Published:Updated:

``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு!" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்

``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு!" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்
``ஒரே வாரத்தில் எடப்பாடி பழனிசாமி செய்த பெரும் தவறு!" - சசிகலாவின் 325 பிரம்மாஸ்திரங்கள்

"பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதுதான் தவறு."

ரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா. "பொதுச் செயலாளர் பதவி, இரட்டை இலை வழக்கு ஆகியவற்றில் எங்களுக்குச் சாதகமான விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. இந்த வழக்கில் உறுதியாக வெற்றி பெறுவோம்" என நம்பிக்கையோடு சொல்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் டி.டி.வி.தினகரன். `சசிகலா ஒப்புதலின்பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அ.தி.மு.க மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார்' என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சசிகலா ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. `தேர்தலுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்கலாம். சசிகலாவை ஓரம்கட்டிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்கிறார் தினகரன்' எனக் குமுறலை வெளிப்படுத்தினர். கடந்த 19-ம் தேதி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட தினகரன், 22-ம் தேதி கட்சியாகப் பதிவு செய்யும் மனுவை வழக்கறிஞர் மூலம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். இதற்கு அடுத்த நாள் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்துப் பேசினார். 75 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், இரட்டை இலை தொடர்பான வழக்கைப் பற்றியும் அ.ம.மு.க தனிக்கட்சியாக இயங்குவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, `சசிகலாவை ஓரம்கட்டவில்லை' எனக் கூறி விளக்கமும் கொடுத்தார். 

இதன் தொடர்ச்சியாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார் சசிகலா. அந்த மனுவில், `2017-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி உத்தரவு பிறப்பித்தது தேர்தல் ஆணையம். அப்போது என்னிடம் பெரும்பான்மை ஆதரவு இருந்தது. இதைக் கருத்தில் கொள்ளாமல் சின்னத்தை முடக்கியது ஆணையம். இது முற்றிலும் பாரபட்சமானது. இதன் பின்னர், பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து கட்சியின் விதிமுறைகளைச் சட்டவிரோதமாக மாற்றிவிட்டனர். ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என 2 புதிய பதவிகளை உருவாக்கினார்கள். தேர்தல் கமிஷன் இதையும் ஏற்றுக்கொண்டது.

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பான எங்களுடைய புகார்களையும் தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. டெல்லி உயர் நீதிமன்றமும் மேற்கண்ட அம்சங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை மாற்றுவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. கட்சி விதிகளைத் தேர்தல் ஆணையமும் டெல்லி உயர் நீதிமன்றமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் பரிசீலனைக்கு எடுக்கவில்லை. எனவே, இரட்டை இலை தொடர்பாகப் பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

`இரட்டை இலை வழக்கை எந்தளவுக்கு நம்புகிறார் சசிகலா?' என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர்.காசிநாதபாரதியிடம் கேட்டோம். "முதல்வர் பதவியில் இருப்பவர் எப்படியெல்லாம் செயல்படக் கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அந்தளவுக்கு ஒரே வாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட பெருமைக்குரியவர். பொதுச்

செயலாளர் பதவியை நீக்க முடியாது என அண்ணா தி.மு.க-வின் துணை விதி 43-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக எம்.ஜி.ஆர் வகுத்துக் கொடுத்த விதி இது. அதாவது, பொதுச் செயலாளர் உயிரோடு இருக்கும் வரையில் வேறு யாரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த முடியாது. அதையும் மீறிக் கூட்டினால் அது சாதாரணக் கூட்டமாகத்தான் கருதப்படும்.

அதுவும், தலைமைக் கழகம் என்ற பெயரில் பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதில் யாருடைய கையொப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு கூட்டத்தில் 2,180 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,600 பேர்தான் கலந்து கொண்டனர். இதில், 36 பேர் கொடுத்திருக்கும் வாக்குமூலம் மிக முக்கியமானது. `எங்களை மிரட்டி வெற்று பேப்பரில் கையொப்பம் வாங்கிவிட்டனர்' எனத் தெரிவித்துள்ளனர்.

