Published:Updated:

''ராஜராஜ சோழனைத் தொட்டால் ஆபத்தா?'' - அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

''உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப்பெற்ற ஒரு மாளிகை பண்டு இருந்தது உறுதியாகிறது. அது, ராஜராஜனின் சமாதி எனக் கருத வாய்ப்புள்ளது. தொல்லியல் அறிஞர்கள் சேதுராமன், மகாதேவன் போன்றோரும் இதை ராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதுகின்றனர்.''

''ராஜராஜ சோழனைத் தொட்டால் ஆபத்தா?'' - அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!
''ராஜராஜ சோழனைத் தொட்டால் ஆபத்தா?'' - அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

ஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழன் சமாதி இருக்குமிடத்தில், அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணம் அருகிலுள்ள வலங்கைமான் நகரத்தின் அருகே சோழன் மாளிகை என்ற கிராமம் உள்ளது. இங்குதான் சோழர்களின் பழைய அரண்மனை இருந்ததாகவும், பின்னர் வந்த மன்னர்கள் படையெடுப்பின்போது அது அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அருகிலுள்ள உடையாளூர் கிராமத்தில் ராஜராஜன் சமாதி இருக்கிறது. அதன்மேல் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் இருந்து வருகிறது. சில தலைமுறைகளாக, இந்த இடத்தைப் பாதுகாத்து வருகிறது ஒரு குடும்பம். வாழைத்தோப்புக்கு நடுவே வெறும் சிவலிங்கம் மட்டும் இருந்திருக்கிறது. இந்த இடத்தை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் சிலர், அங்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இது ராஜராஜனின் சமாதி என்று முடிவுக்கு வந்துள்ளனர். இதையடுத்து, இந்த சமாதியைப் பார்க்க வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாய்ந்திருந்த லிங்கம் சரிசெய்யப்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி கொட்டகை அமைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அரசு எந்தவித ஆராய்ச்சியும் மேற்கொள்ளாமல் இருந்தது.

இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் ராஜராஜ சோழனின் சமாதி, கேட்பாரற்று பராமரிப்பு இல்லாமல் சிதைந்து கிடக்கிறது. மகாராஷ்ட்ராவில் சத்ரபதி சிவாஜியின் சிலைக்கு ரூ.4,900 கோடி, சர்தார் வல்லபபாய் படேலின் வெண்கலச் சிலையை நிறுவ ரூ.3,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதேபோல் மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலையை இந்தியப் பெருங்கடல் அல்லது வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிறுவ வேண்டும். அவரது சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி, அதை அனைவரும் பார்த்து அறியும்விதமாகச் சுற்றுலாத்தலமாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

அப்போது அரசுத் தரப்பில், ''உடையாளூர் பகுதியில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்டதற்கான முழுமையான ஆதாரம் ஏதும் இல்லை. தொல்லியல்துறை தரப்பில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் புதைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்று நவீன உபகரணங்களைக் கொண்டுதான் ஆய்வு செய்ய வேண்டும்'' என்று விளக்கமளிக்கப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ''அகழ்வாராய்ச்சி செய்யாமல் மேலோட்டமாக அவ்வாறு கூறக்கூடாது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் உயர்மட்டக் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள், உபகரணங்களைக் கொண்டு, ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அகழ்வாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ராஜராஜனைத் தொட்டால் ஆபத்து என்று சிலர் நினைக்கிறார்களா?'' என்று கேள்வியெழுப்பி, இந்த வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

ராஜராஜன் சமாதி குறித்து ஏற்கெனவே ஆராய்ச்சி செய்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன், அதை அறிக்கையாக சமர்ப்பித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறார். இதனடிப்படையில், ராஜராஜன் சோழன் சமாதி இருக்குமிடத்தை குடவாயில் பாலசுப்ரமணியனே அகழ்வாராய்ச்சி செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது. 

இதையடுத்து குடவாயில் பாலசுப்ரமணியனைத் தொடர்புகொண்டு பேசினோம். '''ராஜராஜ சோழ தேவர் எழுந்தருளி நின்ற மாளிகை' என்ற கல்வெட்டு, சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமாதி அருகே கிடைத்திருக்கிறது. அதை அருகிலுள்ள விஷ்ணு கோயில் கட்டுமானத்தில் பயன்படுத்தியுள்ளார்கள். பல கல்வெட்டு அறிஞர்களும் அந்தக் கல்வெட்டை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அந்த இடத்தை ஆராய்ச்சி செய்தேன். இந்தக் கல்வெட்டின் அடிப்படையில், உடையாளூரில் முதலாம் ராஜராஜ சோழனின் திருவுருவம் எழுந்தருளப் பெற்ற ஒரு மாளிகை பண்டு இருந்தது உறுதியாகிறது. அது, ராஜராஜனின் சமாதி என்று கருத வாய்ப்புள்ளது. தொல்லியல் அறிஞர்கள் சேதுராமன், மகாதேவன் போன்றோரும் இதை ராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதுகின்றனர். அங்கிருந்த கல்வெட்டை 1927-ல் இந்திய கல்வெட்டு ஆய்வுத் துறையினரும் படியெடுத்துச் சென்றுள்ளனர். மீண்டும் அந்த இடத்தில் அகழாய்வு செய்தால், நிறைய தகவல்கள் கிடைக்கும்'' என்றார்.