Published:Updated:

``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி?'' - `நாம் தமிழர்' விளக்கம்!

``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி?'' - `நாம் தமிழர்' விளக்கம்!
``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி?'' - `நாம் தமிழர்' விளக்கம்!

"எங்கள் கட்சி நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. அதைக் கலைத்துப் போடுவதற்குப் பலதரப்பிலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவற்றில் ஒரு திட்டம்தான் இது."

மூக வலைதளங்களில் எந்த நேரத்தில் எது டிரெண்டிங் ஆகுமென்றே யூகிக்க முடியாது. நேற்று இரவிலிருந்து ஒரு தொலைபேசி உரையாடலும் அதையொட்டிய விவாதங்களும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பேசு பொருளாகியுள்ளது. அந்த உரையாடல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் புகழேந்திக்கும் தனசேகர் என்பவருக்குமான உரையாடல். இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்கிறார்கள். அதில், தனசேகர் என்பவர் சீமான் தன்னை மலேசியாவில் வைத்துக் கொல்வதற்கு முயற்சிசெய்து தோற்றுவிட்டதாகக் கூறுகிறார். ஆகவே, இது சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய ஒரு தொலைபேசி உரையாடலாக இல்லை. ஒட்டுமொத்த உரையாடலின் பின்னணி குறித்து அறிந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேசினேன்.

"தகாத வார்த்தைகளில் பேசினாலும் இரண்டு பேர் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்கிறார்கள். ஆனால், நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சிலர், மேடையிலேயே எவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பேசினார்கள். ஈரோடு இறைவன் என்கிற நபர், பிரேமலதா விஜயகாந்தை மிக மோசமாக விமர்சித்துப் பேசினார். இன்னொரு தி.மு.க பேச்சாளர் பொதுமேடையிலேயே மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பெண்களைக் கொச்சையான வார்த்தைகளில் பேசினார். அப்போதெல்லாம் இணைய அறிவு ஜீவிகள் எந்த விதமான கண்டனங்களையும் பதிவு செய்யவில்லை. பொதுமேடையில் கேவலமாகப் பேசியவர்களை விட்டுவிட்டுத் தனிப்பட்ட முறையில் பேசியதைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமென்ன! காரணம், இது நாம் தமிழர் கட்சி தொடர்புடையது என்றவுடன், இந்த உரையாடல் பதிவை வேகமாகப் பரப்புகிறார்கள். இத்தனைக்கும் எதிர்தரப்பில் பேசிய தனசேகர் என்கிற நபருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

" 'அட்ரஸ் கொடுங்க' என நாம் தமிழர் கட்சியின் புகழேந்தி அந்த நபரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாரே, அது எதற்காக?"

"எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, தலைவன், தொண்டன் என்று இல்லாமல் அண்ணன், தம்பி என்கிற முறையில்தான் பழகுகிறோம். சீமானை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கட்சி அலுவலகத்திலேயே சந்திக்கலாம். அதன் அடிப்படையில்தான், அந்த நபரை இங்கே நேரில் பேசப் புகழேந்தி அழைத்தார். எதிர்தரப்பிடமிருந்து ஒழுங்கான பதில் இல்லை. எனவே, அவர் முகவரி கேட்டு அவரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்".

"சீமான் தன்னை மலேசியாவில் வைத்துக் கொலைசெய்ய முயன்றாக அந்த நபர் கூறுகிறாரே, அவர் யார்?"

"எங்கள் கட்சி நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. அதைக் கலைத்துப் போடுவதற்குப் பலதரப்பிலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவற்றில் ஒரு திட்டம்தான் இது. நாம் தமிழர் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் ஒரு பிற்போக்குவாதிகளாக, இனவாதக் கூட்டமாகச் சித்திரிக்க ஒரு பெருங்கூட்டம் முயன்று வருகிறது. குறிப்பாக, தி.மு.க-வினருக்கு எங்களின் வளர்ச்சியின் மீது பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவை அவர்கள்தான், இணையத்தில் வேகமாகப் பரப்புகிறார்கள். இது அவர்களுடைய வேலையாகக்கூட இருக்கலாம்."

"தி.மு.க-வினர் செய்திருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்?"

"அவர்கள் உருவாக்கிய திராவிட சித்தாந்தத்தையே நாங்கள் கேள்விக்கு உட்படுத்துகிறோம். அவர்கள் மீது நம்பிக்கையில்லாத மிகப்பெரும் இளைஞர் கூட்டம், எங்களை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது. ஆகவே, இங்கே தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பலத்தைக் கொண்டு மக்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள். எங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்குதலைச் செய்து பார்க்கிறார்கள். வெளிவர இருக்கின்ற தேர்தல் முடிவுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கிற வாக்குகள் இவர்களுக்குத் தெரியவரும்போது, இன்னும் சில சூழ்ச்சிகளைச் செய்வார்கள். ஆனால், அவற்றுக்கெல்லாம் அஞ்சி நடுங்குகிற கூட்டம் அல்ல நாங்கள்".

பின் செல்ல