Published:Updated:

`நஞ்சில்லாத உணவு...10 ரூபாய் நாணயம்… போக்குவரத்து நெரிசல்..!' - சூலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்

எம்.புண்ணியமூர்த்தி
`நஞ்சில்லாத உணவு...10 ரூபாய் நாணயம்… போக்குவரத்து நெரிசல்..!' - சூலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்
`நஞ்சில்லாத உணவு...10 ரூபாய் நாணயம்… போக்குவரத்து நெரிசல்..!' - சூலூரில் வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்கள்

​​​​​"

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க  வேட்பாளர் சுகுமார், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் மயில்சாமி ஆகியோர் நேற்று சூலூர் தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க வேட்பாளர் சுகுமார், ``நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் அ.ம.மு.க அமோக வெற்றி பெறும். நான் வெற்றி பெற்றால் சூலூர் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான வணிகவரி அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். சூலூர் அரசு மருத்துவமனையை தரம்  உயர்த்தப்படுவதோடு மட்டுமல்லாது  இங்கு பிரேதப் பரிசோதனை செய்யும் வசதிகள் கொண்டுவர பாடுபடுவேன். போக்குவரத்து நெரிசலைச் சரி செய்யவும், குளங்களை மேம்படுத்தவும், கைத்தறி பூங்கா கொண்டுவரவும் உரிய நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியார்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்ய வேட்பாளரான மயில்சாமி, ``சூலூரில் குளம், குட்டைகள் எல்லாம் மாசுபட்டுள்ளது. என்னை வெற்றிபெற வைத்தால் இங்குள்ள ஏரி, குளங்களை எல்லாம் தூர்வாரி விவசாயத்திற்குப் பயன்படச் செய்வேன். மரபணு மாற்றத்தால் உணவுகள்  எல்லம் விஷமாகிவிட்டது. அதை ஒழிக்க வேண்டும். அதற்கு ரசாயன உரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு இயற்கை விவசாயத்தில் உணவுப்பெருக்கத்தைச் செய்து மக்களுக்கு நஞ்சில்லாத உணவு வழங்க மக்கள் நீதி மய்யம் சார்பாக பாடுபடுபேன்.  இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப்  பெருகத் துணை நிற்பேன். இங்கே கல்லூரிகள் கொண்டு வர முயல்வேன். மக்கள் நீதி மய்யம் உலகம் முழுவதும் பரவ வேண்டும். சமூக சீர்கேடுகளுக்கு ஒரு முடிவுகட்டி,  மாற்றத்தைக் கொண்டுவர  வேண்டும். அதுவே  எங்கள் நோக்கம்." என்றார்.

அடுத்ததாக ஒரு புதிய முயற்சியோடு வந்த சுயேச்சை வேட்பாளரான தமிழ்நாடு இளைஞர் கட்சியின் வேட்பாளர் கே.பழனிச்சாமி பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என விழிப்புணர்வு இல்லாமல் ஏற்படும் சிரமத்தை உடைப்பதற்காக டெபாசிட்  தொகையை பத்து ரூபாய் நாணயங்களாகக் கொண்டுவந்து செலுத்தினார்.  வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய  கே.பழனிச்சாமி, ``பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வெகுபேர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். பத்து ரூபாய் நாணயங்கள் செல்லும் என்று மக்களிடம் சொல்வதற்கும் இதை ஒரு வாய்ப்பாக ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தேன்.இந்த நாணயம் செல்லும் என்பதை உணர்த்தவே பொதுமக்களிடமே 10 ரூபாய் நாணயங்களாக சேகரித்துக்கொண்டு வந்தேன்'' என்றார்.