Published:Updated:

வீதியெல்லாம் வி.ஐ.பி-க்கள்... நாளுக்குநாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை!

வீதியெல்லாம் வி.ஐ.பி-க்கள்... நாளுக்குநாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை!
வீதியெல்லாம் வி.ஐ.பி-க்கள்... நாளுக்குநாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை!

``நான் படிச்ச படிப்புக்கு எந்த வேலையும் கெடைக்கல, கெடைக்கிற வேலைக்கும் என் படிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல!" 
இந்தியாவின் இளைய தலைமுறையின் இதயங்களில் ஒருமித்து எழுகின்ற ஓலம் இதுதான். `நூறு இளைஞர்களைக் கொடுங்கள், இந்த தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்" என்று விவேகானந்தர் சொன்னதை இந்தத் தேசத்தின் தலைவர்கள் பலரும் பல மேடைகளில் ஒலிக்கிறார்கள். ஆனால், கோடி இளைஞர்கள் வேலையின்றி இருப்பதைப் பற்றிய வருத்தம் அவர்களுக்குத் துளியும் இல்லை. 

வேலையில்லா பட்டதாரி என்ற தலைப்பில் படமெடுத்தால் இரண்டு பாகம் எடுக்கும் அளவுக்கு (தமிழ்)நாட்டில் வேலையில்லாதவர்களின் கூட்டம் அதிகமாகிவிட்டது. உலகில் அதிகளவு இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இன்று இங்குள்ள இளைய தலைமுறையினரின் தலையாய பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம். இது இளைஞர்களின் பிரச்னை மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்கு எழுந்துள்ள சவால். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பது, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பல மாற்றங்களை தேசமெங்கும் விதைக்கிறது. வேலையில்லா விரக்தி, போதை, தீவிரவாதம் என இளைஞர்களை தவறான பாதைகளில் திசை திருப்புகிறது. 

இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் படித்து முடித்து வெளியே வருகின்றனர். அவர்களில் 75 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் வேலைபெறத் தகுதியற்றவர்களாய் உள்ளனர் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. பெட்டிக்கடைகளுக்கு லைசென்ஸ் கொடுப்பதைப் போலப் பட்டிதொட்டியெங்கும் பொறியியல் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்தது அரசின் குற்றம் என்றால், கல்வித்தரத்தைப் பார்க்காமல் கட்டடங்களில் மயங்கி, தங்கள் குழந்தைகளைச் சேர்த்துக் குழிகளில் தள்ளியது பெற்றோரின் குற்றம். இப்படி அரசும், சமூகமும் செய்த பிழைகளால் கோடிக்கணக்கான இளைஞர்கள் திசைதெரியாது நிற்கின்றனர்.

ஒருதேசத்தின் குடிமகனுக்கு அவர்களுக்கான வேலைவாய்ப்பை அல்லது அதற்கான ஒரு கட்டமைப்பையும், சூழலையும் ஏற்படுத்திக் கொடுப்பது ஓர் அரசின் தலையாய கடமை. சமீபத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்த ஒரு சம்பவம் இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு ஆகச்சிறந்த உதாரணம். தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்பரவுத் தொழிலாளர் பணியிடங்களுக்கு 4,600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கலை மற்றும் அறிவியலில் பட்டம் பெற்ற மற்றும் முதுகலைப்பட்டதாரிகள். 

நம்மிடம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்புகள் குறித்தும், புதிய வேலைவாய்ப்புகள் குறித்தும் தெளிவான புள்ளிவிவரங்களும் தகவல்களும் கிடையாது. இன்றளவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் இ.எஸ்.ஐ போன்றவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையைக் கொண்டுதான் வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் அரசின் வேலைவாய்ப்புத் தகவல்களும் உள்ளன. வேலையில்லாதவர்கள் குறித்த துல்லியமான மதிப்பீடுகள் ஏதும் அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது.

கடைசியாக அதிகளவு வேலைவாய்ப்பு இல்லாதநிலை என்பது 1983- ம் ஆண்டு 8.3 சதவிகிதம் என்ற அளவிற்குப் பதிவாகியிருந்தது. அதற்குப் பின்னர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு 2018-ம் ஆண்டுதான் வேலைவாய்ப்பின்மை இந்தளவுக்கு உள்ளது. அதாவது 6.10 சதவிகிதம் என்ற அளவில் பதிவாகியுள்ளது. 1983 முதல் 2017 வரை வேலைவாய்ப்பின்மை என்பது சராசரியாக 4.12 சதவிகிதம் என்ற அளவில்தான் இருந்து வந்தது. இதுவே 2014-ம் ஆண்டு மிக அதிகளவில் குறைந்து 3.14  சதவிகிதமாகப் பதிவானது.  

இந்தியாவைப் பொறுத்தவரை இன்றைய நிலையில் மூன்று கோடியே பத்து லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாகவும், கடந்த 2018- ம் ஆண்டு மட்டும் ஒரு கோடியே பத்து லட்சம் பேர் தங்களின் வேலைவாய்ப்பை இழந்ததாகவும் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கிறது. 

