Published:Updated:

தினகரன் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: அ.ம.மு.க. பதிவின் பிண்ணணி என்ன?

தினகரன் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: அ.ம.மு.க. பதிவின் பிண்ணணி என்ன?
தினகரன் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்: அ.ம.மு.க. பதிவின் பிண்ணணி என்ன?

முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க-விலும், மாநில அரசியலிலும் ஏற்பட்டுவரும் குழப்பங்கள் - மாற்றங்களை தமிழக மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவைத் தேர்வு செய்தது, சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு, ஓ.பி.எஸ். தர்மயுத்தம், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு, கூவத்தூர் களேபரங்கள், எடப்பாடி பதவியேற்பு, ஆர்.கே. நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்தானது, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். இணைப்பு, இரட்டை இலைச் சின்ன வழக்கில் தீர்ப்பு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் உதயம் எனப் பல்வேறு பரபரப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தலும் தமிழகத்தில் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் முடிவடைந்திருக்கிறது. 

அதேநேரத்தில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க-வின் தலைவராக 50 ஆண்டுகள் பதவி வகித்த கருணாநிதியின் மறைவும் சேர்ந்து கொண்டதால், நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவரை, தமிழகம் இதுவரை காணாத ஒருநிகழ்வாக, ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

தேர்தல்வரை காத்திருந்தது போல, வாக்குப்பதிவுக்கு அடுத்தநாளே அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளராக இருந்த டி.டி.வி. தினகரன், பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகலா, பெங்களூரு சிறையில் உள்ள நிலையில், அவர் வகித்த பதவியை தினகரன் ஏற்றிருப்பதால், அவருக்கு இந்த மூவ் தெரியுமா என்பது தெரியவில்லை.

கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய ஏதுவாகவும், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் அ.ம.மு.க-வுக்கு பொதுவான சின்னம் கிடைக்க வேண்டும் என்பதாலும் என்று தினகரன்தரப்பில் கூறப்பட்டாலும், இந்த மூவ்-ன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகச் சந்தேகிக்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.

இதுபற்றி அவர்கள், ``ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்வரை, `எடப்பாடி ஆட்சியை அகற்றுவோம்'; 'இரட்டை இலைச் சின்னத்தை மீட்போம்', `அம்மாவின் உண்மையான விசுவாசிகள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்' என்று தொடர்ச்சியாகக் கூறி வந்த தினகரன், இப்போது ஆட்சியை அகற்றும் முடிவைக் கைவிட்டு, கட்சியை பதிவு செய்வதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் அந்தக் கட்சியினருக்கே ஏற்பட்டுள்ளது. தவிர, எதிர்காலத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியை தங்கள் அமைப்புடன் இணைப்பதுதான் சரியான நடவடிக்கை என்று தெரிவித்துக்கொண்டிருந்த, தினகரன் அவசரமாக பதிவு செய்ய முடிவு செய்ததன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது. இது தி.மு.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. 

எதிர்காலத்தில் அ.தி.மு.க என்ற ஒரு கட்சியே இல்லாத சூழலை உருவாக்குவதுதான் தினகரனின் திட்டம். தவிர, மத்தியில் புதிய அரசு அமையும் பட்சத்தில், அதிலும் குறிப்பாக பி.ஜே.பி. மீண்டும் ஆட்சியமைத்தால், அ.தி.மு.க-வைக் கழற்றி விட்டு, தினகரனை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும்விதமாக பி.ஜே.பி.-யின் பங்கு இருக்குமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது" என்கிறார்கள். 

`இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன்' என்று தொடர்ந்து கூறிவந்த தினகரன், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது அதுபற்றி வாயே திறக்கவில்லை. மேலும், இரட்டை இலையை மீட்டு, அ.தி.மு.க-வை மீட்பது என்பது உச்ச நீதிமன்றம், அதுதொடர்பான தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்ட பின் அதற்கு வாய்ப்பில்லை என்பதையும் அவர் உணர்ந்தே இருக்கிறார்.

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, எந்தச் சூழலிலும் தங்கள் நிலையைத் தக்கவைத்துக் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதே அ.ம.மு.க. கட்சிப் பதிவு முடிவின் அடிப்படையில் பரவலாகத் தெரியவந்துள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு