Published:Updated:

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'
'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

’ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்’ என்று, __வது முறையாக சொல்லியிருக்கிறார் ரஜினி. எத்தனையாவது முறை என்று சரியாக எண்ண முடியவில்லை. கம்ப்யூட்டரே கன்ஃப்யூஸ் ஆகிறது. அதனால்தான், அங்கே __ போடப்பட்டிருக்கிறது. பொறுத்தருள்க!

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

ஒரு காலம் இருந்தது. அப்போதெல்லாம் ரஜினி அரசியல் பேசினால், சிங்கத்தின் கர்ஜனைபோல பார்க்கப்படும். ஆனால், இப்போது ரஜினி அரசியல் பேசினால், சிறுவண்டின் ரீங்காரம் அளவுக்குக்கூட மதிக்கப்படுவதில்லை. ரஜினிக்கு இந்த நிலை வரக்காரணம் ரஜினியேதான். ’எப்போ வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’னு ரஜினி சொல்லி, ஆகிவிட்டது ஆண்டு இருபத்தி மூன்று. ஆனால், இன்னும் அதே வீட்டுவாசலில் அதே கோலத்தை போட்டுக்கொண்டிருக்கிறார். 

இந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் வேறு, ரஜினி எது சொன்னாலும் ‘தலைவர்.. தலைவர்...’ என்று போட்டு சாவடிக்கிறார்கள். நேற்றைய பேட்டிக்குக்கூட, ‘தலைவர் டோல்ட்’ என்று தலைப்பிட்டு கடுப்பேத்துகிறார்கள். அவர்கள் எந்த அர்த்தத்தில் ‘தலைவர்’ எனப் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. பார்க்கும் நமக்குத்தான் ’கெதக்’கென்று இருக்கிறது. ரஜினியின் சினிமா சார்ந்த செய்திகளுக்கு ‘தலைவர்’ அடைமொழி போடுவதில் தவறில்லை. அவர் உண்மையிலேயே சினிமாவில் அனைவருக்கும் ‘தலைவர்’ தான். ஆனால், அவரின் அரசியல் சார்ந்த செய்திகளுக்கும் ‘தலைவர்’ அடைமொழியிடுவது தமிழ்ச்சமூகத்தை அவமதிக்கும் செயல். அப்படியென்ன அரசியல் களத்தில் ரஜினி செய்துவிட்டார் ‘தலைவர்’ என்று அழைக்க? இந்த அக்கப்போர்களை நிறுத்தினாலே, தமிழன் கொஞ்சம் நிம்மதியாக இருப்பான். 

ஆகட்டும். 2017-க்குப் பிறகான ரஜினியின் பேட்டிகளைப் பார்த்தாலே, ரஜினி அரசியலின் ஆபத்துகளையும் அபாயங்களையும் அறிந்துகொள்ளலாம்.  'காலா' ரிலீஸுக்கு முன்பு தரிசனம் தந்து,  ”தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு சமூக விரோதிகள்தான் காரணம்” என்று கண்டுபிடித்துச் சொன்னார். ’போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்’ என்றும் கடுப்பைக் காண்பித்தார். அதற்கு, ‘தமிழ்நாடு சுடுகாடாகாமல் இருப்பதற்காகத்தான் போராட்டம் நடக்கிறது’ என்று, திருமாவளவன் திருப்பி அடித்தார். அப்போது மட்டுமல்ல, ராகவேந்திரா மண்டபத்தில் அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோதே, ’போராடுவதற்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்’ என்றுதான் கருத்துச் சொன்னார். இந்த மனநிலையால்தான், ’யார் நீங்க?’ என்ற கேள்வி எழுந்து, ‘நான் தான்ப்பா ரஜினிகாந்த்’ என்று பதில் சொல்லவேண்டிய நிலை, ரஜினிக்கு ஏற்பட்டது. ஆனாலும் அவரிடம் மாற்றமில்லை. 

