Published:Updated:

'உறியடி 2' பேசிய அரசியலும், தேர்தல் கட்சிகளின் மௌனமும்! #Sterlite

தற்போது நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான தி.மு.க, பி.ஜே.பி ஆகியவற்றின் தேர்தல் வாக்குறுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை.

'உறியடி 2'  பேசிய அரசியலும், தேர்தல் கட்சிகளின் மௌனமும்! #Sterlite
'உறியடி 2' பேசிய அரசியலும், தேர்தல் கட்சிகளின் மௌனமும்! #Sterlite

ஸ்டெர்லைட், போபால் விஷவாயு விபத்து, கூடங்குளம், கதிராமங்கலம் போராட்டம் போன்ற நிகழ்வுகளைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது 'உறியடி 2'. லாபம் ஈட்டுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் பெருமுதலாளிகள், முதலாளிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவு, சாதியை அடிப்படையாக வைத்து அறுவடை செய்யப்படும் வாக்குகள் என சாதி, தேர்தல் அரசியல் கட்சிகள், பெருமுதலாளிகள் ஆகியோருக்கு இடையேயான கூட்டணியை விமர்சித்திருக்கிறது இந்தப் படம். 

தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்னையாகக் கடந்த ஆண்டு உருவெடுத்தது ஸ்டெர்லைட் ஆலை விவகாரம். தூத்துக்குடியில் இயங்கி வந்த, வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். 100 நாட்கள் போராட்டம் நடத்திய பின், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் மேற்கொண்ட நடைப்பயணத்தில் வன்முறை வெடித்தது. காவல்துறையின் துப்பாக்கிகள் அமைதிவழியில் போராடியவர்கள் மீது குண்டுகளைத் துளைத்தன. 17 வயது ஸ்னோலின் உட்படப் 13 பேர் அரசின் துப்பாக்கிகளுக்குப் பிணமானார்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூடு, பேசுபொருளாக மாறியது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு, தேசியப் பசுமை தீர்ப்பாயத்திலும், அதன் பிறகு உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது. எனினும் வேதாந்தா நிறுவனம் சட்ட ரீதியாக இந்த வழக்கைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான தி.மு.க, பி.ஜே.பி ஆகியவற்றின் தேர்தல் வாக்குறுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றிய வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. தி.மு.க வேட்பாளர் கனிமொழி, தன் பிரசாரத்தில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை முன்னிறுத்தி வருகிறார். தூத்துக்குடிக்குப் பிரத்யேகமாக வெளியிடப்பட்ட வாக்குறுதியிலும் ஸ்டெர்லைட் பற்றி பேசப்படவில்லை. 

2014-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிர்வகித்து வரும் வேதாந்தா குழுமம், பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் மொத்தமாக 29.2 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்திருப்பது தெரியவந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் இரு கட்சிகளையும் கண்டித்தது. இரு கட்சிகளும், 'வெளிநாட்டு நிறுவனத்தின் பங்குகளில் பெரும்பான்மை இந்தியர் ஒருவருக்குச் சொந்தமாக இருந்தால், அவர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தாலும், அவர் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை செல்லும்' என வாதிட்டன.

2016-ம் ஆண்டு நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டுச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தார். அதன்படி, பி.ஜே.பி, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் 2010-க்கு முன் அளித்த நன்கொடையைப் பற்றி கேள்வி எழுப்ப முடியாது என்றது அந்தச் சட்ட திருத்தம். மேலும் 'இந்தியர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள், வெளிநாட்டில் இருந்தாலும், அவற்றிடம் நன்கொடை வாங்கலாம்' எனவும் மாற்றப்பட்டது.

2018-ம் ஆண்டு இதே சட்டம் மீண்டும் திருத்தப்பட்டது. '1976-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதிக்குப் பிறகு, வெளிநாடுகளில் இருந்து கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றி கேள்வி எழுப்ப முடியாது' என மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.ஜே.பி, காங்கிரஸ் கட்சிகள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டுள்ளன.

வெளிநாட்டு நிறுவனங்களிடம் தேர்தல் கட்சிகள் நன்கொடை பெறுவதுடன், ஆட்சியில் அமர்ந்தவுடன் நன்கொடை அளித்த நிறுவனங்களுக்குச் சாதகமாகத் திட்டங்கள் வகுப்பதும், வரிச்சலுகை அளிப்பதும், நிலம் அளிப்பது, மானிய விலையில் மின்சாரம் வழங்குவது முதலானவற்றைச் செய்வதும், இயற்கை வளங்களை அந்த நிறுவனங்கள் கடுமையாகச் சுரண்டும்போது, மக்கள் போராட்டம் நடத்தினால் நிறுவனங்கள் பக்கம் நின்று, மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதும் கடந்த காலங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில், தூத்துக்குடியின் மிக முக்கியமான ஸ்டெர்லைட் பிரச்னை குறித்து எந்தவொரு வாக்குறுதியும் முக்கிய இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாதது கவனத்தில் கொள்ளத்தக்கது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காகச் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்து, பின்னர் வாபஸ் பெற்ற இயக்குநர் வ.கௌதமன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தொகுதியின் முன்னணி வேட்பாளர்கள் கனிமொழி, தமிழிசை ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அவரிடம் பேசினோம். 

"தூத்துக்குடியில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களுக்குச் செலவு செய்வது ஸ்டெர்லைட் நிறுவனம்தான். ஸ்டெர்லைட் நிறுவனத்தை அழைத்து வந்தது அ.தி.மு.க; திறந்து வைத்தது தி.மு.க. அதனை எதிர்த்துப் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது பி.ஜே.பி. பிரதமர் மோடி லண்டன் சென்றிருந்தபோது, அங்குள்ள நாளிதழ்களில் ஒரு பக்க விளம்பரம் கொடுத்து வரவேற்றது வேதாந்தா நிறுவனம். பி.ஜே.பி-க்கும், வேதாந்தாவுக்கும் இடையேயான உறவு அனைவரும் அறிந்ததுதான். தி.மு.க வேட்பாளர் கனிமொழியின் தேர்தல் பணிக் குழுவில் இருக்கும் வழக்கறிஞர் ஒருவர், வேதாந்தா நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருக்கிறார். அதனால் தூத்துக்குடியில் தமிழிசை தோற்றாலும், கனிமொழி தோற்றாலும், ஸ்டெர்லைட் தோற்காது; மீண்டும் வரும். வாக்குறுதி தருவதே நடிப்புதான். அப்படியான நடிப்பை வெளிப்படுத்தக்கூட இரண்டு கட்சிகளும் தயங்குகின்றன. மொத்தத்தில், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக நடக்கும் இந்த நிகழ்வு தேர்தல் அல்ல; ஜனநாயகப் படுகொலை" என்றார் கௌதமன். 

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிலைப்பாடு பற்றி கேட்பதற்காக தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பி.ஜே.பி. வேட்பாளர் தமிழிசை ஆகியோரை மூன்று நாள்களாக தொடர்ந்து தொடர்புகொண்டோம். இரு தரப்பினருமே சரியான விளக்கம் அளிக்கவில்லை. தற்போது தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றியும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் பற்றியும் இரண்டு வேட்பாளர்களும் தங்கள் நிலைப்பாடுகளை முன்வைத்தால், வெளியிடத் தயாராக இருக்கிறோம்.