Published:Updated:

`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்!

`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்!
`4 தொகுதிகளும் மிஸ் ஆகாது’ - பொறுப்பாளர்களின் உறுதியும், ஸ்டாலினின் திட்டமும்!

`மக்களவைத் தேர்தலைக்காட்டிலும், இடைத்தேர்தல் முடிவுகள்தான் முக்கியம். எப்படியாவது, இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை நாம் பிடித்தாக வேண்டும்’

மே 23-ம் தேதி தேர்தல் முடிவுக்காக இந்தியாவே காத்துக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, தமிழகத்துக்கு இது முக்கியமான தேர்தல். மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதையும் தாண்டி, தமிழகத்தில் நடந்துவரும் ஆட்சி தப்பிக்குமா? என்பதுதான் பிரதான கேள்வியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இருபெரும் ஆளுமைகள் இல்லாதநிலையில், கமல், டி.டி.வி போன்றோரும் களத்தில் உள்ளனர். எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என இரு திராவிடக்கட்சிகளும் சூளுரைக்கின்றன. மக்களவைத்தேர்தல் முடிவுகள் ஒருபுறம் இருந்தாலும். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை நோக்கித்தான் இரண்டு கட்சிகளின் கவனமும் திரும்பியுள்ளது.

`மக்களவைத் தேர்தலைக்காட்டிலும், இடைத்தேர்தல் முடிவுகள்தான் முக்கியம். எப்படியாவது, இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை நாம் பிடித்தாக வேண்டும்’ என எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் பணம் சரியாக சென்று சேரவில்லை என்ற புகாரையடுத்து, 4 தொகுதிகளிலும் இந்தத் தவறு நடக்கக் கூடாது என கறாராக கூறியுள்ளார். மேலும், மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதி இடைத்தேர்தலிலும் பணத்தை வாரி இறைக்கத் தயாராகிவிட்டார்கள். அண்மையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ``இந்த ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதித்திட்டம் தீட்டி வருகின்றனர். அவர்களுக்கு நாம் இடம் அளிக்கக் கூடாது. 4 தொகுதிகளையும் நாம் பிடித்தாக வேண்டும்” என்று முதல்வர் பேசியுள்ளார்.

ஒருபுறம், திருப்பரங்குன்றத்தில் தான் பரிந்துரைத்த முத்துராமலிங்கத்தை ஏற்காமல், முனியாண்டியை போட்டியிடவைத்துவிட்டார்கள் என்ற கடுப்பில் இருக்கிறார் ஓ.பி.எஸ். இது ஒருபுறமிருக்க கருணாநிதி பிறந்தநாளன்று பதவி ஏற்றுவிடலாம் என்று நம்புகின்றனர் தி.மு.க-வினர். தமிழக சட்டமன்றத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏ-க்களில், ஆட்சியைப் பிடிக்க 118 எம்.எல்.ஏ-க்கள் தேவை. இப்போது சபையில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 88 காங்கிரஸ் 8 முஸ்லிம் லீக் 1 என மொத்தம் 97 இடங்கள் இருக்கின்றன. 22 தொகுதி இடைத்தேர்தல்களில் தி.மு.க 21 தொகுதிகளைப் பிடித்தால்தான் பெரும்பான்மையைப் பிடிக்க முடியும். 18 தொகுதிகளில் ஒன்று இரண்டு குறைந்தாலும், 4 தொகுதிகளில் அதை சமன்செய்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் தி.மு.க தலைவர்.

இது தொடர்பாக தி.மு.க வட்டாரத்தில், ``திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தல்தான் எங்களுக்கு டார்கெட். இதை ஆட்சியை நிர்ணயிக்கும் முக்கியமான தேர்தலாக பார்க்கிறார் ஸ்டாலின். சூலூர் தொகுதியின் பொறுப்பாளராக எ.வ.வேலு நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் மட்டுமல்லாது, களப்பணியாளர் என்பதால் எ.வ.வேலுவை நியமித்துள்ளார். `சூலூரில் நம்மதான் ஜெயிக்கிறோம்' என்று எ.வ.வேலு அறுதியிட்டுக் கூறியிருக்கிறார். ஓட்டப்பிடாரத்தைப் பொறுத்தவரை, புதிய தமிழகமும், அ.தி.மு-கவும் இணைந்து முழுவீச்சில் வேலைகளில் ஈடுபடும், அவர்களை சமாளிக்க சரியான நபர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருதான்.

பணத்தை செலவழிப்பதிலும், களப்பணியாற்றுவதிலும், ஆளும்கட்சிக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என ஸ்டாலின் கருதுகிறார். அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி, பொறுப்பாளராக பொன்முடி அங்கே நிச்சயம் தி.மு.க-வுக்குத்தான் வாய்ப்பு. திருப்பரங்குன்றத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக ஸ்டாலினிடம் பேசிய பொறுப்பாளர்கள், `4 தொகுதிகளில் எதுவும் மிஸ் ஆகாது. நீங்கள் நிம்மதியாக முதல்வராக வேண்டிய வேலையைப் பாருங்கள்' என்று உறுதியளித்துள்ளனர். இதன்மூலம் ஆட்சியைப் பிடித்து 2 ஆண்டுகள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, அடுத்த சட்டசபைத் தேர்தலுக்கு அஸ்திவாரம் போடலாம் எனக் கருதுகிறார் ஸ்டாலின்'’ என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு