Published:Updated:

நவீன இந்தியாவின் சிற்பி அண்ணல் அம்பேத்கர்..! பிறந்ததின சிறப்புப் பகிர்வு

நவீன இந்தியாவின் சிற்பி அண்ணல் அம்பேத்கர்..! பிறந்ததின சிறப்புப் பகிர்வு
நவீன இந்தியாவின் சிற்பி அண்ணல் அம்பேத்கர்..! பிறந்ததின சிறப்புப் பகிர்வு

நவீன இந்தியாவின் சிற்பி அண்ணல் அம்பேத்கர்..! பிறந்ததின சிறப்புப் பகிர்வு

ந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை, இந்தச் சமூகம் வெறும் தலித் தலைவராகச் சுருக்கிவிட்டது. உண்மையில் அம்பேத்கர், பொதுச் சமூகத்தின் முன்னேற்றத்துக்குதான் அதிகம் பங்களித்திருக்கிறார். கிடைத்த சிறிய வாய்ப்புகளில்கூட, பொருளாதாரம், அரசியலமைப்புச் சட்டம், தேர்தல் சீர்திருத்தங்கள், தொழிலாளர் நலன், விவசாயம், நதிநீர் மேலாண்மை, மின்சார உற்பத்தி, சமூகச் சீர்திருத்தம், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு, வெளியுறவுக் கொள்கை, அறிவியல் என ஒரு தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான அனைத்தையும் அவர் செய்திருக்கிறார். 

'சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக ஜவஹர்லால் நேருவைவிட வல்லபபாய் படேல் பொறுப்பேற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்' என ஒருசாரார் விவாதித்துக்கொண்டிருக்கின்றனர். என்றாலும் படேலைவிட நேருவே சிறப்பானவர் என்பதில்  மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், இவர்கள் எல்லோரையும்விட அண்ணல் அம்பேத்கரே இந்தியாவின் சிறந்த முதல் பிரதமராக இருந்திருப்பார். 

ஜனநாயகம் என்பது வெறும் தேர்தல்முறை மட்டுமல்ல என்பதை அவர் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தாலும் இந்தியாவுக்கு ஏற்ற தேர்தல்முறையைத் தேர்வு செய்வதில் கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குமேல் செலவு செய்தார் அம்பேத்கர். சவுத்பரோ குழு, சைமன் குழு எனப் பல குழுக்களில் சாட்சியம் அளித்த அவர், இந்தியாவின் தேர்தல் தொடர்பான சட்டங்களையும் உருவாக்கினார். சட்ட அமைச்சராக அவர் முன்னெடுப்பில் உருவானதுதான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம். அந்தச் சட்டங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இன்றுவரை பயன்பாட்டில் இருக்கிறது.

ஒரு மனிதன் மதிப்பு என்பதை அடைய பல நாடுகளின் குடிமக்கள், பல்வேறு போராட்டங்கள், உயிரிழப்புகளைச் சந்தித்துப் பெற்றபோது நாம் குடியரசாக மாறிய நாள்முதல் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கக் காரணமாகத் திகழ்ந்தார் அம்பேத்கர். 

இந்தியப் பொருளாதாரம் குறித்து அம்பேத்கருக்கு மாணவப் பருவம் முதலே ஆர்வம் இருந்தது. அவரின் மூன்று ஆய்வேடுகளும் இந்தியப் பொருளாதாரத்தைக் குறித்துதான். இந்தியாவுக்கு ஏற்ற பொருளாதாரமுறையானது, காலத்துக்கு ஏற்றாற்போல, நாட்டின் வளர்ச்சிக்குத் தகுந்தாற்போல மாறுவதைத்தான் அவர் விரும்பினார். நிலமற்ற அல்லது குறைந்த நிலமுடைய விவசாயிகளுக்குக் கூட்டுறவு விவசாயம் பயனளிக்கும் என்று நினைத்த அம்பேத்கர், விவசாயக் குடும்பங்களில் உருவாகும் உபரித் தொழிலாளர்களுக்காக இந்தியா வெகுவேகமான தொழில்வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்று எடுத்துரைத்தார். 'முக்கியமான துறைகள் தேசியமயமாக்கப்பட வேண்டும்' என்கிற நேருவின் கருத்துக்கு அவர் துணையாக இருந்தார். அதேவேளையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தனியார் துறையின் பங்களிப்பும் அவசியம் என்று கருதினார். ஆனால், தனியார் துறை எந்தவொரு கடிவாளமும் இல்லாமல் இருக்கக் கூடாது; ஏனென்றால், அவற்றின் முதலாளிகள் பெறும் கட்டற்ற சுதந்திரம் தொழிலாளர்களை ஒடுக்கிவிடும் என்று கருதினார். 

