Published:Updated:

மோடி சொன்னதும் நடந்ததும்: விவசாயம், மருத்துவம், காப்பீட்டுத் திட்டங்களில் என்ன செய்தது மத்திய அரசு? பகுதி - 10

மோடி சொன்னதும் நடந்ததும்: விவசாயம், மருத்துவம், காப்பீட்டுத் திட்டங்களில் என்ன செய்தது மத்திய அரசு? பகுதி - 10
மோடி சொன்னதும் நடந்ததும்: விவசாயம், மருத்துவம், காப்பீட்டுத் திட்டங்களில் என்ன செய்தது மத்திய அரசு? பகுதி - 10

த்தியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம். தொடரின் நிறைவாக, இந்தப் பகுதியில் நாடு முழுவதும் விவசாயம், மருத்துவம், காப்பீடு, ஓய்வூதியம் போன்ற திட்டங்களில் மத்திய அரசின் செயல்பாடு மற்றும் அவற்றின் இப்போதைய நிலை குறித்துப் பார்ப்போம்...

விவசாயம்:

மண்வள அட்டை:

விவசாய நிலங்களில் மண்ணின் தன்மையைப் பரிசோதனை செய்து, அதற்கேற்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட ஏதுவாகத் தொடங்கப்பட்ட திட்டம்தான் இது. இந்தத் திட்டத்தில் இதுவரை 19.36 கோடி மண் வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசு வழங்கியதைவிட மோடி தலைமையிலான அரசு அதிகளவிலான அட்டைகளை வழங்கியுள்ளது. 

ஈ-நாம்:

விவசாய விளைபொருள்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏதுவாக உருவாக்கப்பட்ட திட்டம் இது. ஆன்லைன் மூலம் நேரடியாக விவசாயப் பொருள்களை இத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யமுடியும். இந்தத் திட்டத்தில் இதுவரை 1.46 கோடி விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். அதோடு இதுவரை 36,000 கோடிக்கும் அதிகமான விற்பனை இதன் மூலம் நடைபெற்றுள்ளது.

பசுமைப் புரட்சி - கிரிஸோனடி யோஜனா (Krishonnati Yojana):

விவசாய வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய திட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டுவரை, இந்தத் திட்டத்திற்காக 33,269.946 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் விவசாயம் மேம்படவும், உற்பத்தியைப் பெருக்கவும் இதன்படி, பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் குறித்த விவரம் தெரியவில்லை.

மருத்துவம் :

ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat):

இந்தியா முழுவதும் உள்ள சுமார் 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கும் நோக்கில் `ஆயுஷ்மான் பாரத்' என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் பிரதமர் மோடி, 2018, செப்டம்பர் 23-ம் தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் இதுவரை 2,76,21,153 காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 14,927 மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம். இதுவரை 17,22,824 பேர் பயனடைந்துள்ளனர்.

மிஷன் இந்திரதனுஷ்:

நாடு முழுவதும் உள்ள 528 மாவட்டங்களில் 3.38 கோடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் பாதுகாக்கப்படுவார்கள். இந்த அளவு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை இதற்கு முன்னர் எந்த அரசும் நிறைவேற்றியதில்லை என்று மத்திய அரசு கூறிக் கொண்டாலும், ஏற்கெனவே இருந்த அரசுகளும் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தியுள்ளன.

ஜன் ஔஷதி திட்டம்:

ஜன் ஔஷதி திட்டத்தின் கீழ், ஏழை, எளிய மக்களுக்குக் குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருந்துகள் மலிவு விலையில் வழங்கப்படுகின்றன. ஜெனிரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலான இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் 5,111 மருந்துக் கடைகளில் செயல்பாட்டில் உள்ளது.

காப்பீட்டுத் திட்டங்கள்:

பிரதம மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா:

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்துள்ள 18 முதல் 70 வயதுடைய அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஆண்டுக்கு 12 ரூபாய் சந்தா செலுத்தினால் விபத்தில் உயிரிழப்புக்கான காப்பீடு, இரண்டு லட்சம் ரூபாயும், உடலுறுப்புகளை இழக்க நேரிட்டால் ஒரு லட்சம் ரூபாயும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை 1.70 கோடி பேர் இணைந்துள்ளனர்.  

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா:

நாடு முழுவதும் 18 முதல் 50 வயதுடைய வங்கிக் கணக்கு வைத்திருப்போர் இத்திட்டத்தில் சேரலாம். ஆண்டு ஒன்றுக்கு ரூ.330/- வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும். விபத்து மற்றும் எந்தக் காரணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் இரண்டு லட்ச ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இதுவரை 5.80 கோடி பேர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 

அடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana):

அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.1,000 முதல் 5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும். வங்கிக் கணக்கு உள்ள கிளைகளிலேயே இந்தத் திட்டத்தில் சேர முடியும். திட்டத்தில் சேர்ந்ததற்கு அடையாளமாக `ப்ரான் எண்’ வழங்கப்படும். அந்த எண்ணிற்கு நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். நாம் செலுத்தும் தொகையைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை இருக்கும். நாம் செலுத்தும் தொகையுடன் அரசின் சார்பில் சிறிய தொகை செலுத்தப்படும். இதுவரை 1.47 கோடி பேர் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 

அனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம்:

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறுவனங்களில், இந்தத் திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ‘பிரான்’ எண் தரப்படும். 60 வயதிற்குப் பிறகு நாம் கட்டிய பணம் கூட்டுவட்டியுடன் கிடைக்கும்.

இந்தியாவில் தயாரிப்போம் (Make In India):

இந்தியாவை உற்பத்தி அதிகமுள்ள நாடாக மாற்றி, புதிய வேலைவாய்ப்புகளை உண்டாக்கும் நோக்கிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும் `இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம், 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதனால், புதிய வேலைவாய்ப்புகளும், உற்பத்தியும் அதிகரித்துள்ளன.

ரி பிராண்டிங்:

மோடி தலைமையிலான மத்திய பி.ஜே.பி அரசு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடங்கிய 40-க்கும் அதிகமான திட்டங்களில் சுமார் 20 திட்டங்கள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்டவை. பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு வேறுபெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டன. எப்படியானாலும், தேர்தல் முடிவுகளால்தான், இப்போதைய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கணிக்க முடியும் என்பதே நம் கருத்து!