Published:Updated:

`நகையை அடமானம் வைத்து செலவுசெய்தேன்!'- வேலூர் சுயேச்சை வேட்பாளர் வேதனை

`நகையை அடமானம் வைத்து செலவுசெய்தேன்!'- வேலூர் சுயேச்சை வேட்பாளர் வேதனை
`நகையை அடமானம் வைத்து செலவுசெய்தேன்!'- வேலூர் சுயேச்சை வேட்பாளர் வேதனை

பரப்புரை முடிந்த பிறகு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் ரத்து என அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதற்குப் பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தேர்தல் ரத்துகுறித்து தமிழ்நாடு  இளைஞர் கட்சி வேட்பாளர் நரேஷ் குமாரிடம் பேசினோம். "பிரசாரம் முடித்து வீடு திரும்பியவுடனே தலைப்புச்செய்தியாக 'வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து' என அறிந்தேன். இந்த முடிவு,தேர்தல் ஆணையம் எந்த அளவுக்குப் பொறுப்புடன் உள்ளது என்பதைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பரீட்சையில பையன் பிட் அடிச்சா அந்தப் பையனை வெளியேத்தனுமா இல்ல, பரீட்சையையே ரத்து செய்யணுமா? குறிப்பிட்ட ஒரு கட்சிதான் பணம் பட்டுவாடா செய்வதாக ஆதாரம் உள்ளதால், தேர்தல் ரத்து எனச் சொல்கிறார்கள்.

ஆனால், மற்ற பெரிய கட்சிகளும்கூட எங்கள் கண் முன்னே மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர். பெரிய கட்சிகள் கோடிகளில் தேர்தலுக்காக செலவுசெய்கின்றனர். எனக்கு 26 வயதுதான் ஆகிறது. என் சக்திக்கு இந்தத் தேர்தலுக்காக 1,20,000 ரூபாய் செலவு செய்துள்ளேன். 50,000 கடனும் 20,000 நகை அடைமானமும் வைத்துதான் செலவுசெய்துள்ளேன். மீண்டும் தேர்தல் வைத்தால் மட்டும் பெரிய கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ய மாட்டார்களா. மக்களாகப் பார்த்து ஓட்டுக்கு பணம் வாங்குவது அசிங்கம் என நினைக்கும் வரை இதை நிறுத்த முடியாது. 'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பதைப் போலதான். 11 நாள்களாக 2,00,000 மக்களை நேராகச் சந்தித்துள்ளோம்.

எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு வேலைக்குப் போனால்தான் சாப்பாடு. எல்லாத்தையும் விட்டுட்டுதான் நாங்கள்  சமூகத்துக்கு ஏதாவது பண்ணணும்னு ஓடிக்கிட்டு இருக்கிறோம். தெருத்தெருவா நேரடியா பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறோம். எனவே, வேலூர் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்வதைவிட ஆதாரத்துடன் பணம் பட்டுவாடா செய்வதாகப் பிடிபட்ட கட்சி வேட்பாளர்களைத் தகுதிநீக்கம் செய்து, தேர்தலை நடத்த வேண்டும். வேட்பாளராக எனக்கு எந்தத் தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை. நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவுசெய்ய வேண்டும்"  என்று வேதனையுடன் கூறினார்.

மோதிரம் சின்னத்தில் நிற்கும் நரேஷ் குமார், தோற்றாலும் ஜெயித்தாலும், வரும் ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு மரக்கன்று நடுவதாகவும், கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்சத்தில் 2 வருடத்தில் ராஜினாமா செய்வதாகப் பத்திரம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.