Published:Updated:

25 எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி வைக்கும் செக்!

25 எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி வைக்கும் செக்!
25 எம்.எல்.ஏ-க்களுக்கு எடப்பாடி வைக்கும் செக்!

ஆளும்கட்சியின் இந்த ‘மூவ்’கள் அனைத்தும், தேர்தல் முடிவுகளில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தற்போது அவரது சொந்த ஊரில் இருக்கிறார். அவரை உடனடியாகச் சென்னைக்கு கிளம்பி வரும்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைத்துள்ளார். காரணம்... தமிழகச் சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் பதவியில் இருப்பவர்தான் சட்டமன்ற உரிமைக்குழுவின் தலைவர். அந்த வகையில், பொள்ளாச்சி ஜெயராமன், உரிமைக்குழுவின் தலைவராக இருக்கிறார்.

2017-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டைப் பற்றிப் பேசுவதற்காகக் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருள்களைச் சட்டமன்றத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 21 பேருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் அந்தக் காலகட்டத்தில் செய்தி வெளிவந்தது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் அடங்கிய டைரியை வருமானவரித்துறை கைப்பற்றியது. அதன் விவரங்களைத் தமிழக தலைமைச் செயலாளருக்குக் கடிதமாக அனுப்பிவைத்தது. மேற்கொண்டு, உரிய விசாரணை நடக்கவில்லை என்று செய்தியில் குறிப்பிட்டிருந்தது. 

இந்தச் செய்தியை மேற்கோள்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ–க்களில் 21 பேர் திடீரென குட்கா பொட்டலங்களைச் சட்டசபையில்  எடுத்துக்காட்டினர். தி.மு.க உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக் குழுவுக்குப் பரிந்துரை செய்தார்.

இந்த நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் இதுவரை இரண்டு முறை கூட்டங்கள் நடந்தன. மு.க.ஸ்டாலின், உரிமைக் குழுவின் உறுப்பினராக இருந்தபோதிலும், அவருக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதேநேரம், பொள்ளாச்சி ஜெயராமனின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் வழக்கு போட்டனர். அது தற்போது நீதிமன்ற ஸ்டேயில் இருக்கிறது. அதை உடனடியாக விலக்க நடவடிக்கை எடுக்கும்படி சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அதற்கான வேலைகள் அசுரகதியில் நடந்துவருகிறது. 

இது ஒருபுறமிருக்க... மறுபுறம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான விருத்தாலம் கலைச்செல்வம், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி ஆகிய மூன்று எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்து, தற்போது தி.மு.க–வுக்கு அனுசரணையாக இருக்கும் மனித நேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீம் அன்சாரி, இந்த நால்வரின் செயல்பாட்டைக் கண்டித்து சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடக்கின்றன.

தேர்தல் முடிவுகள் எப்படி வருமென்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், ஆளும்கட்சியின் இந்த ‘மூவ்’கள் அனைத்தும், தேர்தல் முடிவுகளில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அடுத்து வரும் நாள்களில் தமிழக அரசியல் அரங்கம் பெரும் பரபரப்புக்குள்ளாகப் போவதை ஆளும்கட்சியின் செயல்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன. 

அடுத்த கட்டுரைக்கு