Published:Updated:

பிரதமருக்கு `கிலி'யை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டம்... பிரியங்கா அந்தத் துருப்புச் சீட்டு?

பிரதமருக்கு `கிலி'யை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டம்... பிரியங்கா அந்தத் துருப்புச் சீட்டு?
பிரதமருக்கு `கிலி'யை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டம்... பிரியங்கா அந்தத் துருப்புச் சீட்டு?

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரியங்கா தன்னை எதிர்த்துப் போட்டியிட்டால், இரண்டாவதாக இன்னொரு தொகுதியில் போட்டியிட மோடி முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது 

வாரணாசியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் அவர் ஆலோசித்து வருகிறார். கடந்த முறை இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை மோடி 3.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷின் சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தள கட்சிகள் கூட்டணி பலமாக உள்ளது. அசம்கார் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார். நல்லெண்ண அடிப்படையில் இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால், பிரியங்கா வாரணாசியில் போட்டியிடும் பட்சத்தில் இந்தக் கட்சிகளின் ஆதரவு பிரியங்காவுக்கு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 

மேலும், பிரியங்கா வெற்றி பெறுகிறாரோ... இல்லையோ பிரதமர் மோடிக்குச் சரியான போட்டியாக இருப்பார் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இவர், போட்டியிட்டால் பட்டியலினத் தலைவர் சந்திரசேகர ஆசாத் வாரணாசியில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். வாரணாசியில் பிரியங்கா களமிறங்கும் பட்சத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலைப் போலப் பிரதமர் மோடியும் இன்னொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது.

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஷாநவாஸ் ஹூசைன், 'எதிர்த்துப் போட்டியிடுபவர்களைப் பற்றி எல்லாம் எங்களுக்குக் கவலை இல்லை. மோடி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்' என்கிறார்.

வாரணாசியில் மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.