இதைவிடக் கொடுமை, 325 அபிடவிட்டுகளில் இருக்கும் குளறுபடிகள்தான். இவர்கள் கொடுத்திருக்கும் பிரமாணப் பத்திரங்களில் நோட்டரி பப்ளிக்கின் கையொப்பம் பொதுக்குழு கூட்டத்துக்கு முதல்நாள் வாங்கப்பட்டுள்ளது. மறுநாள் பொதுக்குழு உறுப்பினர்களின் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது. கழகப் பொதுக்குழு உறுப்பினர் கையெழுத்துப் போட்ட பிறகுதான், நோட்டரி கையொப்பமிட வேண்டும். அப்போதுதான் ஒருவரின் கையொப்பத்தை அங்கீகரித்ததாக அர்த்தம். அந்த வகையில் பார்த்தால் 325 அபிடவிட்டுகளும் செல்லாது. 

சசிகலாவை பொதுச் செயலாளராகவும் தினகரனை துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்தது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் 7.5 லட்சம் அபிடவிட்டுகளைக் கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆவணங்களைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஏழரை லட்சம் பேரையும் அழைத்து விசாரிக்க முடியாது என்பதால், அந்த ஆவணங்களில் உள்ள சிலரை மட்டுமே அழைத்து விசாரிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவு போட்டிருந்தது. அதன்படியும் ஆணையம் விசாரிக்கவில்லை.

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியில் இருக்கிறவர், முதல் வாரம் சசிகலாவைப் பொதுச் செயலாளராகவும் டி.டி.வி-யை துணைப் பொதுச் செயலாளராகவும் ஏற்றுக்கொள்கிறார். மறுவாரம், இந்த நிலைப்பாட்டை மாற்றியது மட்டுமல்லாமல், கட்சியின் விதிகளிலும் திருத்தம் கொண்டு வந்துவிட்டார். நோட்டரி பப்ளிக் கையொப்பத்தை ஆணை உறுதி ஆவணம் என்பார்கள். அதன்படி, முதல் வாரம் ஆணையிட்டு உறுதி கொடுத்த எடப்பாடி, மறுவாரம் இதை மறுப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மிக உயர்ந்த பதவியில் இருப்பவர் இப்படிச் செய்தது என்பது வரம்பு மீறிய செயல். இதற்கு எதிராகவே வழக்குத் தொடரலாம். பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற பிறகு பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதுதான் தவறு" என்றார் ஆதங்கத்துடன். 

"பொதுச் செயலாளர் பதவி மீதான உரிமை தொடர்பான சிவில் வழக்கை தொடர்ந்திருந்தார் வெற்றிவேல். இனி இந்த வழக்கிலிருந்து அவர் ஒதுங்கிக் கொள்வார். சசிகலாவே தொடர்ந்து நடத்துவார். உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ள சீராய்வு மனுவிலும் டிவிஷன் பென்ச்சில் தொடரப்பட்டுள்ள பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கிலும் சசிகலாவுக்கு சாதகமான அம்சங்கள் ஏராளம் இருக்கின்றன. அ.ம.மு.க பொதுச் செயலாளராகக் களத்தில் நேரிடையாக இறங்கிவிட்டார் தினகரன். தனிக்கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பாக, கடந்த 12-ம் தேதி தினகரனின் வழக்கறிஞர் நேரிடையாக சசிகலாவை சென்று சந்தித்தார். அவரும், `நீங்கள் கட்சியாகப் பதிவு செய்துவிடுங்கள். வழக்கை நான் நடத்திக்கொள்கிறேன்' எனக் கூற, `உங்களுடைய அனுமதிக் கடிதம் வேண்டும்' எனக் கேட்டிருக்கிறார் வழக்கறிஞர். இதற்குப் பதில் கொடுத்த சசிகலா, `நீங்கள் கிளம்புங்கள். கடிதத்தை எழுத்துபூர்வமாக அனுப்பி வைக்கிறேன்' என்றார். அதன்படியே, 15-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், `தினகரன் தலைமையில் தனியாக இயங்கிக்கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை நிர்வாகிகளிடமும் காட்டியிருக்கிறார் தினகரன். தலைவர் பதவியை சசிகலாவுக்காக வைத்திருக்கிறோம்" என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர். 

அடுத்த கட்டுரைக்கு