Published:Updated:

`செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்!' - தேர்தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்

`செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்!' - தேர்தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்
`செலவழித்த பணத்தையாவது திருப்பிக் கொடுங்கள்!' - தேர்தல் ஆணையத்தின் மீது பாயும் சீமான்

``ஒரு வேட்பாளர் 70 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்யலாம் என்கிறார்கள். அந்தளவு தொகையை செலவு செய்ய எங்களால் முடியாது. 4, 5 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்ய முடிகிறது."

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை முடித்த கையோடு, தேர்தல் ஆணையத்துக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார் சீமான். ``பணத்தை அளவுக்கு அதிகமாகக் கொடுத்தார் என வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்குக் காரணம் சொல்கிறது தேர்தல் ஆணையம். அப்படியானால் அளவாகப் பணம் கொடுப்பதை அனுமதிக்கிறார்களா?" எனக் கொந்தளிக்கிறார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். 

நாடாளுமன்றத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``மக்கள் மனநிலையில் மாறுதல் வருவதற்கான அடிப்படையாகப் பார்க்கிறேன். தேர்தல் களத்தில் இளைஞர்களும் புதிய புதிய முகங்களும் ஏராளமாகத் தென்பட்டதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், `அண்ணா மனம் நொந்துவிடாதீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என என்னைப் பார்த்து இளைஞர்கள் கத்தும்போது மனம் நெகிழ்ந்தது. `அப்பா சொல்லி மகன் ஓட்டு போட்டால் அது தி.மு.க.', `மகன் சொல்லி அப்பா ஓட்டு போட்டால் அது நாம் தமிழர் கட்சி'. வேண்டுமானால் பாருங்கள், இந்தத் தேர்தல் மூலம் பல மாறுதல்கள் உருவாகும்''.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை விமர்சனம் செய்வது சரியானதா? 

``அது நடவடிக்கையே இல்லை. அதைப் பற்றிப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? ஆணையமே ஒரு நகைச்சுவைதான். எந்தவித ஒழுங்கும் இல்லை. வாக்குப்பதிவு எந்திரம் இயங்கவில்லை. அதைச் சரிபார்க்கும்போதே அது கோளாறாக இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்திருக்க வேண்டும். வாக்கு செலுத்தப் போகும் மக்களுக்குச் சரியான பேருந்து வசதிகளையும் செய்து தரவில்லை. பறக்கும் படை என்ற ஒன்றை அமைத்து தெருவில் போவோர் வருவோரையெல்லாம் சோதனை செய்தனர். ஆனால், பணம் கொடுக்கப்படுவதை இவர்களால் தடுக்க முடியவில்லை. வெளிப்படையாக வீடியோ காட்சிகள் வெளியே வந்தன. அதன்பேரில் நடவடிக்கை எடுத்திருக்கலாம். தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் பணம் கொடுத்தார் என்பதற்காக வேலூர் தொகுதி தேர்தலையே நிறுத்திவிட்டார்கள். ஏற்கெனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் கொடுத்த புகாரின்பேரில் தேர்தலை ரத்து செய்தார்கள். மீண்டும் ஆர்.கே.நகரில் அதே வேட்பாளர்தான் நின்று வெற்றி பெற்றார். பணத்தை அளவுக்கு அதிகமாகக் கொடுத்தார் என்றார்கள். அப்படியானால் அளவாகப் பணம் கொடுக்க ஆணையம் அனுமதிக்கிறதா... அளவுக்கு அதிகமாகக் கொடுத்தார்கள் என்றால் எத்தனை பேரைக் கைது செய்தார்கள்? வாக்குக்குக் காசு கொடுத்தால் ஓராண்டு சிறை எனப் பதாகை வைத்திருக்கிறார்கள். எத்தனை பேர் சிறைக்குப் போனார்கள்? 

இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகத்தான் பார்க்கிறோம். வேலூரில் பணம் கொடுத்த வேட்பாளரைத்தான் தண்டித்திருக்க வேண்டும். வேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டதா? வேறு எங்குமே பணம் கொடுக்கப்படவில்லையா. தேர்தலை நிறுத்தினால் எங்களைப் போன்றவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். தேர்தல் கட்டுத் தொகைக்கே (Deposit) நாங்கள் கஷ்டப்பட்டோம். ஒவ்வொரு முறையும் தேர்தல் ஆணையத்துக்கு முறையாகச் செலவுக் கணக்கைக் காட்டி வருகிறோம். ஒரு வேட்பாளர் 70 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்யலாம் என்கிறார்கள். அந்தளவு தொகையை செலவு செய்ய எங்களால் முடியாது. 4,5 லட்ச ரூபாய் வரையில் செலவு செய்ய முடிகிறது. வேலூர் தொகுதியில் நாங்கள் செலவழித்த தொகையை ஆணையம் திருப்பித் தந்துவிடுமா. இதற்கு யார் பொறுப்பேற்பது? கபடி விளையாட்டில்கூட தவறு செய்பவரை மட்டும்தான் வெளியே அனுப்புகிறார்கள். மொத்த அணிக்கும் தண்டனை கொடுக்கப்படுவதில்லை. இதில், வேதனையான விஷயம் என்னவென்றால், எங்களுடைய வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்கள் சின்னத்தைச் சிறியதாகப் போட்டு மறைத்துவிட்டார்கள். அது மங்கலாகத் தெரிந்தது. அந்தச் சின்னமே வெளியில் தெரியவில்லை. இதைக் களைவதற்காக நீதிமன்றம் போனேன். நேரம் இல்லை எனக் கூறி எங்களைக் கைவிட்டுவிட்டார்கள்''. 

`என்னுடைய அரசியல் வாழ்க்கையே இனிதான் தொடங்குகிறது' என்கிறார் எடப்பாடி. `இந்தத் தேர்தல் ஸ்டாலினுக்கும் சவாலானதுதான்' என்கிறார்கள். நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``இவர்கள் என்ன அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவது. எல்லாம் முடியப் போகிற காலங்கள்தான். அண்ணாவைப் போல 100 பேர் தி.மு.க.வில் உதயமானார்கள். மாட்டுவண்டியிலும் மிதிவண்டியிலும் நடந்து சென்றும் கட்சியை வளர்க்க அரும்பாடுபட்டார்கள். அதை அப்படியே இவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். இந்தக் கட்சியிலிருந்து பிரிந்த நடிகர் ஒருவர், இன்னொரு கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சி ஜெயலலிதா கையில் வந்து சேர்ந்தது. இந்தக் கட்சிகள் இனிமேல் தொடங்குவதற்கு என்ன இருக்கிறது. ஆள் மாறி மாறி இருப்பதால் என்ன நடந்துவிடப் போகிறது. இங்குக் கொள்கை தொடக்கம்தான் இருக்க வேண்டும். ஆனால், கொள்ளைத் தொடக்கம்தான் இருக்கிறது. என்றைக்கு இவர்கள் கூட்டத்துக்குப் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வந்தார்களோ, வாக்குக்குப் பணம் கொடுத்தார்களோ அன்றைக்கே இவர்கள் இறந்துவிட்டார்கள். இவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை''. 

தேர்தல் பிரசாரக் களத்தில் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றைச் சொல்லுங்கள்? 

``எந்தவித சுவரொட்டியும் விளம்பரமும் இல்லாமல் கூட்டங்களை நடத்தினோம். என்னுடைய குரல் காற்றில் கலந்து கரைந்தபோது, அதைக் கேட்டுத் திரண்ட மக்கள் ஏராளம். எங்கிருந்துதான் அவர்கள் வந்தார்களோ என ஆச்சர்யப்பட வைத்தது. அவர்கள்தான் என்னுடைய கனவு. அவர்கள்தான் என்னுடைய நம்பிக்கை''. 

மக்களவைத் தேர்தலில் 71 சதவிகித வாக்குப் பதிவு நடந்துள்ளது. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? 

``மக்கள் மத்தியில் வெறுப்பு இருக்கிறது. என்னுடைய பேச்சை ஒரு அரை மணிநேரம் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பினால் புரட்சி வந்துவிடும். ஆனால், அதற்கு இவர்கள் தயாராக இல்லை. இவர்கள் பணம் கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்தால்கூட, பிரமாண்ட கூட்டம் எனச் செய்தி போடுகிறார்கள். வாக்குக்குப் பணம் கொடுப்பதையும் காட்ட மறுக்கின்றனர். எந்த ஊடகமும் பணம் கொடுத்ததைப் பற்றி விமர்சிக்கவில்லை. கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான வழியில் செல்கிறார்கள். நல்ல அரசியலை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை, ஊடகங்களுக்கு இருக்கிறது. இதையும் மீறி சமூக வலைதளங்களை இளைஞர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகப் பெரிய மாறுதலைக் கொண்டு வரும். குறைந்த அளவு வாக்குப் பதிவுக்குக் காரணம், மக்கள் மத்தியில் இருக்கும் வெறுப்புகள்தான். கொள்கைகளே இல்லாமல் கூட்டணி சேர்வது, எந்த வாயால் விமர்சித்தோமோ அவர்களையே புகழ்வது ஆகிய நிகழ்வுகளை மக்கள் ரசிக்கவில்லை''. 

அடுத்த கட்டுரைக்கு