குறிப்பாக நகர்ப்புறங்களைவிடக் கிராமப்புறங்களில் கடந்த 12 மாதங்களில் மட்டும் வேலைவாய்ப்பின்மை என்பது முன் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமன்றி நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்பும் குறைந்துகொண்டே வருகிறது. நகர்ப்புறங்களிலும் 13.84 சதவிகிதம் என்ற அளவிலிருந்த வேலைவாய்ப்பு, 13.66 சதவிகிதமாகச் சரிந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

சென்டர் பார் மானிட்டரிங் இந்தியன் எக்கனாமி (CMIE) என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில், 11-பிப்ரவரி 2019 நிலவரப்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவு 7.4 சதவிகிதமாக உள்ளது. அதுவே தமிழகத்தில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி 2.5 சதவிகிதமாக உள்ளது. நேஷனல் கரியர் சர்விஸ் (NCS) புள்ளிவிவரப்படி, தமிழகத்தில் வேலைக்காகப் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை, 2018 ம் ஆண்டு ஜூலை மாத நிலவரப்படி 86 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டத்தின் உண்மைநிலை குறித்து பொருளாதார நிபுணர் 

வி அனந்த நாகேஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்...

``இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதற்கு முக்கியக் காரணம் என்ன?’’

``நம்மிடையே சரியான புள்ளி விவரங்கள் ஏதுமில்லை என்பதே உண்மை. இங்கு இத்தனை கோடிப்பேர் வேலையின்றி இருக்கின்றனர் என்று சொல்வதில் அரசியல்சாயம் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவை நகர்ப்புற இந்தியா, கிராமப்புற இந்தியா என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பணிபுரிபவர்கள் சார்ந்த நிறுவனம் அரசுக்குத் தகவல் தெரிவிக்கும் நிறுவனமாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் கணக்கில் வந்துவிடுவார்கள். அரசுக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காத நிறுவனங்களில் பணி புரிவோர், எந்தவொரு கணக்கெடுப்பிலும் வருவதில்லை. நம்நாட்டில் அரசுக்குத் தகவல்களைத் தெரிவிக்கும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களைக் காட்டிலும், கணக்கில் வராத நிறுவனங்களே அதிகம். இதுவே இந்த மாபெரும் குளறுபடிக்கு மிக முக்கியக் காரணம். 

ஐஎல்ஓ (ILO) ஆய்வறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆசியக்கண்டத்தில் பணியாற்றுவோருக்குக் கிடைக்கும் ஆண்டு வருமானம் மற்றும் சலுகைகள் என்பது பணவீக்கத்தைத் தவிர்த்து 5.5 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது என்று கூறுகிறது. வேலைவாய்ப்பின்மையின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் இந்த அளவு வருமான உயர்வு கிடைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு’’. 

``கடந்த இரண்டு வருடங்களாக வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறதே...!’’

``பெரும்பாலும் அரசுக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காத நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் பணி நிரந்தரமற்றது. அதற்கான சரியான காரணங்களை நாம் கண்டறியமுடியாது. மேலும் இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சரியாக இல்லாத பட்சத்தில் இத்தனை கோடி பேர் பணி இழந்தார்கள், இத்தனை கோடி பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று நாம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது’’. 

‘‘புள்ளி விவரங்களின்படி, தேசிய அளவில் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவாகத் தெரிகிறதே?’’

``இந்தப் புள்ளிவிவரங்கள் மிகச்சரியானது என்னும் பட்சத்தில் தமிழகத்தில் வேலைக்கு ஆட்கள் பற்றாதநிலையில் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியது, இந்தப் புள்ளி விவரங்கள் அனைத்தும் எப்படி, யாரால் சேகரிக்கப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. இதன் உண்மைத்தன்மை, வெளிப்படைத்தன்மையை வைத்தே இதை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்’’.

``வேலையில்லாத் திண்டாட்டம் இல்லாத நிலையை உருவாக்க அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?’’ 

``சரியான அளவு பணிவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்றால், தற்போதிருப்பதைவிடச் சமுதாய அளவில் பெரிய புரட்சிகளும், போராட்டங்களும் நடந்திருக்கும். அப்படி எதுவும் நடக்காதபட்சத்தில் நிலைமை அந்தளவு மோசமாகவில்லை என்று தெரிகிறது. நாட்டிலுள்ள தொழில், வர்த்தக நிறுவனங்களை எந்த ஒரு பிரச்னையுமின்றி நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதே அரசின் பொறுப்பு. அப்படிச் செய்தால் பணிவாய்ப்புகள் அதிகரிக்கும். மக்களின் பொருளாதாரம் உயரும். இந்த நிலைமைக்கு மத்திய அரசை மட்டும் குறைசொல்வது தவறு. புதிய பணிகளை உருவாக்குவதில் மாநில அரசுகளுக்கும் முக்கியப் பங்குண்டு’’.

ஒரு துப்புரவுப் பணியாளர் பணிக்கு முதுகலைப்பட்டதாரிகள் பலரும் விண்ணப்பிப்பதே, நம் தேசத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதையும், படிப்புக்கேற்ற பணி கிடைப்பதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாகக் காட்டுகிறது. புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும், தனியாருக்கும் சரிவிகிதப் பங்கிருக்கிறது. வெற்று விவாதங்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விடாது...