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

குறித்துவைத்துக்கொள்வோம். ரஜினி ஆரம்பிக்கும் (?) கட்சி எதற்காகவும், எப்போதும் எந்தப் போராட்டங்களையும் நடத்தப்போவதில்லை. தேர்தல், அதன்மூலம் பதவி என்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு களமிறங்கப்போகிறவர், அவர். கமலிடம் கொள்கை கோட்பாடுகள் இல்லை என்றாலும், நிர்வாகரீதியிலான அரசியலை முடிந்தவரை முன்னெடுக்கிறார். ஆனால், ரஜினியிடம் அதைக்கூட நாம் எதிர்பார்க்க முடியாது. அவர் ஆரம்பிக்கும் கட்சி, இப்போது இருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் மாற்றாக இருக்கப் போவதில்லை, அவற்றின் நீட்சியாக மட்டுமே இருக்கப்போகிறது. இதை, ‘எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொடுப்பேன்’ என்று அறிவித்து, தெளிவாகவே அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

'தர்பார்' போஸ்டர் வெளியான தினத்தில் வெளியே வந்து, ‘நதிநீர் இணைப்பை தேர்தல் அறிக்கையில் சொன்னது சூப்பர். பா.ஜ.க-வுக்கு எனது பாராட்டுகள்’ என்றார்.  ‘நதிநீரை இணைத்தால் நாட்டில் வறுமை ஒழிந்துவிடும்’ என்றும் கருத்து சொன்னார். இருக்கட்டும். ஆனால், நதிகள் இணைப்புக்கு பா.ஜ.க இதுவரை செய்திருப்பது என்ன என்பதை, கொஞ்சம் விசாரித்துவிட்டு வந்து கருத்து சொல்லியிருக்கலாம். குறைந்தபட்சம், பா.ஜ.க ஆட்சியில் கங்கை படும் பாட்டை அறிந்துகொண்டேனும் சொல்லெடுத்திருக்கலாம். இந்தியாவின் ஜீவநதிகள் எத்தனை, அதன் தன்மைகள் என்ன, அதன் வழித்தடங்கள் எப்படிப்பட்டவை என எதையுமே அறியாமல், ‘நதிகள் இணைப்பு’ என்பதை உத்தம யோசனையாக முன்னிறுத்துவது, இன்னொரு பிழை. 

உண்மையில், காவிரிப் பிரச்னையில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்று தெரியாமல் இருந்த நேரத்தில், ‘நதிகள் இணைப்பு’ என்பதை பாதுகாப்பு கவசமாகப் பயன்படுத்த ஆரம்பித்தவர்தான் ரஜினி.  அதை அப்படியே மெயின்டெயின் செய்கிறார். அவ்வளவுதான்! தமிழ்நாட்டுக்கு தண்ணீரைத் திறந்துவிடாமல் கர்நாடகம் துரோகம் இழைக்கும் போதெல்லாம், ‘நதிகளை இணைத்தால் இதெல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லி தப்பித்துவருகிறார். முதல்முறை தப்பிக்க சொல்வது வேறு. ஆனால், இத்தனை ஆண்டுகளாக இதையே சொல்லிக்கொண்டு இருப்பதெல்லாம்.  

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

’2.0’ ரிலீஸுக்கு முன்பு, ஏர்போர்ட்டில் ரஜினி பேசியதையும் மறக்க முடியாது. "எந்த ஏழு பேர்?" என்று அப்போதுதான் கேட்டார். “ஏழு கோடி பேருக்கு தலைவனாக விரும்புபவர் , எந்த ஏழு பேர் என்று கேட்கிறார்” என்று ஊமைக்குத்தாக குத்தினார்கள் சமூக ஊடகவாசிகள். இதுகூட பரவாயில்லை. ரஜினி "எந்த ஏழு பேர்?" என்று கேட்டு சில மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை. அக்கா தமிழிசை ஆஜராகிறார். "கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை. மீண்டும் கேள்விகளைக் கேட்டால் வேறு பதிலை அளிப்பார்" என்று சொல்கிறார். அவர் சொல்லியது மாதிரியே அடுத்த நாள் வேறு பதில் சொன்னார் ரஜினி. இப்படி ரஜினி எதில் சிக்கினாலும், உடனே காப்பாற்ற வருகிறார்கள் காவிக்கட்சியினர். ரஜினி பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று சொல்ல வரவில்லை. ஆனால், பா.ஜ.க ரஜினிக்கு ஆதரவாக இருக்கிறது.

