Published:Updated:

`22 பேரும் ஜெயிச்சு வந்தோம்ன்னா என்ன நடக்கும்ன்னு பாருங்க!'- அ.தி.மு.க-வுக்கு  கிலியை ஏற்படுத்தும் வெற்றிவேல்

`22 பேரும் ஜெயிச்சு வந்தோம்ன்னா என்ன நடக்கும்ன்னு பாருங்க!'- அ.தி.மு.க-வுக்கு  கிலியை ஏற்படுத்தும் வெற்றிவேல்
`22 பேரும் ஜெயிச்சு வந்தோம்ன்னா என்ன நடக்கும்ன்னு பாருங்க!'- அ.தி.மு.க-வுக்கு  கிலியை ஏற்படுத்தும் வெற்றிவேல்

``அ.தி.மு.க-வில் நிறைய பேர் சிலிப்பர் செல்லாக இருக்காங்க. அவர்கள் அமைச்சர்களாகவே இருக்காங்க" என்று அ.ம.மு.க நிர்வாகி வெற்றிவேல் கூறினார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி 3 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து?

`அ.ம.மு.க அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்த அணி என்ற சட்டப்பாதுகாப்பு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் இருந்தது. இப்போது கட்சி ஆரம்பிக்கும் வரையிலும் 3 எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் இருந்தார்கள். 100 பேர் தீர்மானம் போட்டு கட்சி ஆரம்பித்திருக்கோம். கட்சியின் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை தேர்ந்தெடுத்திருக்கிறோம். அபிடவிட்டில் 3 எம்.எல்.ஏ-க்களின் கையெழுத்து இல்லை. அரசியல் கட்சி ஆரம்பிக்கும்போது உங்கள் கட்சியில் யாராவது எம்.எல்.ஏ-க்கள், எம்.பி.க்கள் இருக்கிறார்களா என்று விண்ணப்பத்தில் கேட்டிருந்தார்கள். அந்தக் கேள்விக்கு தினகரன் மட்டுமே எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்று சொல்லியிருக்கோம். அதனால் எங்களுக்கு சட்டப்பாதுகாப்பு இருக்கிறது'.

சட்டப்பாதுகாப்பு இருக்கும் என்று கூறுகிறீர்கள். ஆனால், இதுபோன்ற காரணம் கூறி 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

`தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பயப்படுகிறார்கள். ஒரு நம்பரை கரைட் பண்ணலாம் என்கிற குறுக்கு வழி முயற்சிதான்'.

அ.தி.மு.க அரசுக்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுறாங்க என்று கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறுகிறார்களே?

`சட்ட ரீதியாக அவர்கள் எந்தக் கட்சியிலும் இல்லை. இப்பவும் அவர்கள் அ.தி.மு.க கட்சிக்காரர்கள்தான். எங்களிடம் பேசுவாங்க, பழகுவாக. நாங்க ஜெயிச்சி வந்தா நாம ஒண்ணா சேர்ந்து ஆட்சி அமைப்போம்ன்னு சொல்வாங்க. அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று அவர்கள் சொல்லவில்லை. தமிமுன் அன்சாமி தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார். கருணாஸ் பேசினாரு. அவர்களுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை. தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தால் தவறில்லை. 11 பேர் எதிர்த்து ஓட்டு போட்டா தவறில்லை. ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் தவறு. அதுமட்டும்தான் அவர்களுக்கு தவறா தெரியுது. அ.ம.மு.க இப்போது கட்சியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சியில் 3 பேரும் இல்லை'.

3 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அ.ம.மு.க அவர்களுக்கு ஆதரவாக இருக்குமா. சட்டரீதியாக சென்றால் உறுதுணையாக இருக்குமா?

`அவர்கள் எங்கள் நண்பர்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் பாதுகாப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு நாங்கள் சாதகமாகத்தான் இருப்போம். கோர்ட்டுக்குப் போக வேண்டாம். தேர்தல்ல நின்று ஜெயிங்கன்னு சொல்லுவோம்'.

சபாநாயகரிடம் வீடியோ, போட்டோ ஆதாரமாக கொடுத்திருக்கிறார்களே?

`தமிமுன் அன்சாரி தி.மு.க.வுக்கு ஆதரவு என்று சொன்னாரே. அதற்கு வீடியோ ஆதாரம் இல்லையா. சட்டமன்றத்தில் 11 பேர் ஓட்டு போட்ட வீடியோ ஆதாரம் இல்லையா. பன்னீர் செல்வத்தை துணை முதல்வராக வச்சிருக்காங்க'. 

மூன்று பேரும் முன்பே தினகரனுக்கு ஆதரவு தெரிவிச்சிக்கிட்டு இருக்காங்க. ஆனால், நடவடிக்கை இப்போது எடுக்கிறாங்களே எப்படி?

`பயம். தேர்தல் நம்பரை கரைட் பண்ணுறதுக்கு குறுக்கு வழியில் முயற்சி பண்ணுறாங்க. அதற்கு சபாநாயகர் துணை போகிறார். ஆனால், இதற்கான விளைவுகளை எல்லோரும் சந்திக்க வேண்டிவரும்'.

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்?

`ஸ்டாலின் எதுக்கு இப்படி பேசுகிறாருன்னு தெரியல. 22 தொகுதியில் ரிசல்ட் வந்தால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர யார்கிட்ட சக்தி இருக்கிறதோ, வந்தால் ஜெயிக்க முடியுமா அப்போது முடிவாகும். 97 பேரை வச்சிக்கிட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் ஸ்டாலின் எப்படி ஜெயிப்பாரு. ஏற்கெனவே இப்படி கொண்டு வந்துதான் தோற்றுப்போனார்'.

அ.தி.மு.க-வில் கோஷ்டி பூசல் இருப்பதாக நினைக்கிறீர்களா?

`அ.தி.மு.க-வில் கோஷ்டி பூசல் இருக்கிறது. நான் இப்பவும் சொல்கிறேன், 22 பேரும் ஜெயிச்சி வந்தோம்ன்னா அதன் பிறகு என்ன நடக்கும்ன்னு பாருங்க. அ.தி.மு.க-வில் இருக்கிற எம்.எல்.ஏ-க்களை வைத்து நாங்க ஆட்சியைப் பிடிப்போம். எங்களுடைய நண்பர்கள் எல்லாம் சிலிப்பர் செல்லாக இருக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்போம்'. 

இந்த மூன்று பேரைத் தவிர அ.தி.மு.க-வில் சிலிப்பர் செல் இருக்கிறார்களா?

`நிறைய பேர் இருக்காங்க. அவர்கள் அமைச்சர்களாகவே இருக்காங்க. 32 அமைச்சர்களும் சிலிப்பர் செல்கள் கிடையாது. அதிலும் சிலிப்பர் செல்கள் இருக்காங்க'.

3 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுவார்களா, சுயேச்சையாக போட்டியிடுவார்களா?

`நாங்கள் சீட் கொடுக்கத் தயார். ஆனால் அவர்கள்தான் முடிவு எடுக்கணும்'.

அடுத்த கட்டுரைக்கு