Published:Updated:

`பதவியேற்பு உறுதிமொழியை மறந்துவிட்டார் எடப்பாடி!' - கொறடா புகாரால் கொதிக்கும் கள்ளக்குறிச்சி பிரபு

நாங்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறோம். அதே கட்சியில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனி ட்ராக்கில் பயணித்து வருகிறார்கள். அதேபோல், நாங்களும் தனியாக ஒரு ட்ராக்கில் பயணம் செய்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்.

`பதவியேற்பு உறுதிமொழியை மறந்துவிட்டார் எடப்பாடி!' - கொறடா புகாரால் கொதிக்கும் கள்ளக்குறிச்சி பிரபு
`பதவியேற்பு உறுதிமொழியை மறந்துவிட்டார் எடப்பாடி!' - கொறடா புகாரால் கொதிக்கும் கள்ளக்குறிச்சி பிரபு

சிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேருக்கு சிக்கல் முளைத்துள்ளது. அ.தி.மு.க சட்டப் பேரவைக் கொறடா ராஜேந்திரன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் அளித்த புகாரின்பேரில், `சபாநாயகர் தனபால் என்ன முடிவெடுப்பார்?' என அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. கொறடா அளித்த புகார் குறித்துப் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், `22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோகும் நிலை உள்ளது. எனவே, ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுத்தால், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்' எனக் கொதித்தார். 

மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தரப்பிலிருந்து இதுவரை நோட்டீஸ் செல்லவில்லை. `அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?' என கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவிடம் பேசினோம். 

``சபாநாயகரிடமிருந்து நோட்டீஸ் வந்த பிறகு, என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து விவாதிக்க இருக்கிறோம்". 

`திடீர்' சிக்கலை உருவாக்குவதற்கு என்ன காரணம்? 

``அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை". 

அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலப் பொறுப்பில் இருக்கிறீர்கள். இந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டீர்களா? 

``நாங்கள் ஓர் அணியாக இருந்தபோது, அந்தப் பதவியை எனக்குக் கொடுத்தார் டி.டி.வி. இப்போது அ.ம.மு.க-வைக் கட்சியாகப் பதிவு செய்திருக்கிறார்கள். நான் தற்போது அந்தக் கட்சியில் இல்லை. இரட்டை இலை தொடர்பாக சின்னம்மா (சசிகலா) தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. நாங்கள் இரட்டை இலைக்கு உரிமை கோரிக் கொண்டிருக்கிறோம். அ.ம.மு.க என்ற கட்சியில் நான் உறுப்பினராக இல்லை". 

நாளை ஆட்சிக்கு எதாவது சிக்கல் வந்தால், நீங்கள் கொறடா பேச்சைக் கேட்டுச் செயல்பட வாய்ப்பு இருக்கிறதா? 

``எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு ஏதாவது சிக்கல் வந்தால், அவர்கள் அனைவரும் சின்னம்மாவைத் தேடித்தான் வருவார்கள். இந்த ஆட்சியை அமைத்துக் கொடுத்தது சின்னம்மாதான். அந்த நேரத்தில், கட்சியை வலுப்படுத்த என்னென்ன நிபந்தனைகள் இருக்கிறதோ, அதனை முன்வைப்போம். இவர்களை நாங்கள் எதிரிகளாகப் பார்க்கவில்லை. எங்களை எதிரியாகப் பார்த்தால் என்ன செய்வது?" 

`ஆட்சிக்கு சிக்கல் வந்தால் சசிகலாவை நோக்கி வருவார்கள்' என எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்? 

``இதுதான் உண்மை. அதற்கான நேரம் வரும்போது அனைத்தும் நடக்கும். நான் சட்டமன்ற உறுப்பினராகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய செயல்பாடுகளில் ஏதாவது தவறு இருக்கிறதா எனப் பாருங்கள். கள்ளக்குறிச்சி தொகுதியில் ஊழலுக்கு இடமளிக்காத வகையில் நான் செயல்பட்டு வருகிறேன். ஜெயலலிதா அம்மா விரும்பியது இதைத்தான். `நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டும், அமைச்சர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும், மக்கள் சேவையே மகத்தான சேவை' என்றார் அம்மா. அதன்படிதான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எங்கள் மாவட்டத்தில் இருக்கின்ற ஆட்கள் போல 30 சதவிகிதம், 40 சதவிகிதம் என கமிஷன் வாங்கிக் கொண்டு நான் செயல்படவில்லை. தொகுதி வளர்ச்சிக்கு ஒதுக்கக் கூடிய நிதியை அந்தந்த பகுதிக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பது மட்டுமல்லாமல், அதைக் கண்காணித்தும் வருகிறேன். இவர்களைப் போல நான் பர்சன்டேஜ் வாங்கும் வேலையைச் செய்யவில்லை" 

நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? 

