Published:Updated:

தமிழகத்தில் முடிந்துள்ள தேர்தல் அரசியலும்... முடியாத சவால்களும்!

தமிழகத்தில் முடிந்துள்ள தேர்தல் அரசியலும்... முடியாத சவால்களும்!
தமிழகத்தில் முடிந்துள்ள தேர்தல் அரசியலும்... முடியாத சவால்களும்!

இரண்டு திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், நீட் பிரச்னையில் இந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் நீட் விலக்கை எதிர் பார்த்திருக்கும் மாணவர்களுக்கும் அந்தக் கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும்.

“ஆக நாடு நலம்பெற நல்லாட்சி மலர்ந்திட...” என்றும், “அம்மாவின் ஆட்சி தொடர்ந்திட வாக்களிப்பீர்...” என்றும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஒலித்துக்கொண்டிருந்த அரசியல் கட்சிகளின் பிரசார சத்தங்கள் தமிழகத்தில் ஓய்ந்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலோடு, சட்டசபைக்குக் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கிறது. ஒரு மாதமாக அரசியல் கட்சிகள், மக்கள் பிரச்னைகளுக்காக எழுப்பிவந்த ஆதரவுக் குரல்களும், பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டி முன்னெடுத்த போராட்டங்களும் தேர்தல் முடிந்துள்ள நிலையில் வழக்கம்போல குறையத் தொடங்கிவிடும்.

இந்த நிலையில், 'தமிழகத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு முன் நிகழும்' என எதிர்பார்க்கப்பட்டு, நிகழாமல் போனதும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியதுமான முக்கிய இரண்டு விஷயங்கள் தமிழக அரசியலில் இன்னும் விடை தெரியாமல் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

எதிர்பார்க்கப்பட்டு நிகழாமல் போனது..?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழக அரசியலில் முக்கியமான பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருவது, ராஜீவ் காந்தி கொலையில் தண்டனைப் பெற்று, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களின் விடுதலைதான். அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் 'அவர்கள் ஏழு பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்' என பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பல்வேறு தருணங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கியமான வாக்குறுதிகளில் ஏழு தமிழர்களின் விடுதலையும் ஒன்றாகும். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பிருந்தே, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், ஏழு பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கைகளை முன்வைத்து மனிதச் சங்கிலிப் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களைத் தமிழகம் முழுவதும் முன்னெடுத்தார். அந்தப் போராட்டத்துக்குப் பல அரசியல் கட்சிகளும் தங்களின் முழு ஆதரவை தெரிவித்தன.

இந்தத் தொடர் சம்பவங்களுக்கு இடையே, தமிழகத் தேர்தல் அரசியலில் எதிர்பாராமல் நடந்த சம்பவம் பா.ம.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது. கூட்டணி அமைப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்புவரை, அ.தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க, கூட்டணி உறுதியானதும் நீட் தேர்வுக்கு விலக்கு, பூரண மதுவிலக்கு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அ.தி.மு.க-வுடன்  கூட்டணி சேர்ந்ததாக சாக்குச் சொன்னது. அவற்றில் முதன்மையான கோரிக்கையாக இடம்பெற்றிருந்தது ஏழு பேர் விடுதலைதான். பா.ம.க முக்கியத் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாலு, விகடனுக்கு அளித்த பேட்டியில்கூட "நாங்கள் அமைத்துள்ள கூட்டணியால் தேர்தலுக்கு முன்பாகவே ஏழு பேர் நிச்சயம் விடுதலையாவார்கள்” எனக் கூறியிருந்தார்.

அதேபோல்,  தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளின் தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஏழு தமிழர்களின் விடுதலைக்கான சாத்தியக்கூறுகள் இருக்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டன. இந்த நிலையில் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் முடிந்துள்ள நிலையில் பலரின் அரசியல் கணக்குகளும் பொய்த்து, எதிர்பார்க்கப்பட்ட ஏழு பேர் விடுதலை நிகழாமலேபோனது.

தேர்தல் வெற்றியும் அடுத்த சவாலும்:

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகக் கவனம்பெற்ற பிரச்னை நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது. நீட் தேர்வில் வெற்றிபெற முடியாததால், உச்ச நீதிமன்றம்வரை சென்றும், தடை பெறமுடியாமல் தற்கொலை செய்த அனிதாவின் மரணம், தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த காலங்களில் தமிழகத்தில் உள்ள பெருவாரியான கட்சிகளும் நீட் விலக்கிற்கான போராட்டங்களை முன்னெடுத்தன.

தமிழகத்தில் முக்கிய இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு விலக்கு உறுதி செய்யப்படும் என வாக்குறுதி அளித்து உள்ளன. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸும் ‘நீட்’ விலக்குக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது. இந்த ஆண்டு மே 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வின் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வரும் மே 23-ம் தேதி வெளியாகிவிடும். இரண்டு திராவிடக் கட்சிகளில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும், நீட் பிரச்னையில் இந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் நீட் விலக்கை எதிர் பார்த்திருக்கும் மாணவர்களுக்கும் அந்தக் கட்சிகள் எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றன என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கும். அதுவே, தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து வரவிருக்கும் அடுத்த சவால்...

ஆக, பிரசாரங்கள் ஓய்ந்தாலும் தேர்தல்கள் முடிந்தாலும்… தமிழக அரசியலில் சவால்களும் குழப்பங்களும் தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்குமா..?

அடுத்த கட்டுரைக்கு