Published:Updated:

`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை!' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி

`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை!' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி
`30 சதவிகிதப் பணம்கூட போய்ச் சேரவில்லை!' - தேர்தல் செலவுக் கணக்கால் அதிர்ச்சியில் உறைந்த எடப்பாடி

`வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால், பணம் முறையாகச் சென்றுசேரவில்லை. அப்படியென்றால், இந்த வாக்குகள் எல்லாம் யாருக்கு விழுந்திருக்கும்?' என்ற அச்சத்தில் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உள்ளனர்.

அ.தி.மு.க சார்பில் நான்கு தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுவிட்டது தலைமைக் கழகம். `நாடாளுமன்றத் தேர்தல் செலவுக்காகத் தலைமை கொடுத்த பணம் சரியாகச் சென்றுசேரவில்லை. இதுகுறித்த கணக்குவழக்குகளைக் கேட்டிருக்கிறார், எடப்பாடி பழனிசாமி' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க தரப்பில் விருப்ப மனு பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மனு அளித்தவர்களிடம் பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் நேர்காணல் நடத்தினர். `பட்டியல் 22-ம் தேதி வெளியிடப்படும்' எனக் கூறியிருந்தார் முதல்வர். நேற்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடுவது தொடர்பான ஆலோசனை நடந்தது. இந்தக் கூட்டத்தில் உரிய முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், இன்று நான்கு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது அ.தி.மு.க. சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமியும் அரவக்குறிச்சிக்கு செந்தில்நாதன், திருப்பரங்குன்றத்துக்கு முனியாண்டி, ஒட்டப்பிடாரத்துக்கு மோகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

`வேட்பாளர்கள் பெயரை அறிவிப்பதில் ஏன் தாமதம்?' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டோம். ``திருப்பரங்குன்றத்தைத் தவிர மற்ற 3 தொகுதிகளுக்குப் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லை. `திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நான் சொல்லும் நபர்தான் வேட்பாளராக நிற்க வேண்டும். இல்லாவிட்டால், எனக்கான மரியாதை போய்விடும். எனவே, ஏ.கே.போஸ் குடும்பத்தினருக்கு சீட் கொடுக்க வேண்டும்' எனப் போர்க்கொடி உயர்த்தினார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். செல்லூர் ராஜுவோ தனக்கு வேண்டியவரான அன்புச் செழியனுக்கு சீட் கேட்டார். துணை முதல்வர் பன்னீர்செல்வமோ, தன்னுடைய ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ முத்துராமலிங்கத்துக்கு சீட் கேட்டார். இந்த முக்கோண மோதலால்தான் பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முனியாண்டி, கவுன்சிலராகவும் சுகாதாரக்குழு தலைவராகவும் இருந்தவர். அப்போது மேயராக இருந்த ராஜன் செல்லப்பாவுடன் நெருக்கம் காட்டியவர். அதேபோல, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் வேண்டியவராக இருக்கிறார். அதனால்தான், யாருக்கும் சிக்கல் இல்லாமல் முனியாண்டி பெயரை அறிவித்துவிட்டது தலைமை. 

அதேபோல, `அரவக்குறிச்சியில் முஸ்லிம் வேட்பாளரைப் போட வேண்டும்' என அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதை அறிந்து, முஸ்லிம் வேட்பாளராக சாகுல் ஹமீது பெயரை அறிவித்துவிட்டார் தினகரன். 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு ஒருபுறம் இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தைப் பல தொகுதிகளில் நிர்வாகிகளே வைத்துக்கொண்டனர். இதுகுறித்து வந்த புகார்களால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் முதல்வர்" என விவரித்தவர்கள், 