``இங்குள்ள மாவட்டச் செயலாளரைத்தான் சொல்கிறேன். விழுப்புரத்தில் தெற்கு, வடக்கு என 2 மாவட்டங்கள் இருக்கின்றன. தெற்கு மாவட்டத்துக்குச் செயலாளராக குமரகுரு இருக்கிறார். அவர் எம்.எல்.ஏ-வாகவும் இருக்கிறார். இந்தத் தொகுதியில் வேலைகள் நடக்காமல் இருந்ததற்கு அவர்தான் காரணம். கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் கோரிக்கை, தாமதம் ஆனதற்கும் இவர்தான் காரணம். அம்மா இருக்கும்போது இதற்கான ஃபைல் அனைத்தும் தயாராக இருந்தன. அம்மா இறந்த பிறகு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரத்தை உளுந்தூர்பேட்டை பக்கம் கொண்டு போவது தொடர்பாக என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு நான் உடன்படவில்லை.

கூவத்தூரில் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் அழைத்து, `எடப்பாடிக்கு சப்போர்ட் பண்ணுங்க' எனச் சின்னம்மா கூறியபோது, நான் முன்வைத்த கோரிக்கை ஒன்றுதான். `கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும்' என்பதுதான். எந்தச் சூழலில் இருந்தாலும் என்னுடைய தொகுதியின் வளர்ச்சியை மட்டுமே மையப்படுத்திச் செயல்பட்டு வருகிறேன். ஓர் ஆட்சியின் 5 வருட காலத்தில் ஒரு வேலையைச் செய்து முடிக்கவே 3 ஆண்டுகள் ஆகிவிடும். திட்டத்தைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், அதைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் உழைக்கிறேன். அப்படி இருக்கும்போது பல வேலைகளில் இவர்கள் தலையிட்டதால், ஏராளமான வேலைகள் நிலுவையில் இருக்கின்றன. இதைக் கேட்கப் போனால், விரோதியாகப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு நாங்கள் விரோதமாகவும் இல்லை, இவர்களோடு சேர்ந்தும் செயல்படவில்லை". 

இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்துப் பேசியிருக்கலாமே? 

``அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. தொகுதிக்கென எதாவது நன்மைகள் நடந்திருந்தால் சந்திக்கலாம். அப்படி எதுவுமே நடக்காதபோது எதற்காகச் சந்திக்க வேண்டும். கள்ளக்குறிச்சி தனி மாவட்டத்தை உருவாக்குவதற்காக 2016-ம் ஆண்டிலிருந்து 2019 வரையில் யாரெல்லாம் உழைத்தார்கள் என ஆவணங்களைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். முதல்வர், தலைமைச் செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் என நான் கோரிக்கை மனு கொடுக்காத நபர்களே இல்லை. இவ்வளவு செய்தும் மாவட்டத்தை அறிவிக்கும்போது, `இதற்குக் காரணமாக இருந்தவர்கள்' என மற்றவர்கள் பெயரைச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும்போது, `அரசுக்கு உண்மையாக இருப்பேன். என்னுடைய சுயநலத்துக்காக எதையும் செய்ய மாட்டேன்' என்றுதான் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்படியிருக்கும்போது, அந்த உறுதிமொழிக்கு எதிராகச் செயல்பட்டார் எடப்பாடி பழனிசாமி. 

நான் அம்மாவால் பதவிக்கு வந்தவன். இவர்களை எல்லாம் முகத்துக்கு நேராக நான் பார்த்ததுகூட கிடையாது. நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது போலத்தான் எனக்கும் சீட் கொடுத்தார். என்னைப் பற்றி என் தொகுதி மக்களிடம் கேட்டுப்பாருங்கள். `பிரபு லஞ்சம் வாங்குகிறார்' என யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். சொல்லப்போனால் இந்தக் கட்சிக்கும் ஆட்சிக்கும் உண்மையாக இருப்பவன் நான்" என்றவர் இறுதியாக, 

``சபாநாயகர் கடிதம் அனுப்பினால், எதற்காக அனுப்பினார் எனப் பார்ப்போம். என்னென்ன தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எனக் கவனிப்போம். நாங்கள் தவறு செய்யாததால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நோட்டீஸை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். நாங்கள் அ.தி.மு.க-வில் இருக்கிறோம். அதே கட்சியில் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் தனித்தனி ட்ராக்கில் பயணித்துவருகிறார்கள். அதேபோல, நாங்களும் தனியாக ஒரு ட்ராக்கில் பயணம்செய்கிறோம். அவ்வளவுதான் வித்தியாசம்."