Published:Updated:

131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்!

இந்தியாவைப் பொறுத்தவரையில், தேர்தல் அரசியலில், சாதி அமைப்புகள் கட்சிகளுக்கு வழங்கும் ஆதரவுகள்கூடச் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்கான காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்!
131 தனித்தொகுதிகளும்... வெற்றியைத் தீர்மானிக்கும் தேர்தலும்!

17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவரும் நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவானது நிறைவடைந்துள்ளது. தேர்தல் காலங்களில் விவாதிக்கப்படும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் ஒன்று வாக்கு வங்கி அரசியல். இந்தியாவின் வாக்கு வங்கி அரசியல் என்பது சாதிகளை மையப்படுத்தியதாக உள்ளது. ஏறத்தாழ எல்லாச் சாதிகளும் தங்களுக்கென தனி சாதி அமைப்புகளைக் கொண்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில், தேர்தல் அரசியலில், சாதி அமைப்புகள் கட்சிகளுக்கு வழங்கும் ஆதரவுகள்கூடச் சில மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்கான காரணிகளாக அமைந்துவிடுகின்றன.

வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த ‘131’ !

இந்தியாவில் மொத்தமுள்ள மக்களவைத் தொகுதிகளில் 131 தொகுதிகள் தனித்தொகுதிகளாகும். அவற்றில் 84 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 47 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள தனித்தொகுதிகளில் பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றன. 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. 67 தொகுதிகளையும், காங்கிரஸ் கட்சி வெறும் 12 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. பி.ஜே.பி கடந்த காலத்தில் அதிகப்படியான தனித்தொகுதிகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தத் தேர்தலிலும் தனித் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸும் தனித் தொகுதிகளில் செல்வாக்கை உயர்த்த முயன்று வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், உத்தரப்பிரதேசம் அதிகப்படியாக 17 தனித் தொகுதிகளைக் கொண்டுள்ளது. ஏற்கெனவே கடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்,  உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் பலமிழந்து வரும் நிலையில் உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட நிலையில், அந்தக் கூட்டணி கைகூடாமல்போனது. இது, காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகத்தான் கருதப்படுகிறது. பி.ஜே.பி தன்னுடைய தனித்தொகுதிகளின் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்துள்ளன. சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் 5 தொகுதிகள் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள். இதுபோன்ற மாநிலத்தின் வெற்றியே பழங்குடியின மக்களின் அரசியல் முடிவுகளை நம்பியதாகவே உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகளில் ஆட்சி மாற்றத்துக்கான திறவுக்கோல் ‘131’ தான்.  

வடக்கு ‘ஆதிக்க’தின் குறியீடு!

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சமீபத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதற்கான சட்டத்திருத்த மசோதாவை, சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.ஜே.பி-யின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பல்வேறு திட்டங்களைக் கடுமையாக எதிர்த்து வந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் என எல்லோரும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு, பி.ஜே.பி-யின் நிலைப்பாட்டுக்கு  ஆதரவாகத் தலையசைத்தனர். அதேவேளையில், கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தில் எதிரெதிர் துருவங்களில் நின்று அரசியல் செய்துவரும் இரண்டு திராவிடக் கட்சிகளும், இந்த மசோதாவை எதிர்த்து ஒரே குரலாய் ஒலித்தன. தேர்தல் நெருங்க உள்ளதால் வட இந்தியாவில் உள்ள உயர் வகுப்புகளைச் சார்ந்த மக்களின் வாக்குகளைக் கவனத்தில்கொண்டு இந்த இடஒதுக்கீடு மசோதா திடீரென கொண்டுவரப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்தன. தமிழகத்தைச் சார்ந்த காங்கிரஸ் தலைவர்கள், "இந்த நிலைப்பாடு வட இந்தியாவைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டது" எனச் சமாதானம் கூறினர். இந்தக் கருத்தியல்தான் இந்திய அரசியலில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையே உள்ள வேறுபாடு.

கடந்த டிசம்பர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே குஜ்ஜார் என்ற உயர் வகுப்பைச் சார்ந்த மக்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டி, தொடர் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்ற நிலையில், ராஜஸ்தான் மாநில அரசு குஜ்ஜார் மக்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவந்தது.

இந்நிலையில் குஜ்ஜார் இன மக்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கிய கிரோரா சிங், சமீபத்தில் பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். இது, ராஜஸ்தான் அரசியலில் பி.ஜே.பி-க்கு இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட இந்தியாவைப் பொறுத்தமட்டில் ராஜபுத்திரர்கள், குஜ்ஜார்கள், பிராமணர்கள் போன்ற உயர் வகுப்பைச் சார்ந்தவர்களின் வாக்குகள் 25 சதவிகிதத்துக்கு மேல் உள்ளன. எனவே, வடக்கு வாக்குவங்கி அரசியலில் உயர் வகுப்பைச் சார்ந்தவர்கள் ஆதிக்கம் பெற்றுள்ளனர்.

ஓங்கி ஒலிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களின் குரல்! 

லாலு பிரசாத் யாதவ் ஜனதாதளம் சார்பில் 1990-ல் பீகாரின் முதல்வரானர். பிறகு, பீகாரின் மொத்த மக்கள்தொகையில் 14 சதவிகிதம்  கொண்ட யாதவ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் என்ற கட்சியைத்  தொடங்கினார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி உருவானது. தமிழகத்திலும் பல சாதி அமைப்புகளும் கட்சிகளாக மாறி வலுப்பெற ஆரம்பித்தன. அவர்களின் வாக்குவங்கி என்பது தற்போதைய சூழலில் அவர்களை மையப்படுத்தி கூட்டணிகள் கட்டமைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு போன்ற அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் அரசியல் என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களின் கைகளில்தான் உள்ளது.

காங்கிரஸ் மறந்த குஜராத் ஃபார்முலா:

கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், படேல் சமூகத்துக்காகப் போராடிய ஹர்த்திக் படேல், பிற்படுத்தப்பட்ட தலைவராக உருவெடுத்த அல்பேஷ் தாகூர், தலித் மக்களிடையே உருவெடுத்த ஜிக்னேஷ் மேவானி ஆகியோரைப் பி.ஜே.பி-க்கு எதிராகக் களமிறக்கி கணிசமான அளவு வெற்றியை அறுவடை செய்தது. ஆனால், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வலுவான வாக்குவங்கி அரசியலைக் கட்டமைப்பதில் பல மாநிலங்களில் சறுக்கியுள்ளது. கருத்தியல் ரீதியாக ஜனநாயகம் என்பது அனைவருக்கும் உரிமைகளைப் பகிர்ந்தளிப்பதாக இருந்தாலும், நடைமுறையில் ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினரின் கருத்துகளே வெற்றிபெறுகின்றன. ஒருபுறம் வாக்குவங்கி அரசியல் என்பது தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டாலும், மற்றொரு புறம் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிடைத்துள்ள 20 சதவிகித இடஒதுக்கீடு போன்றவை வாக்குவங்கி அரசியலால் நிகழ்ந்தவை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.

மக்கள் தங்களின் வாக்குகளை நியாயத்தின் பக்கம் திருப்பினால் ஜனநாயகம் நலன்பெறும்!