Published:Updated:

இந்திரா காந்தி காரை கிரண் பேடி அப்புறப்படுத்தியது உண்மையா..? காங்கிரஸ் ஐ.டி விங் அலப்பறை

இந்திரா காந்தி காரை கிரண் பேடி அப்புறப்படுத்தியது உண்மையா..? காங்கிரஸ் ஐ.டி விங் அலப்பறை
இந்திரா காந்தி காரை கிரண் பேடி அப்புறப்படுத்தியது உண்மையா..? காங்கிரஸ் ஐ.டி விங் அலப்பறை

மீபத்தில் பிரதமர் மோடி ஒடிசாவில் உள்ள சம்பல்பூரில் பிரசாரத்துக்குச் சென்றார். பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் பணம் இருப்பதாகக் கூறி, தேர்தல் அதிகாரி முகமது மோஷின் ஐ.ஏ.எஸ் அதிகாரி சோதனையிட்டார். எஸ்.பி.ஜி என்று சொல்லப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படை அமைப்பின் விதிமுறைகளை மீறி பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை முகமது மோஷின் சோதனையிட்டதாகக் கூறி அவரைத் தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்தது. எஸ்.பி.ஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் சோதனைக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, விதிகளை மீறியதாக முகமது மோஷின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

1996-ம் ஆண்டு கர்நாடக கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான முகமது மோஷின், மீண்டும் அங்கேயே திருப்பி அனுப்பப்பட்டார். தேர்தல் நேரத்தில் ஒரு கட்சிக்கு எதிரான விஷயங்கள், மற்றொரு கட்சிக்கு அல்வா தின்பதுபோலத்தானே. இந்த விஷயத்தைக் கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, சிறப்பாக ஒரு காரியம் செய்தது! 

தற்போதைய பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் அருமை பெருமைகளை, தனியாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. மாநில முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டால், சென்னையின் தண்ணீர் பஞ்சம் தீருமளவுக்குக் கண்ணீர் வடிப்பார். இப்போதே இப்படியென்றால், இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி, தன் பதவிக்காலத்தில் எப்படி இருந்திருப்பார் என்று சற்று யோசித்துப்பார்த்தால், சினிமா `கேப்டன்' தோற்றுப்போவார். கிரண்பேடி என்றாலே அதிரடிதான். அப்போதிருந்தே, கிரண்பேடியின் வீர பராக்கிரமங்கள் குறித்துப் பல கதைகள் உலவுவது உண்டு. 

அதில் ஒன்றுதான் இந்தக் கதை. டெல்லியில் கிரண்பேடி பதவியில் இருந்தபோது, பிரதமர் இந்திரா காந்தியின் கார் `நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததாம். அதிரடிக்குப் பேர்போன கிரண்பேடி, பிரதமரின் கார் என்றுகூட பார்க்காமல் கிரேன் கொண்டு காரை அப்புறப்படுத்தினாராம். இந்தச் சமயத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தில் இருந்த இந்திரா காந்தி, தாயகம் திரும்பியதும் ஊடகம் வழியாக கிரண்பேடியின் நேர்மை குறித்து கேள்விப்பட்டாராம். கிரண்பேடியின் கடமையுணர்வைப் பாராட்டிய இந்திரா காந்தி, உடனடியாக  தன்னுடன் விருந்து சாப்பிட அழைப்புவிடுத்தாராம்.  இப்படி, ஒரு கதை கிரண்பேடி பற்றி உண்டு. 

சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் ஐ.டி விங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கிரண்பேடி விருந்து உண்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது. அதோடு, `முன்னாள் பிரதமர்,  தன் காரை அப்புறப்படுத்திய அதிகாரிக்கு விருந்து அளித்துப் பெருமைப்படுத்தினார். இன்னாள் பிரதமரோ, தன் ஹெலிகாப்டரைச் சோதனையிட்டவரை சஸ்பெண்டு செய்கிறார் பாரீர் பாரீர்!' என்று இணையத்தில் தகவலைப் பரப்பியது. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் இந்தப் பதிவு அதிகமாகப் பரவியது. இந்திரா காந்தியின் செயலைச் சிலாகித்துப் பாராட்டினர். இதுதான் உண்மையான தேசப்பற்று என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

இந்தச் செய்தியை ஆராய்ந்தால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்தப் புகைப்படம் 1975-ம் ஆண்டு குடியரசு தின விருந்தின்போது எடுக்கப்பட்டது. பொதுவாக, சாதிக்கும் பெண்கள் மீது இந்திரா காந்திக்கு தனி ப்ரியம் உண்டு. அதிலும் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடி மீது இந்திராவுக்கு தனிப்பற்று. குடியரசு தின அணிவகுப்புக்கு கிரண்பேடி தலைமை தாங்கினார். இதையடுத்து, கிரண்பேடியைத் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளித்தார் இந்திரா. 

சரி, இந்தச் சம்பவம் குறித்து கிரண்பேடி என்ன சொல்லியிருக்கிறார் எனப் பார்த்தால், ``காரை அப்புறப்படுத்தியதால் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதுதான் உண்மை'' என்கிறார். ``1982-ம் ஆண்டு நடந்தது. பிரதமர் இந்திராவின் அலுவலகத்துக்குச் சொந்தமான கார் ஒன்று, டெல்லியில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தது. டெல்லியின் துணை ஆணையராக நான் இருந்தேன். என் ஜூனியர் அதிகாரி சப்-இன்ஸ்பெக்டர் நிர்மல் குமார்தான் கிரேன் கொண்டு காரை அப்புறப்படுத்தினார். நான் அந்த இடத்தில் இல்லை. இதனால், நிர்மல்குமார் மீது நடவடிக்கை எடுக்க சிலர் முயன்றனர். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நான் பார்த்துக்கொண்டது மட்டும்தான் உண்மை.  வைரல் ஆன புகைப்படம் 1975-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மல்குமாரைக் காப்பாற்ற நான் போராடியதும், எனக்கு ஆபத்தை உருவாக்கியது. விளைவாக, டெல்லியிலிருந்து கோவாவுக்குத் தூக்கி அடிப்பட்டதும் உண்மை'' என்று தெரிவித்துள்ளார். 

சோ... போலிச் செய்திகளைப் பரப்புவதில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளின் ஐ.டி விங்குகள் ஒன்றுக்கொன்று  சளைத்தவையல்ல. நாமதான் சூதானாமா இருந்துக்கணும்!

அடுத்த கட்டுரைக்கு