``ஜெயலலிதா இருந்த வரை ஒன் மேன் ஆர்மியாகக் கட்சி கட்டுக்கோப்புடன் இருந்தது. இப்போது, மாவட்டச் செயலாளர்கள் வைப்பதுதான் சட்டமாக இருக்கிறது. பன்னீர்செல்வத்துக்கு வேண்டிய மா.செ-க்கள், எடப்பாடிக்கு வேண்டிய மா.செ-க்கள் எனத் தனித்தனியாகப் பிரிந்து நிற்கின்றனர். அவரவர்கள் தங்களுடைய செல்வாக்குக்கு ஏற்ப தலைமையை மிரட்டிவருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாமல் தவிக்கிறார் முதல்வர். உதாரணமாக, `காஞ்சிபுரம் தொகுதியில் மரகதம் குமரவேலுக்கு சீட் கொடுத்தால் வெற்றி கிடைக்காது' என உளவுத்துறை அறிக்கை கூறியது. எனவே, `அந்தத் தொகுதியில் வேறு யாருக்கு சீட் கொடுக்கலாம்' என ஆலோசனையில் இறங்கியது தலைமை. ஆனால், காஞ்சி மாவட்டச் செயலாளர்களின் தொடர் நெருக்குதல் காரணமாக, மரகதத்துக்கே சீட் கொடுத்தார் எடப்பாடி. இதன்பின்னர், வாக்கு கேட்கச் சென்ற இடங்களில் மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதைவிடக் கொடுமை, தேர்தல் செலவீனங்களுக்காகத் தலைமை கொடுத்த பணத்தில் 30 சதவிகிதம்கூட மக்களிடம் போய்ச் சேரவில்லை. இதனால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றவர்கள், தொடர்ந்து பேசும்போது, 

``ஜெயலலிதா இருந்த காலத்தில் பணப்பட்டுவாடாவில் முக்கியப் பங்கு வகித்தவர் எடப்பாடி. மொத்த அமைச்சர்களுக்கும் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு, கார்டனின் கணக்கு வழக்குகளைச் சரியாகக் கையாண்டுவந்தார். அந்த காலகட்டத்திலும் பணம் தொடர்பான முறைகேடுகள் நடந்தாலும், அவற்றைச் சரிசெய்வதில் உறுதியாக இருந்தார். `அப்படிப்பட்ட தன்னையே மாவட்ட நிர்வாகிகள் ஏமாற்றுவார்கள்' என முதல்வர் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நிர்வாகியையும் அழைத்து, `தலைமை கொடுத்த பணத்தை யாருக்கெல்லாம் கொடுத்தீர்கள், கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர், ஒன்றியம், பகுதி என யாருக்கெல்லாம் எவ்வளவு கொடுத்தீர்கள் என்பதுகுறித்த கணக்கை எடுத்து வாருங்கள். எத்தனை வாக்காளர்களுக்குப் பணம் சென்றுசேர்ந்தது என்ற விவரத்தையும் கொண்டு வாருங்கள்' எனக் கேட்டிருக்கிறது தலைமை.

இதனை நிர்வாகிகள் பலரும் எதிர்பார்க்கவில்லை. வாக்குச்சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளையும் பணப்பட்டுவாடாவையும் துல்லியமாகக் கணக்கிட்டு ஆராய்ந்துவருகின்றனர். இந்தத் தேர்தலில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 250 ரூபாய் வீதம் தலைமை கொடுத்தது. இந்தத் தொகையுடன் 50 ரூபாயைச் சேர்த்து வேட்பாளர்கள் செலவுசெய்தனர். இந்தப் பணத்தைச் சரியாகக் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. `பாதி கொடுப்போம், பாதியை வைத்துக்கொள்வோம்' என்ற மனநிலையில் நிர்வாகிகள் இருந்துள்ளனர். 

`வாக்கு சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. ஆனால், பணம் முறையாகச் சென்றுசேரவில்லை. அப்படியென்றால், இந்த வாக்குகள் எல்லாம் யாருக்கு விழுந்திருக்கும்?' என்ற அச்சத்தில் கழகத்தின் மூத்த நிர்வாகிகள் உள்ளனர். இப்போது கணக்கு வழக்குகளைத் துருவிக் கொண்டிருப்பதால், பல மாவட்டங்களின் நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்கிறார். தேர்தல் முடிவு வருவதற்குள், பல நிர்வாகிகளின் பதவிகள் பறிபோனாலும் ஆச்சரியமில்லை" என்கின்றனர் நிதானமாக. 

அடுத்த கட்டுரைக்கு