Published:Updated:

``ரஜினி, கமல், அஜித் தேர்தல் நிலைப்பாட்டைச் சொல்லிட்டாங்க... ஆனா, விஜய்?''

``ரஜினி, கமல், அஜித் தேர்தல் நிலைப்பாட்டைச் சொல்லிட்டாங்க... ஆனா, விஜய்?''
``ரஜினி, கமல், அஜித் தேர்தல் நிலைப்பாட்டைச் சொல்லிட்டாங்க... ஆனா, விஜய்?''

ஜினி, கமல், அஜித் ஆகியோர் இந்தத் தேர்தலில் தங்கள் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்ட நிலையில், நடிகர் விஜய் இறுதிவரை தன் நிலைபாட்டைச் சொல்லவில்லை. 2011 தேர்தலில் அப்போதைய அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர், தற்போது அமைதி காத்துவிட்டார்.

ந்திய அரசியலுக்கும் சினிமாவுக்கும் நெடுங்காலமாகவே நெருங்கிய பந்தம் இருந்துவருகிறது. நடிகர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய பலரும் அரசியலில் மாபெரும் தலைவர்களாகக் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி இருக்கிறார்கள். இதில் மற்ற மாநிலங்களைவிட தமிழகமே முன்னணியில் இருக்கிறது. தமிழக சினிமாத்துறை, இதுவரை நான்கு முதல்வர்களை நமக்குக் கொடுத்திருக்கிறது. இன்னும் பல அரசியல்கட்சிகளையும் உருவாக்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகவே இது தொடர்ந்து வருகிறது. 

20 வருடங்களுக்கு மேலாகவே அரசியலுக்கு வருவேன் வருவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் ஓராண்டுக்கு முன்புதான் ரஜினியின் மக்கள் மன்றமே வந்தது. இதையடுத்து அவரது ரசிகர்கள், கட்சி குறித்து ஏதாவது அறிவிப்பு வரும் என்று காத்திருக்க, நமது இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான் என நாடாளுமன்றத்தேர்தல் ரேசிலிருந்து விலகிக் கொண்டார் ரஜினி. இன்னொரு பக்கம் ரஜினிக்கு முன் அரசியல் களத்தில் குதித்த கமல், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் தொடங்கினார். தமிழகத்தில் 40 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கிறார் கமல். தேர்தல் ஆணையம் அவருக்கு டார்ச் லைட் சின்னம் கொடுத்திருக்கிறது. 

கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள்ளேயே சர்ச்சைகளைச் சந்தித்துவிட்டது கமல் கட்சி. ரஜினி இந்தத் தேர்தலில் போட்டியிடாததால், முதலில் மறைமுகமாக ரஜினியிடம் ஆதரவு கேட்டார் கமல். அதை ரஜினி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. இதையடுத்து, பகிரங்கமாகவே ரஜினியின் ஆதரவைக் கேட்டுவிட்டார் கமல். அதன்பிறகும் ரஜினி அவருக்குப் பிடிகொடுக்கவில்லை. ``என்னுடைய தேர்தல் நிலைப்பாட்டைத் தெரிவித்துவிட்டேன். பா.ஜ.க.-வின் தேர்தல் அறிக்கை நன்றாக இருக்கிறது. நதிகளை இணைப்போமென்று அவர்கள் சொன்னதை நான் வரவேற்கிறேன். ரசிகர்கள் உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு வாக்களியுங்கள்'' என்பதுபோல் சொன்னார் ரஜினி. இதனால் கமல் தரப்பு ரொம்பவே அப்செட் ஆகியுள்ளது. இருந்தாலும் தேர்தலைச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் என்று ஒற்றை ஆளாய் ஊர்ஊராய் ஓடி பரப்புரையையும் முடித்துவிட்டார் கமல்ஹாசன். 

இது இப்படியிருக்க, ``திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காகச் செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள். அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். இனி மோடியின் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று கட்சியில் இணைந்த அஜித் ரசிகர்களிடம் அவர் கோரிக்கை வைத்தார். இறுதியாக அஜித் ரசிகர்கள் மோடி தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும்'' என்று திருப்பூரில் ஒரு கூட்டத்தில் பேசினார் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன். தேர்தல் நெருங்கும் நேரத்தில், அஜித் ரசிகர்கள் இன்னும் குழப்பமாக, எதற்குமே வாய் திறக்காத அஜித் முதல்முறையாகத் தமிழிசையின் பேச்சைத் தொடர்ந்து ஓர் அறிக்கை வெளியிட்டார். 

``அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என்மேல் திணிக்க விட்டதும் இல்லை. என் ரசிகர்களிடம் இதையேதான் எதிர்பார்க்கிறேன். உங்கள் அரசியல் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவோர் அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்பவில்லை. வாழு வாழ விடு” என்று அறிக்கையைத் தட்டிவிட்டார் அஜித்.

நடிகர்கள் ரஜினி, கமல், அஜித் தேர்தல் நிலைப்பாட்டைச் சொல்லிவிட்ட நிலையில், நடிகர் விஜய் மட்டும் இதுவரையிலும் இந்தத் தேர்தலில் தன் நிலைப்பாடு குறித்து எதுவும் வாய்திறக்கவில்லை. கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலின் போது, அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக தனது ரசிகர்களைப் பிரசாரம் செய்யச்சொன்னார் விஜய். அதன்பிறகு `கத்தி' படத்தின்போது ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, அரசியலைவிட்டு விலகியே இருந்தார். ஆனால், அரசியலுக்கு வருவது குறித்து சூசகமாக அறிவித்திருக்கிறார் என்றும் அவர் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவித்தால் உடனடியாக பணியாற்றத் தயாராக இருப்பதாக சில விஜய் ரசிகர்கள் சொல்லிக் கொண்டிருக்க, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை எந்தக் கட்சி குறித்தும் தன் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருக்கிறார். 

இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் பிரசாரம் செய்வதாகத் தகவல் வர, அடுத்த சில நாள்களில் கன்னியாகுமரி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், ``விஜய் நற்பணி மன்றத்தினர் எங்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்'' என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறார். விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்று அவருடைய ரசிகர்கள் இன்னும் காத்துக்கொண்டிருக்க, விஜய் எந்த முடிவையும் தெரிவிக்காத நிலையில், அவரது ஆதரவைப் பெற்றுவிட்டதாக சில கட்சிகள் இப்படி பகிரங்கமாகவே அறிவிக்கின்றன.

இந்தத் தேர்தலில் விஜய்யின் நிலைப்பாடுதான் என்ன? கன்னியாகுமரியில் நடந்துவரும் விஷயங்கள் குறித்து விஜய் தரப்பிடம் விளக்கம் கேட்டோம். ``வசந்தகுமாரை சந்தித்து ஆதரவு கொடுத்தது சபின்தான். அவர் விஜய் நற்பணி மன்றத்தின் எந்தப் பதவியிலும் கிடையாது. சபின் பணம் வாங்கிக்கொண்டு ஆதரவு தெரிவித்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். சபினோடு சென்றவர்கள் யாரும் விஜய் ரசிகர்கள் கிடையாது. தன்னுடைய ரசிகர்கள், அவர்கள் விருப்பப்படி வாக்களிக்கத்தான் விஜய் விரும்புகிறார். எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை'' என்று விஜய் தரப்பில் பதில் வந்தது.

இப்படியாகத் தல, தளபதி, சூப்பர் ஸ்டார் யாரும் யாருக்கும் ஆதரவு தரவில்லை. மக்கள் குழம்பாமல் வாக்களித்தால் சரி!