அதே செய்தியாளர் சந்திப்பில், ’பா.ஜ.க ஆபத்தான கட்சியா?’ என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. “ஆபத்தான கட்சியென்று எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பா.ஜ.க ஆபத்தான கட்சி. மற்றபடி மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று சொன்னார். மக்கள் எப்படிச் சொல்வார்கள்... தேர்தலில்தானே சொல்வார்கள்? தமிழ்நாட்டு மக்கள்தான் தேர்தலுக்குத் தேர்தல் சொல்கிறார்களே  ’ஆபத்தான கட்சி’ என்று. ஏற்கலாமே. நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சிசெய்த ஒரு கட்சியைப் பற்றி ஒரு அபிப்ராயமும் இல்லாத ரஜினியின் அரசியலை எப்படி வியப்பதென்று தெரியவில்லை. ஆனால், ’புதிய இந்தியா பிறந்துவிட்டது’ என்று, மோடிக்கு பிராண்ட் அம்பாசிடராகச் செயல்பட மட்டும் மறக்கவில்லை. கமலாவது அதற்கு மன்னிப்பு கேட்டார். ரஜினிக்கு மன்னிப்பு கேட்பதற்கும் மனம் வரவில்லை.    இன்னும் இந்த அரசு பெற்றுப்போடும் புதிய இந்தியாக்கள் அனைத்துக்கும், ஆதரவு அளிப்பார் போலும் ரஜினி!

”பத்து பேர் சேர்ந்து ஒருவனை எதிர்க்கிறார்கள். எதிர்ப்பவன் பலசாலியா... எதிர்க்கப்படுபவன் பலசாலியா” என்றும் கேட்டுவைத்தார். மோடியை மனதில் வைத்து கேட்ட கேள்வி அது. 1991 - 1995 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாகூட பலசாலிதான். தி.மு.க - தமிழ் மாநில காங்கிரஸ் - பா.ம.க போன்ற கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்து, ஜெயலலிதாவை 1996-ல் வீழ்த்தின. அந்தக் கூட்டணிக்கு ‘வாய்ஸ்’ கொடுத்தவரும் இதே ரஜினிதான். ஆக, அரசியலில் பலசாலியா பலமற்றவரா என்று பார்ப்பதைவிட, நல்லது செய்தாரா தீமை செய்தாரா என்பதே முக்கியம்.  அந்த பலசாலி ஹீரோவா வில்லனா என்றும் பார்க்க வேண்டும். ஆனால் ரஜினியோ, ‘வெற்றி பெறுகிறார்கள்’ என்பதை மட்டுமே வைத்து எவரையும் ஆதரிக்கக்கூடியவராக இருக்கிறார். இது அபாயமான போக்கு. 

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

அப்போது இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது, ‘எப்போது கட்சி ஆரம்பிப்பீர்கள் என்று. ’நான் இன்னும் முழுசாக அரசியலில் இறங்கவில்லை’ என்று பதில் சொன்னார். அதாவது, அதுவரை போட்டிருந்த கோடுகளை எல்லாம் அழித்துவிட்டு, மீண்டும் புதுக்கோடு கிழித்தார். 2017-ம் ஆண்டுதான், "அரசியலில் இறங்குவது உறுதி. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போகிறேன்" என்று சொல்லியிருந்தார். ‘ஆனந்த சுதந்திரம்’ அடைந்துவிட்டதைப் போல, துள்ளிக்குதித்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால், அதற்குப் பிறகு எப்போது கேட்டாலும் ’இன்னும் முழுசாக இறங்கவில்லை’ என்றே பதில் சொல்லிவருகிறார். முதல்வர் நாற்காலியில் அமரும்போதுதான் ‘முழுதாக அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்பார் போல. ஆனால், அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை. ’அடுத்த ஓட்டு ரஜினிக்கே’ என்று காத்திருக்கும் ரசிகர்களை நினைத்தால்தான், அந்தோ பரிதாபமாக இருக்கிறது. 

ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், இப்போதிருக்கும் கட்சிகள் ‘கள அரசியல், கட்சி அரசியல்’ என இரண்டு தளத்திலும் பயணிக்கின்றன. தேர்தல்களில் போட்டியிடும் அதே வேளை, ஏதேனும் பிரச்னையென்றால் களத்தில் இறங்கிப் போராடவும் செய்கின்றன. ஆனால், ரஜினி புதிதாக ஒரு அரசியல் பாதையைப் போடுகிறார். அதாவது, எந்தப் போராட்டமும் வேண்டாம், அறிக்கைகள் வேண்டாம், கள ஆய்வுகள் வேண்டாம், நேரடியாகத் தேர்தல், அதில் வெற்றி, அப்படியே பதவி என்ற அரசியலை முன்னெடுக்க முனைகிறார். நடுவில் மக்கள் என்று சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்குப் பிரச்னைகள் இருக்கும், அதற்காகக் களம் இறங்க வேண்டும் என்பதையே மறக்கிறார். இது ஆபத்தானது! ‘அவரது அரசியலுக்கு அர்த்தமுள்ள  ஓர் அடைமொழி வைக்க வேண்டுமானால், ‘பதவி அரசியல்’ என்று வைக்கலாம். 

”அறிக்கைகள், ஆய்வுகள் போன்ற அன்றாட அரசியல் பேசுவது அவருக்குப் பிடிக்காது’ என்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். அப்படியென்றால் எந்த அரசியல் பேசுவது ரஜினிக்குப் பிடிக்கும்? ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒருதரம் போயஸ்கார்டன் வீட்டுவாசலுக்கு வந்து, ‘அரசியலுக்கு வருவேன். ஆமென்’ என்று சொல்லிச்செல்லும் அரசியல்தான் பிடிக்குமோ? அன்றாட அரசியலில்தானே அதிகாரத்தின் அட்டூழியங்களைக் கண்டிக்க முடியும்... அவல நிகழ்வுகளுக்கு எதிர்க்குரல் எழுப்ப முடியும்? இது எதற்குமே ரஜினியிடம் இருந்து எதிர்வினை வராது என்றால் எப்படி? அப்படியே வந்தாலும், எந்தத் தரப்பையும் பாதிக்காத மாதிரி ஒரு கருத்தைச் சொல்லிவிட்டு கதவைச் சாத்திவிட வேண்டியது. சமீபத்தில் கொடுத்த பேட்டியில், தேர்தல் நேர சாதிக்கலவரங்களைப் பற்றி கேட்கிறார்கள்.  அதற்கு, ‘முன்பு நடந்ததைவிட இது குறைவுதான்’ என்று கருத்து சொல்கிறார். இதுதான், சாதிமத பேதமற்ற ஆன்மிக அரசியலை கொள்கையாக அறிவித்தவரின் அதிகபட்ச எதிர்வினை. இதனாலேயே, ’இப்போதிருக்கும் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் ரஜினி மாற்றாக இருக்கப்போவதில்லை’ என்பதை அடித்துச்சொல்ல வேண்டியிருக்கிறது. 

