Published:Updated:

`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி

`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி
`சசிகலாவை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!' - சிறை மர்மம் சொல்லும் பெங்களூரு புகழேந்தி

`துரோகிகள் கையிலிருந்து அ.தி.மு.க-வை மீட்டெடுக்க சின்னம்மா தலைமையில் அணிதிரள்வோம்' என்ற முழக்கம் எங்கு இருக்கிறதோ அந்த இடத்திலிருந்து என்னுடைய பணிகளைச் செய்வேன். இதுதான் என்னுடைய முடிவு.

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தனிக்கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான மனுவை இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். மே 19 அன்று நடைபெற இருக்கிற 4 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்துக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது அ.ம.மு.க தலைமை. அதில், `தியாகத் தலைவி சின்னம்மாவின் வாழ்த்துகளோடு' என்ற வாசகம் இடம் பெற்றிருக்கிறது. தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பு, குறித்து அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பேசினோம். 

தனிக் கட்சியாகப் பதிவு செய்யும் மனுவை இன்று சமர்ப்பித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

``தலைமையில் பேசி முடிவெடுத்து கட்சியாகப் பதிவு செய்கிறார். நீதிமன்றத்தைக் காரணம் காட்டி இதைச் செய்கிறார். இதற்கு மேல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை''. 

பொதுச் செயலாளராக தினகரன் தேர்வான அன்று உங்களுக்கு அழைப்பு வந்ததா? 

``தினகரன் உதவியாளர் ஜனா என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். நான் அங்கு வந்து சேருவதற்கு தாமதமாகிவிட்டது. சிறைக்குச் செல்வதற்கு முன்னர் அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த சசிகலா, துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார். இனி பொதுச் செயலாளர் தினகரன் என்றால் சசிகலா யார்? இனி அவரால் எப்படி இரட்டை இலைக்காகப் போராட முடியும். அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என்பதற்காகத்தான் அ.ம.மு.க.வைத் தொடங்கினோம். இதற்காக நீதிமன்றம் சென்றும் முடியாததால், தனிக்கட்சியாகச் செல்வதாகக் கூறுகிறார் தினகரன். `இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்' என்பதுதான் தொண்டர்களின் கருத்து''. 

`சசிகலாவை அ.ம.மு.க-விலிருந்து நீக்கிவிட்டோம்' என வெளிப்படையாக யாரும் சொல்லவில்லையே? 

``அ.தி.மு.க-வுக்கு துணைப் பொதுச் செயலாளராக இருந்த தினகரன், இப்போது அ.ம.மு.க-வின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். அவரைத் தலைவராகவும் நீண்டகால நண்பராகவும் பார்த்து வருகிறேன். அவர் எந்த உயர் பதவிக்குச் சென்றாலும் தனிப்பட்ட முறையில் என்னுடைய வாழ்த்துகள் உண்டு. அதேநேரத்தில், `எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை சசிகலா வழிகாட்டுதலுடன் மீட்டெடுப்பதே லட்சியம்' என்ற முழக்கத்தின் அடிப்படையில் தற்காலிக ஏற்பாடாகத்தான் அ.ம.மு.க-வைத் தொடங்கினோம். ` கட்சியை மீட்போம், இரட்டை இலையை மீட்டெடுப்போம்' என முழக்கமிட்ட தினகரனின் வார்த்தைகள் நினைவில் இருக்கின்றன. சின்னம்மா வழியில் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதில் எந்தவித சுணக்கமும் இல்லை. இதனை அடிப்படையாக வைத்து என்னுடைய பணிகள் தொடரும். இதுதான் என்னுடைய முடிவு''. 

டி.டி.வி. பதவியேற்றுக் கொள்வதற்கு சசிகலா ஒப்புதல் கடிதம் கொடுத்ததாகச் சொல்கிறார்களே? 

``தினகரன் என்கின்ற தலைவர் எந்தப் பதவியை அடைந்தாலும் பாராட்டுகிறேன். ஆனால், அவரும் என்னிடத்தில் சசிகலா கடிதம் கொடுத்ததாகச் சொல்லவில்லை. நானும் அதைப் பற்றிக் கேட்கவில்லை. அந்தக் கடிதம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை''.

கர்நாடக சிறைத்துறைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. வினய் கமிஷன் அறிக்கையின்பேரில் எஃப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்பட்டுவிட்டது. நீங்களும் விவேக் ஜெயராமனும் தொடர் விசாரணையில் இருக்கிறீர்கள். இது சிக்கலை ஏற்படுத்தும் வழக்கு என்கிறார்களே? 

``மத்திய அரசை எதிர்த்ததற்காக என் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. சேலத்தில் பேசியதற்காக என் மீது எடப்பாடி அரசு தேசத்துரோக வழக்கு தொடுத்தது. சிறைத்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்த புகாரின் பேரில் தேவையற்ற விசாரணையைச் சந்தித்து வருகிறேன். சொல்லப் போனால், பல வகைகளில் என்னைக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். தொடர் துன்பத்தை அனுபவித்து வரும் ஒரே நபராக நான் இருக்கிறேன். வேறு வழியில்லை. எல்லாவற்றையும் சந்தித்துதான் ஆக வேண்டும்''. 

கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் இறுதிக்கட்டத்தில் கைது நடவடிக்கைகள் பாயலாம் என்கிறார்களே? 

``சசிகலாவின் உறவினர்களும் மற்றவர்களும் இந்த விசாரணையைச் சர்வசாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பதுதான் வேதனையை அளிக்கிறது. இந்த விசாரணை ஏன் தேவையில்லாமல் தொடர்கிறது என்றும் தெரியவில்லை. இதையெல்லாம் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள் என்றும் புரியவில்லை''.

அப்படியானால், இதன் பின்னணியில் யார் மீதாவது உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 

``காங்கிரஸ் ஆதரவு ஆட்சி நடப்பதால், மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. ஒன்றும் இல்லாத விஷயத்தை பெரிதாக்குகிறார்கள். வினய் கமிஷன் அறிக்கையில், சிறைத்துறை விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி வினய் கமிஷன் கூறியிருப்பதால் ஒரு வருட காலத்தில் நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவுக்குக் குறைக்கப்பட வேண்டிய நாள்களைக் குறைப்பார்களா என்ற சந்தேகமும் வருகிறது. வினய் கமிஷன் அறிக்கையின் பல இடங்களில் தவறுகள் இருக்கின்றன. இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, சட்டபூர்வமாகச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் சசிகலாவின் நன்னடத்தை விதிகளின்படி நாள்கள் குறைக்கப்படும்''. 

சட்டரீதியாக யாரும் முன்னெடுக்கவில்லை என்கிறீர்கள். அப்படியானால், சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என யாராவது விரும்புகிறார்களா? 

``அது அவர்களுக்குத்தான் தெரியும். நான் எப்படிச் சொல்ல முடியும். மிகவும் வேதனையாக இருக்கிறது''.

அடுத்த கட்டுரைக்கு