வைஸ்ராய் கவுன்சிலில் உறுப்பினராக அம்பேத்கர் இருந்தபோது, இந்தியாவின் முதல் நீராதாரக் கொள்கையை உருவாக்கி வளர்ச்சிசார்ந்த பன்முகப் பயன்களை அளிக்கக்கூடிய நீர் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கினார். அவரின் முயற்சியால் உருவானதுதான் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம், ஹிராகுட், சோன் பள்ளத்தாக்கு திட்டம் போன்றவை. இந்தியாவின் முதல் மின்சார ஆணையத்தை அமைத்து, 'அதிக உற்பத்தியும் குறைந்த விலையுமே இந்தியாவின் மின்சாரக் கொள்கையாக இருக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டார். அவருடைய பொருளாதாரச் சிந்தனைகள் இன்றும் மிக அவசியமானதாக இருக்கிறது எனப் பொருளாதார மேதைகள் கருதுகின்றனர். சமூகச் சீர்திருத்தங்களை அம்பேத்கர் அளவுக்குச் சிந்தித்து செயல்படுத்தியவர்கள் நவீன இந்தியாவில் யாரும் இருக்க முடியாது.

வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்டிருந்த இந்துச் சட்டங்களை ஒழுங்குபடுத்தி, அதில் திருத்தம் செய்து அவர் உருவாக்கிய மாதிரிகள்தான் பின்னர் சட்டமாக மாறியது. பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, விவாகரத்து உரிமை எனப் பல்வேறு உரிமைகளை மகளிருக்காகப் பெற்று தந்தார் அம்பேத்கர். அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியதுடன், அதைச் சமூக நீதி சார்ந்ததாகவே வடிவமைத்தார். பழங்குடியினர், சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்குமான உரிமைகளையும் பாதுகாப்பையும் அந்தச் சட்டத்தின் மூலம் அளித்தார். 

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை  எப்படியிருக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு மிகப்பெரிய கனவு இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை முதலில் நாட்டுக்கு நன்மைபயப்பதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். "இந்தியா ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும் அப்போதுதான் பிற நாடுகள் நம்மை மதிப்பார்கள்” என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். ஐ.நா சபையில் சீனா நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு இந்தியாவின் முனைப்பைக் கடுமையாக அவர் கண்டித்ததுடன், 'இந்தியாவைச் சீனா தாக்கும்' என்பதை ஒரு தீர்க்கதரிசியாக 1954-ம் ஆண்டிலேயே உரைத்தவர். பத்து ஆண்டுகள் கழித்து, 1964-ல் இந்தியா மீது போர் தொடுத்தது சீனா. இன்றுவரை ஐ.நா பாதுகாப்பு சபையில் தனது வீட்டோ (veto) அதிகாரத்தை இந்தியாவுக்கு எதிராகச் சீனா பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

காஷ்மீர் குறித்த அவரின் பார்வை இன்றும் தேவையாக இருக்கிறது. கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளில் தீவிர அக்கறை காட்டினார் டாக்டர் அம்பேத்கர். முக்கியமாக ஆரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அன்று இருந்த பொருளாதாரச் சூழ்நிலையில் அது சாத்தியமில்லாததால், கட்டாயக் கல்வி ஒரு தேசத்தின் முக்கியக் கொள்கையாக இருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தார். கல்வியின் அவசியம் கருதி அவரே இரண்டு முக்கியக் கல்வி நிலையங்களைத் திறந்து, அவர் நினைத்தது போன்று, அந்தக் கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். 

`மாணவர்கள் முக்கியமாக அறிவியல் படிப்புகளில் அதிக கவனம் செலுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டு சமூகத்துக்கு பங்களித்திட வேண்டும்' என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தினார். உலகின் சிறந்த கண்டுபிடிப்புகளை இந்தியா பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று விரும்பியதோடு மட்டுமல்லாமல், நம் நாட்டு மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதற்கு அரசு தாராள உதவித்தொகை அளித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பெரும் படிப்பாளியான அவர், கல்வியில் நூலகம் ஒரு முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரை வழங்கினார்.

நிர்வாகம், சட்டம், பொருளாதாரம், தொழில்துறை, சமூகம், வெளியுறவு, தேசப் பாதுகாப்பு, தேச ஒற்றுமை, கல்வி என அண்ணல் அம்பேத்கரின் பங்களிப்பு அபாரமானது, தீர்க்கதரிசனத்துடன் கூடியது. அம்பேத்கர், இந்தியாவின் சிறந்த பிரதமராக இருந்திருப்பார். அப்படி இருந்திருந்தால், நம் நாடு தற்போது ஒரு சமத்துவமான, வளர்ச்சியடைந்த இந்தியாவாக உருவாகியிருக்கும்.


 

அடுத்த கட்டுரைக்கு