Published:Updated:

`100% வாக்களிக்கணும்; நோட்டாவில் ஓட்டு போடுங்க!'- நீலகிரியில் வீதிவீதியாக களமிறங்கிய அமைப்பு

`100% வாக்களிக்கணும்; நோட்டாவில் ஓட்டு போடுங்க!'- நீலகிரியில் வீதிவீதியாக களமிறங்கிய அமைப்பு
News
`100% வாக்களிக்கணும்; நோட்டாவில் ஓட்டு போடுங்க!'- நீலகிரியில் வீதிவீதியாக களமிறங்கிய அமைப்பு

`100% வாக்களிக்கணும்; நோட்டாவில் ஓட்டு போடுங்க!'- நீலகிரியில் வீதிவீதியாக களமிறங்கிய அமைப்பு

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில்  நோட்டா  46,559  வாக்குகள் பெற்று நாட்டில்  முதல் இடத்தைப் பிடித்தது. அதிருப்தி காரணமாக தன்னார்வலர்கள் தற்போது மீண்டும் நோட்டாவை கையில் எடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், அனைத்துக் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி தனி தொகுதியைப் பொறுத்தவரை மூன்றாவது முறையாக தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். இதனால் நீலகிரி தொகுதி வி.ஐ.பி. அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இது தவிர அ.தி.மு.க. சார்பில் தியாகராஜன், அ.ம.மு.க. சார்பில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமசாமி மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் சுயேச்சை வேட்பாளர்கள் தவிர கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தொகுதி முழுவதும் சென்று பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் சரி நீலகிரிக்கென எவ்வித திட்டங்களும் இதுவரை செயல்படுத்தவில்லை. நீலகிரியில் ஒவ்வொரு முறை போட்டியிடும் எந்தக் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் சரி, பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்பு கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவிதமான அக்கறையும் காட்டுவதில்லை. இதனால் நீலகிரி மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தன்னார்வலர்கள் சிலர், எந்தக் கட்சி வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு தங்களது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு பிரசாரம் செய்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மனோகரன் கூறுகையில், ``தென்னிந்தியாவின் தண்ணீர் தொட்டியாக விளங்கும் நீலகிரியில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. நீலகிரியின் விளை நிலங்கள் எல்லாம் அரசியல்வாதிகள், கறுப்புப் பண முதலைகளின் கையில் சிக்கியுள்ளது. தேயிலை விவசாயம் அழிந்துகொண்டிருக்கிறது. அரசுப் பேருந்துகளில் கட்டணக் கொள்ளை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்புகள் இல்லாததால் நீலகிரி மக்கள் இடம் பெயரும் அவலங்கள், மாவட்டப் பிரச்னைகளை வைத்து

அரசியல் செய்து பிழைக்கும் அரசியல் கட்சிகள், முழு தொகுதிக்குண்டான தகுதிகூட இல்லாமல் அரை தொகுதியாக உள்ள நீலகிரியின் குரலைக் கேட்க யாருமே இல்லாத நிலையே உள்ளது. இவற்றைப் பற்றி புலம்பிக் கொண்டுதான் இருக்கிறோம். தீர்வுதான் என்ன. இதற்குத் தேர்தல் மட்டும்தான் தீர்வு. எனவே, எந்த ஒரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து 100 சதவிகித வாக்களிப்பை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் நீலகிரி இந்திய அளவில் கவனம் பெறும் வாய்ப்பு உருவாகும்'' என்றார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டிலேயே அதிகபட்சமாக நீலகிரி தொகுதியில் 46,559 வாக்குகள் நோட்டாவுக்குப் பதிவாகி அனைத்துத் தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இம்முறையும் நோட்டாவுக்குப் பதிவு செய்யுமாறு சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த முறை நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகி, நீலகிரி தொகுதி இம்முறையும் இந்திய அளவில் கவனம் பெறுமா என்பது மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தினத்தன்றே தெரியவரும்.