Published:Updated:

`பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன்!' - உச்ச நீதிமன்றத்திடம் ராகுல் வருத்தம்

கலிலுல்லா.ச
`பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன்!' - உச்ச நீதிமன்றத்திடம் ராகுல் வருத்தம்
`பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன்!' - உச்ச நீதிமன்றத்திடம் ராகுல் வருத்தம்

உச்ச நீதிமன்றமே பிரதமர் மோடியைத் திருடன் எனக் கூறிவிட்டது, என்று விமர்சித்த ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகள் நாடுமுழுவதும் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மே19-ம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. வாக்குகள் 23-ம் தேதி அன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் தேர்தல் முடிந்தபோதிலும், மற்ற மாநிலத் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. பிரசாரத்தின்போது, ஆளும்கட்சியை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது வழக்கம். அந்த வகையில் அமேதியில் பிரசாரம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, ``ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் சௌக்கிதார் மோடியை உச்ச நீதிமன்றமே திருடன் என அறிவித்துவிட்டது” என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாகப் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் சார்பில் ராகுல்காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, ``ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்ச நீதிமன்றம் சொன்னதாகப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கில் கூறிவிட்டேன். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பா.ஜ.க எம்.பி மீனாட்சி லேகி, ``ராகுல் அவருடைய சொந்தக் கருத்தை நீதிமன்றம் கூறியதாகச் சொல்லி, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தப் பார்க்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.