Published:Updated:

` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்?' - தினகரன் முடிவின் பின்னணி 

` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்?' - தினகரன் முடிவின் பின்னணி 
` எங்கே போனார் டாக்டர் வெங்கடேஷ்?' - தினகரன் முடிவின் பின்னணி 

`தன்னை மீறி கட்சிக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது, குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்.

` அ.ம.மு.க பொதுச் செயலாளராகப் பதவியேற்றுக்கொண்ட டி.டி.வி.தினகரன், குடும்ப உறவுகளைக் கட்சி வளையத்திலிருந்து ஒதுக்கி வைக்கத் தொடங்கியிருக்கிறார். அதில், லேட்டஸ்ட் வரவு டாக்டர் வெங்கடேஷ்' என்கின்றனர் அ.ம.மு.க வட்டாரத்தில். 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அடைக்கப்பட்டார் சசிகலா. சிறைக்குச் செல்வதற்கு முந்தைய நாள்களில் டி.டி.வி.தினகரனையும் அவரின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷையும் கட்சிக்குள் சேர்ப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல இருந்ததால் அ.தி.மு.க தொடர்பான விவகாரங்களைக் கையாளும் வகையில் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார் தினகரன். ` சிறையில் இருந்தாலும் நீங்கள் உத்தரவிடலாம். நாங்கள் அதைச் செயல்படுத்துகிறோம்' எனவும் சசிகலாவுக்கு உறுதிமொழி கொடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம், டாக்டர் வெங்கடேஷ் கட்சி உறுப்பினராக மட்டும் தொடர்ந்தார். இதன்பின்னர், சசிகலாவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கிளம்பியபோது, டெல்லியில் நடைபெற்று வந்த வழக்கு விவகாரங்களை கவனித்துக்கொண்டிருந்தார் வெங்கடேஷ். தற்போது அ.ம.மு.க தொடர்பான கூட்டம் ப்ளஸ் ஆலோசனைகளில் வெங்டேஷின் முகம் தென்படுவதில்லை. 

`` அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், மதுரையில் நடந்த கூட்டத்தின் மேடையில் அமர வைக்கப்பட்டார் வெங்கடேஷ். அடுத்ததாக, திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் வெங்டேஷைப் புகழ்ந்து மேடையில் சில வார்த்தைகள் பேசப்பட்டன. அவருடைய மாமனார் பண்ணைவயல் பாஸ்கருக்கு அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பதவியும் வந்து சேர்ந்தது. தஞ்சை மாநகரச் செயலாளராக தன்னுடைய நண்பருக்குப் பதவி வாங்கித் தரும் அளவுக்குச் செல்வாக்காக செயல்பட்டு வந்தார். தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அவருடைய மாமனார் பாஸ்கருக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார். இந்தக் கோரிக்கைக்குத் தினகரன் செவிசாய்க்கவில்லை. இருப்பினும், `தேர்தல் பிரசாரத்துக்காகவாவது செல்லலாம்' என நினைத்தார். இந்த எண்ணத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுவிட்டார் தினகரன்" என விவரித்த அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், 

`` அ.தி.மு.க-வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலாளராக சில காலம் வெங்கடேஷ் இருந்தார். அப்போதே அவர் மீது ஏராளமான புகார்கள் சொல்லப்பட்டன. இதையடுத்து, கட்சிப் பதவியிலிருந்து அவரை நீக்கினார் ஜெயலலிதா. இதன் பின்னணியில் தினகரன் இருந்ததாகவும் தகவல் வெளியானது. அவ்வப்போது இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டு வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. கடந்த ஓரிரு மாதங்களாகக் கட்சியின் உள்விவகாரங்களில் வெங்கடேஷ் தலையிடுவதில்லை. `தன்னை மீறி கட்சிக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது, குடும்ப ஆதிக்கத்தை அனுமதிக்கக் கூடாது' என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன்" என்றார் விரிவாக. 

2011 டிசம்பர் 19-ம் தேதி ஆட்சிக்கு எதிராகச் சதி செய்ததாகக் கூறி போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார் சசிகலா. அடுத்த மூன்றே மாதங்களில் சசிகலாவை மட்டும் கார்டனுக்குள் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ` நடராசன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராமச்சந்திரன், ராவணன், மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், மகாதேவன், தங்கமணி, கலியப்பெருமாள், பழனிவேலு, தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி, சந்தானலட்சுமி, சுந்தரவதனம், வைஜெயந்தி மாலா ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை' என அறிவித்தார்.

இதன் பின்னர், சசிகலா உறவினர்கள் ஒவ்வொருவராகக் கைது நடவடிக்கைக்கு ஆளாக்கப்பட்டனர். டாக்டர் வெங்கடேஷ் மீதும் நில அபகரிப்புப் புகார் பாய்ந்தது. தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடியில் உள்ள சந்தான லட்சுமி என்பவரின் வீட்டை அபகரித்ததாக எழுந்த புகாரில் கைதானார். இதையடுத்து, நான்காண்டுகளாக அ.தி.மு.க-வில் இருந்து ஓரம்கட்டப்பட்டவர், சசிகலா தயவால் மீண்டும் நுழைந்தார். அ.ம.மு.க-விலும் செல்வாக்காக வலம் வந்தவரை குடும்ப ஆதிக்கத்தைக் காரணம் காட்டி, ஓரம்கட்டி வைத்திருக்கிறார் தினகரன். 
 

அடுத்த கட்டுரைக்கு