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

’எந்தக் கட்சியையும் சாடாமல் அரசியல் செய்வதுதான் அரசியல் நாகரிகம்’ என்று, புது பொழிப்புரையும் கொடுத்துவருகிறார், ரஜினி. எப்படி முடியும்? அரசியல் கட்சி தொடங்கப்போகிறாரா அல்லது அரிசிக்கடை தொடங்கப்போகிறாரா என்று தெரியவில்லை. அந்த அரசியல் நாகரிகத்தில், ’எவரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது’ என்ற பாதுகாப்பு மனநிலையைத் தவிர, வேறெதுவும் இல்லை. இப்படி, பயத்தாலும் பதற்றத்தாலும் பாதுகாப்பின்மையாலும் சூழப்பட்டிருப்பவர் எதற்காக அரசியலுக்கு வர வேண்டும்? ஒரே காரணம்தான்... மேலே சொன்னது போல, பதவி என்பதற்காக மட்டுமே ரஜினி அரசியலுக்கு வருகிறார். அர்ஜுனனின் கண்ணுக்கு கிளியின் கண் மட்டுமே தெரிந்ததைப் போல, ரஜினியின் கண்களுக்கு முதல்வர் நாற்காலி மட்டுமே தெரிகிறது. இல்லை  அவரது செயல்கள் அப்படித்தான் புரிந்துகொள்ள வைக்கிறது. அதனால்தான், ’ஏட்டய்யா கூடதான் போவேன்’ என்பதைப்போல, ’சட்டமன்றத் தேர்தலில் மட்டும்தான் போட்டியிடுவேன்’ என்கிறார். 

ஆக, ரஜினி அரசியல் புரட்சிக்காகவோ, சமூக முன்னேற்றத்துக்காகவோ கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை. ’ஒருமுறையேனும் அந்த முதல்வர் நாற்காலியில் நாம் அமர்ந்துவிட வேண்டும்’ என்ற ஒற்றை எண்ணத்தில் மட்டுமே அரசியலுக்கு வரத் துடிக்கிறார் என்பது போலத்தான் தெரிகிறது. ’வந்தா கரெக்டா வரணும்... கரெக்டா வந்தா கரெக்டா அடிக்கணும்... ’என்று, ஏதோ புதுத்தொழில் தொடங்கப்போகும் தொழிலதிபர் போலவே ரஜினி பேசுவது அதனால்தான். அவரது அரசியலின் மையம் ’பதவி’ மட்டுமே. அவரது இலக்கு, அந்தப் பதவி தரும் அந்தஸ்து மட்டுமே. வாஜ்பாய், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மோடி என்று ரஜினி வியக்கும் எல்லோருமே, பெரும்பதவிகளில் இருந்தவர்கள். இவர்கள் மட்டுமே ரஜினிக்கு எப்போதும் உவக்கிறார்கள். இதுவே, ரஜினியின் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்துகிறது.

'போதும் ரஜினி... இதுக்கு மேல பொறுமை இல்லை!'

 ஒரு பேட்டியில், 'நான் முட்டாள் அல்ல' என்று சொன்னார், ரஜினி. ’இதோ வருகிறேன் அதோ வருகிறேன்’ என்று 30 வருடங்களை முடித்த ரஜினி முட்டாளா என்ன? இல்லவே இல்லை. அவர் தெளிவாகவே இருக்கிறார்.  இந்தியாவில் இருக்கும் சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்களில், ரஜினி அளவுக்கு ரசிகர்களை அலைக்கழித்த இன்னொருவர் இருக்க முடியாது. ’கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்’ என்று ரஜினி பாட்டு பாடிக்கொண்டிருந்தபோது, ஆந்திரத்தின் பவன் கல்யாணுக்கு  10 வயசு. இப்போது, அவர் அரசியலில் இறங்கி, கட்சி ஆரம்பித்து, ஆறு ஆண்டுகள் களத்தில் பணியாற்றி, தேர்தலில் போட்டியிட்டு, முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவரோ, ‘இப்போ வரேன்... அப்போ வரேன்..’ என்று போக்குக்காட்டியே பொழப்பு நடத்துகிறார்.

’பால் எப்போது பொங்கும்’ என்று ஆசை ஆசையாக காத்துக்கிடக்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். ’பாலாக இருந்தால் பொங்கும், பச்சைத்தண்ணீர் பொங்கவே பொங்காது’ என்பதை அவர்களுக்கு யார் எடுத்துச்சொல்வது?

அடுத்த கட்டுரைக்கு