Published:Updated:

`தொகுதிக்கு 6 லட்சம் டார்கெட்; என் பங்கு ரூ.250!' - எடப்பாடி வியூகமும் ஸ்டாலின் ஆய்வும்

`அ.தி.மு.க-வினரால் அதிகமாகப் பணம் கொடுக்கப்படும் தொகுதிகளில் களநிலவரம் எப்படியிருக்கிறது?' என ஆய்வு செய்தனர் தி.மு.க நிர்வாகிகள் சிலர். அந்த ஆய்வின் முடிவில் சில விஷயங்கள் தெரியவந்தன.

`தொகுதிக்கு 6 லட்சம் டார்கெட்; என் பங்கு ரூ.250!' - எடப்பாடி வியூகமும் ஸ்டாலின் ஆய்வும்
`தொகுதிக்கு 6 லட்சம் டார்கெட்; என் பங்கு ரூ.250!' - எடப்பாடி வியூகமும் ஸ்டாலின் ஆய்வும்

ட்டுக்குப் பணம் கொடுப்பதில் முதன்மை மாநிலம் என்ற நற்பெயரைப் பெற்றிருக்கிறது தமிழகம். இதுவரையில் 183 கோடி ரூபாய் பணமும் 287 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. `பணத்தை வாங்கிக் கொண்டாலும் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படும்' என நம்பிக்கையோடு இருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக்கட்ட பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு மேல் பிரசாரமோ வாக்குறுதிகளோ அளிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு. அதேநேரம், கடந்த சில நாள்களாக நடந்து வரும் கரன்ஸி விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பறக்கும் படை அதிகாரிகளே திணறி வருகின்றனர். ஆளும்கட்சியான அ.தி.மு.க தரப்பில் எந்தவித சிரமமும் வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு சாதிவாரியாக கணக்கெடுத்து பணப்பட்டுவாடாவை செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. பல தொகுதிகளில் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தி, வீடு வீடாக விநியோகம் செய்து வருகின்றனர். தி.மு.க தரப்பிலோ, சில தொகுதிகளில் வாக்காளர்களைக் குளிர்விக்கும் வகையில் பணத்தைச் செலவு செய்துள்ளனர். வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு இணையாகச் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும், தொகுதிகளில் நடக்கும் உட்கட்சி மோதல்களும் பணப் போக்குவரத்து குறைந்ததும் உடன்பிறப்புகளைச் சோர்வடைய வைத்திருக்கிறது. இதுதொடர்பாக, அறிவாலயத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. 

தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ``வேட்பாளர்கள் தங்களுடைய சொந்தச் செல்வாக்கின் அடிப்படையில் தேர்தல் செலவுகளைப் பார்த்து வருகின்றனர். பல தொகுதிகளில் பூத் கமிட்டிகளுக்கே முறையாகப் பணம் சென்று சேரவில்லை. தி.மு.க-வினரை மட்டும் கண்கொத்திப் பாம்பாகப் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். இந்தத் தேர்தலில் எங்கள் கவனத்துக்கு வந்தது இரண்டே விஷயங்கள்தான். ஒன்று `பணம் இல்லை', மற்றொன்று, `பணம் கொடுக்க முடியவில்லை'. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதை சவாலாகப் பார்க்கிறார் எடப்பாடி. அதனால்தான், அனைத்துத் தொகுதிகளிலும் பணத்தை வாரியிறைக்கிறார். அவர்கள் அளவுக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை.

`அ.தி.மு.க-வினரால் அதிகமாகப் பணம் கொடுக்கப்படும் தொகுதிகளில் களநிலவரம் எப்படியிருக்கிறது?' என ஆய்வு செய்தனர் தி.மு.க நிர்வாகிகள். அந்த ஆய்வின் முடிவில், `யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம். அதில் எங்களுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை. அதேநேரம், யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்' என வாக்காளர்கள் பலர் பதிலளித்துள்ளனர். அவர்களுடைய மனங்களில் எந்தக் கட்சி நிறைந்திருக்கிறது என்பதைக் கண்டறியவும் முடியவில்லை. இந்த ஆய்வின் மூலம் ஓர் உண்மையைக் கண்டறிய முடிந்தது. எங்களுடைய கணக்கின்படி, அவர்கள் பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டுவிட்டால், தமிழ்நாட்டில் வரும் தேர்தல்களில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாசாரம் முடிவுக்கு வந்துவிடும். தங்கள் கைகளிலிருந்து பணத்தைச் செலவழித்து ஏமாந்து போனவர்கள், அடுத்தமுறை பணம் கொடுக்க மாட்டார்கள். `பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டாங்க' என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இது ஓர் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. 

அடுத்ததாக, தேர்தல் வேலை பார்ப்பவர்களுக்குக்கூட பணம் கொடுப்பதில்லை எனப் பல தொகுதிகளிலிருந்து புகார் வந்துள்ளது. இந்தப் புகார்களை தீவிரமாக விசாரிப்பதும் சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் தங்களுக்கு வேண்டிய பகுதிச் செயலாளர்களுக்கு மட்டுமே பணத்தைக் கொடுக்கின்றனர். தங்களுக்கு வேண்டாதவர்களை ஒதுக்கிவிடுகின்றனர். அந்தப் பகுதிகளில் வாக்குகள் குறைவாக விழுந்தால், அவர் மீது குறை சொல்லி கட்சியை விட்டு ஓரம்கட்டும் நடவடிக்கையை எடுப்பதற்கு வாய்ப்பாக மாறும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தத் தேர்தலில் இதுபோன்ற சின்னச் சின்ன மோதல்களால்தான் பாதிப்பு ஏற்படப் போகிறது. சென்னையில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெரும் செல்வந்தர். அவரிடம் சென்று, `தேர்தல் வேலை பார்ப்பவர்களுக்கு டீ, டிபன் வாங்கித் தருவதற்குக்கூட யாரும் ஏற்பாடு செய்யவில்லை' என வேதனைப்பட்டிருக்கிறார் கட்சியின் நீண்டகால நிர்வாகி ஒருவர்.

அதற்குப் பதிலளித்த வேட்பாளர், `மாவட்டத்திடம் கொடுத்துவிட்டோம். அவரிடம் சென்று கேளுங்கள்' எனக் கூறிவிட்டார். இந்தப் பதிலை அந்த நிர்வாகி எதிர்பார்க்கவில்லை. அந்த மாவட்டச் செயலாளர் அ.தி.மு.க-வின் `ஸ்லீப்பர் செல்' போலச் செயல்படுவதுதான் கொடுமை. `இதுபோன்ற பஞ்சாயத்துகளே இருக்கக் கூடாது' என்பதால்தான், ஒரு மாதகாலமாக அறிவாலயத்தில் அமர்ந்து உடன்பிறப்புகளை வரவழைத்துப் பேசினார் ஸ்டாலின். ஆனால், விவகாரம் முடிவுக்கு வரவில்லை. மாவட்டச் செயலாளர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால்தான், கீழ்மட்ட நிர்வாகிகளை ஒருங்கிணைத்துச் செல்ல முடியும். தேர்தல்காலப் புகார்களின் மீது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்" என்றார் ஆதங்கத்துடன். 

அ.தி.மு.க தரப்பில் எந்தவித சிரமமும் இல்லாமல் பணப்பட்டுவாடா நடந்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், ``நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பணவிநியோகத்தில் பல்வேறு நடைமுறைகளை வகுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. பணபலத்தோடு களத்தில் நிற்கும் வேட்பாளராக இருந்தாலும் சரி, ஓரளவுக்கு வசதி படைத்த வேட்பாளர்களாக இருந்தாலும் சரி.. வாக்குக்கு 250 ரூபாயைத் தலைமை கொடுக்கும். இதற்கு மேல் 50 ரூபாய் சொந்தப் பணத்தைப் போட்டு மக்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த 50 ரூபாய் என்பதை 500 ரூபாயாகவோ, 1000 ரூபாயாகவோ உயர்த்திக் கொள்வது அவரவர் விருப்பம். 

`இந்தப் பணம் கட்டாயம் சென்று சேர வேண்டும்' என உறுதியாகக் கூறிவிட்டார் முதல்வர். அதேபோல், தொகுதியில் பத்து லட்சம் வாக்காளர்கள் இருந்தால் அவர்களில் 6 லட்சம் பேரை மட்டுமே பிரித்து எடுக்கிறார்கள். அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்தவர்கள், கட்சிக்காரர்கள், நடுநிலை வாக்காளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்து அவர்களுக்கு மட்டுமே பணத்தைக் கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர். ஓட்டுக்கு 300 ரூபாய் எனக் கொடுத்தாலும் தொகுதிக்கு 18 கோடி ரூபாயை விநியோகிக்க வேண்டும். சில தொகுதிகளில் சர்வ சாதாரணமாக 100 கோடி ரூபாய் வரையில் விநியோகத்தை முடித்துவிட்டனர். இந்தத் தேர்தலை வாழ்வா...சாவா பிரச்னையாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. பண விநியோகத்தின் மூலம் கட்சிக்காரர்கள் மத்தியிலும் தனக்கான இமேஜ் உயர்ந்துவிட்டதாக நினைக்கிறார். தேர்தல் முடிவில்தான் மக்கள் மனநிலையை அறிய முடியும்" என்கின்றனர் நிதானமாக.