Published:Updated:

அக்‌ஷய் பிரதமர் மோடியிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் இவைதாம்!

பலகட்ட வாக்குப்பதிவுகள் நாடெங்கிலும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் மோடி மாம்பழத்தை எப்படிச் சாப்பிடுகிறார் என்கிற கேள்வி செரிக்க முடியாததாகவே இருக்கிறது.

அக்‌ஷய் பிரதமர் மோடியிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் இவைதாம்!
அக்‌ஷய் பிரதமர் மோடியிடம் நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்விகள் இவைதாம்!

பிரதமர் மோடியுடனான பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் `அரசியலற்ற’ நேர்காணல், நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் சமயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், பொதுத்தேர்தல் நாடெங்கிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, ‘அரசியலற்ற’ நேர்காணல் தேவையா? 2014-ல் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகப் பதவியேற்றது தொடங்கி அவரிடம் எடுக்கப்பட்ட பேட்டிகள் பெரும்பாலுமே, `அரசியலற்ற’ பேட்டிகளாகத்தான் இருந்திருக்கின்றன. தேர்தல் நெருங்கும் சமயத்திலும், `மோடி என்ன சாப்பிடுகிறார், எப்படி ஒருநாளை செலவழிக்கிறார், தன் தாயை எப்போது சந்திக்கிறார்’ என அதே அரசியலற்ற கேள்விகள் ஏன்? பலகட்ட வாக்குப்பதிவுகள் நாடெங்கிலும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், மோடி மாம்பழத்தை எப்படிச் சாப்பிடுகிறார் என்கிற கேள்வி செரிக்க முடியாததாகவே இருக்கிறது.

ஒருநாளைக்கு `3 முதல் 4 மணி நேரம் மட்டுமே’ தூக்கம் எப்படிப் போதுமானதாக இருக்கிறது என்று அக்‌ஷய் கேட்கிறார். `என் நண்பர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் இதையேதான் கேட்கிறார்’ என்கிற பதில் பிரதமரிடமிருந்து அநாயசமாக வருகிறது. ஆனால், 2014 தொடங்கி பசுப் பாதுகாவலர்கள் நிகழ்த்திய அத்தனை வெறுப்புக் குற்றங்கள் பற்றி அக்‌ஷய் குமார்களும் கேட்பதாக இல்லை; சவுக்கிதார்களும் பதில் அளிப்பதாக இல்லை.

சற்றே சர்ச்சைக்குரிய கேள்வியாக, `உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது’ என்று கேட்கிறார். அதற்கு நேரிடையாக எந்தப் பதிலும் சொல்லாமல், தொடர்பில்லாத வகையில் நான்கு நிமிடங்கள் பதில் கூறுகிறார். இதற்குப் பதில், `2014-ல் நீங்கள் பிரதமரானதும் எங்கள் எல்லோருடைய வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாகச் சொன்னீர்களே, என்ன ஆயிற்று” என்று நேரிடையாகவே கேட்டிருக்கலாமே அக்‌ஷய்?

`மோடி சர்க்கார்’ குறித்து அவருக்கு மீம் காண்பித்த நீங்கள், டிமானிடைஷேசன் இறப்புகள் மீம் ஆக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டதையும் அவருக்குக் காண்பித்திருக்கலாமே?

`எதிர்க்கட்சிகளுடன் நட்பாகவே இருக்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா திதி எனக்கு இனிப்பெல்லாம் அனுப்புகிறார்’ என்றவரிடம், `முன்னாள் அரசு அதிகாரிகள் 66 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஏன் கடிதம் எழுதினார்கள்' என்று கேட்டிருக்கலாமே? `கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்’ என்று அக்‌ஷய் குமார் கேட்கிறார். `நான் எப்போதும் ஒருவரைக் குறைகூறி மட்டுப்படுத்துவதே இல்லை. அவரைப் பற்றி உயர்வாகவே பேசுவேன்’ என்கிற பதில் வருகிறது. டிஸ்லக்‌ஷியா பாதிப்புக்குள்ளானவர்களை பிரதமர் அவமதித்துப் பேசியது சட்டெனக் கண்முன் நிழலாடுகிறது. 

``நீங்கள் அரசியலுக்கு வரவில்லையென்றால் சந்நியாசியாகவோ அல்லது ராணுவ வீரராகவோ ஆகியிருப்பீர்கள் என்று நீங்கள் சொன்னதாக ஓரிடத்தில் படித்திருக்கிறேன்” என்று, `நீங்கள் நடிக்கவரவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள்’ பாணியில் கேள்வி எழுப்புகிறார் அக்‌ஷய் குமார். `புற்றுநோய்க்கு மாட்டுச் சிறுநீர் குடித்தால் நோய் குணமாகும் என்று உங்கள் கட்சியில் ஒரு சந்நியாசி கூறுகிறாரே, தனக்கு ஓட்டு போடவில்லையென்றால் சாபம் விட்டுவிடுவேன் என்று தங்கள் கட்சியின் இன்னொரு சந்நியாசி மக்களை அச்சுறுத்துகிறாரே’ இந்தக் கேள்விகளையெல்லாம்தான் உண்மையில் அக்‌ஷய் கேட்டிருக்க வேண்டும். எந்திரன் 2.0 திரைப்படத்தில் பறவை நேசனாக நடித்த காரணத்துக்காகவாவது, எட்டு வழிச் சாலைத் திட்டம் தொடங்கி இத்தனை இயற்கைச் சூறையாடல் ஏன் என்று கேட்டிருக்க வேண்டும். மற்ற எந்தக் கேள்விகளும் வேண்டாம் என்று ஒதுக்கினாலும், குறைந்தபட்சம் மோடி தனது எல்லாமுமாகக் கருதும் அவரது கட்சியைப் பற்றியாவது நீங்கள் கேள்விகள் கேட்டிருக்க வேண்டும். `பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கச் சொல்லி ஒருபக்கம் பிரசாரம் செய்துவிட்டு, மறுபக்கம் பகட்டுடன் கட்சியினர் பாலியல் வன்முறை செய்வது ஏன்’ என்று கேட்டிருக்கவேண்டும். துரதிர்ஷ்டவசமாக அது `அரசியலற்ற’ நேர்காணலாகிவிட்டது. ஓட்டு போடுவது ஒவ்வொருவரது கடமை என்று விளம்பரம் வெளியிடப்படும் தேசத்தில் குடிமக்களின் கேள்விகளுக்குத் தலைவர்களிடம் பதில் இல்லாத எத்தனை பெரிய முரண்?

நீங்கள் மோடியிடம் கேட்க விரும்பும் கேள்விகளை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்களேன்!