனல்பரப்பிக் கொண்டிருக்கிறது. இன்று திருப்பரங்குன்றத்திலும் கிருஷ்ணகிரி, தேனி தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார் ராகுல். அதேபோல், தென்தமிழகத்துக்கு மோடி வரவிருப்பதால், உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசியக் கட்சித் தலைவர்களின் வருகை ஒருபுறம் இருந்தாலும் தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் ஒருவருக்கொருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ரமேஷ், சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் ஆகியோரை ஆதரித்துப் பேசிய ஸ்டாலின், ` இந்தத் தேர்தலோடு தி.மு.க காணாமல் போய்விடும் என்று தலைவர் ஒருவர் கூறி வருகிறார். தி.மு.க-வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது. அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோவார்கள். ஆட்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகக் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இருந்தது. ஓர் ஆட்சி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியே உதாரணம். மக்களின் அனுதாபங்களைப் பெறுவதற்காக தன்னை ஏழைத்தாயின் மகன் என்று கூறி நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி' எனக் கொதித்தார் மு.க.ஸ்டாலின். 

`` தலைவர்களின் தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் களவேலை பார்த்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல தொகுதிகளில் பணத்தையே கண்ணில் காட்டாததால் உடன்பிறப்புகள் சோர்ந்து போய் உள்ளனர். வசதி படைத்த வேட்பாளர்களும், தலைமை பணம் கொடுக்கட்டும் என்ற மிதப்பில் உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் அ.தி.மு.க-வுக்கான வாய்ப்புகள் பெருகிக் கொண்டிருக்கின்றன" என வேதனையோடு பேசத் தொடங்கினார் சென்னை மாவட்ட தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், 

`` தி.மு.க போட்டியிடக் கூடிய 20 மக்களவைத் தொகுதிகளிலும் 18 சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் நடந்து வருகிறது. தலைமையில் இருந்து பூத் கமிட்டிகளுக்கு இரண்டு கட்டமாகப் பணத்தைக் கொடுத்துள்ளனர். தலா 5,000 ரூபாய் எனக் கொடுக்கப்பட்ட பணத்தில் இருந்து 3,000, 2,000 ரூபாய் என்ற அளவுக்கே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணத்தை வேட்பாளர்கள் தரப்பில் எடுத்துக் கொண்டனர். 8 ஆண்டுகளாகப் பதவியில் இல்லாததால், ` முதலில் நம்மைப் பார்த்துக்கொள்வோம், பிறகு மற்றவர்களுக்குக் கொடுப்போம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதைத் தலைமையும் கண்டுகொள்ளவில்லை. ` தொகுதி நிலவரம் நன்றாக இருக்கிறது' என்ற எண்ணத்தில் அறிவாலய நிர்வாகிகள் உள்ளனர். தலைமையில் இருந்து கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பணமும் முறையாகச் சென்று சேரவில்லை. வேட்பாளர்களும் செலவு செய்ய மறுக்கின்றனர். மக்களுக்குப் பணம் கொடுப்பதா... வேண்டாமா என்ற குழப்பத்தில் தலைமை உள்ளது. கடைசிநேரத்தில் கொடுக்க முடிவு செய்தாலும், வாக்குக்கு 200 ரூபாய் கொடுப்பதே பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துவிட்டோம். பணமே இல்லாமல் களவேலை பார்ப்பது இதுதான் முதல் முறை. வட்டம், மாவட்டம் எனப் பொறுப்பில் இருப்பவர்களும், ஆதரவாளர்களைத் தக்க வைப்பதற்காக சொந்தப் பணத்தை லட்சக்கணக்கில் இறைக்கின்றனர். 

சில தொகுதிகளில் பணபலம் படைத்த வேட்பாளர்கள், ஓரளவுக்கு வாரியிறைக்கின்றனர். பெரும்பாலான தொகுதிகளில் பெயரளவுக்குக் கூட பணத்தைப் பார்க்க முடியவில்லை. இதனால் அ.தி.மு.க கொடுக்கும் பணத்துக்கு விலை போகக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. காலங்காலமாக தி.மு.க மீது பாசம் உள்ளவர்களின் வாக்குகள் மட்டுமே வந்து சேரும். தனியார் தொலைக்காட்சிக்கு ஸ்டாலின் கொடுத்த பேட்டியிலும், ` 35 தொகுதிகளை வென்றுவிடுவோம்' என்றார். அவருக்கே 40 தொகுதிகளில் வெல்வோம் என்ற நம்பிக்கை இல்லாததையே காட்டுவதாகத்தான் நிர்வாகிகள் வேதனைப்படுகின்றனர். சென்னையின் முக்கிய தொகுதிகளில், திராவிடக் கொள்கையைப் பற்றி யாராவது வகுப்பெடுத்தால்கூட, ` பாலிசி எல்லாம் வேண்டாம். ஒன்லி கரன்ஸி' என்ற வார்த்தைகளையே எதிர்கொள்ள முடிகிறது. பணத்தைச் செலவு செய்ய மறுப்பதால், அ.தி.மு.க தரப்போடு இணைந்து உள்ளடி வேலைகளையும் சிலர் மறைமுகமாகச் செய்யத் தொடங்கிவிட்டனர். இதைப் பற்றித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு சென்றும் நோ ரெஸ்பான்ஸ். 

ப்ளஸ்ஸாக வரக் கூடிய தொகுதிகள் எல்லாம் இதுபோன்ற காரணங்களால் மைனஸ் ஆகக் கூடிய வாய்ப்புகள் அதிகம். பொதுக்கூட்டங்களில் மட்டுமே ஸ்டாலின் பேசி வருகிறார். உதயநிதியும் பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கிறார். இவர்கள் இருவரைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியாக யாரும் இல்லை. தொகுதிகளில் இருக்கும் நுட்பமான உள்ளடி வேலைகளால், 12 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பெரிய விஷயமாகிவிடும். 22 சட்டமன்றத் தொகுதிகளில் 7 தொகுதிகளில் மட்டுமே வாய்ப்பு உள்ளது. காரணம், அ.தி.மு.க, அ.ம.மு.க தரப்பில் இருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். குடும்பத்துக்கு இவ்வளவு எனக் கணக்கிட்டு அ.தி.மு.க செலவு செய்கிறது. அவர்கள் முன்னால் தி.மு.க வேட்பாளர்களால் நிற்கவே முடியவில்லை. 

தேர்தலுக்கு இன்னும் 6 நாள்களே எஞ்சியுள்ள நிலையில், வட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு மாவட்டச் செயலாளர்கள் வரையில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். `எப்படியாவது வென்றுவிடுவோம்' எனக் கழக வேட்பாளர்களும் மனக்கோட்டை கட்டுகின்றனர். போதாக்குறைக்கு மாவட்டச் செயலாளர்கள் சிலர், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை வசைபாடும் வேலைகளைச் செய்கின்றனர். அண்மையில், சென்னையில் நடந்த கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்றார். தி.மு.க மா.செ ஒருவரின் செயல்பாடுகளை அவர் நேரிடையாகக் கண்டித்தார். `எல்லாம் கவனிச்சுட்டு வர்றேன். பார்த்து நடந்துக்கங்க தம்பி...!' என மேடை அருகிலேயே எச்சரித்தார். அப்படியும் அந்த மா.செ-வின் செயல்பாடுகள் அத்துமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க-வுக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்கு இதுபோன்ற மாவட்டச் செயலாளர்கள்தான் காரணமாக இருப்பார்கள்" என வேதனையோடு பேசி முடித்தார்.