Published:Updated:

`அ.ம.மு.க-வைத்தான் அதிகம் நம்புகிறார்!’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக வரிந்துகட்டும் தி.மு.க-வினர்

கலிலுல்லா.ச

அரவக்குறிச்சி செந்தில் பாலாஜிக்குத்தான் என ஏறக்குறைய அ.தி.மு.க-வே முடிவுசெய்துவிட்டநிலையில், தனக்கு நெருங்கியவர்களிடம் குமுறியிருக்கிறார் செந்தில் பாலாஜி.

`அ.ம.மு.க-வைத்தான் அதிகம் நம்புகிறார்!’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக வரிந்துகட்டும் தி.மு.க-வினர்
`அ.ம.மு.க-வைத்தான் அதிகம் நம்புகிறார்!’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக வரிந்துகட்டும் தி.மு.க-வினர்

கட்சிகளின் கவனம் முழுக்க மே 19-ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலின் பக்கம் திரும்பியுள்ளது. இடைத்தேர்தலுக்காகப் பணத்தை வாரி இறைக்கத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆட்சியைத் தக்க வைக்க இந்த இடைத்தேர்தல் பெருமளவில் தனக்கு உதவியாக இருக்கும் என அவர் நம்புகிறார். சூலூரிலும் ஓட்டப்பிடாரத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என நெருங்கியவர்கள் கொடுத்த நம்பிக்கை அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. அரவக்குறிச்சியைக் குறித்து கேட்டபோது, அங்கு எதிர்தரப்பில் செந்தில்பாலாஜி இருக்கிறாரே... என சந்தேகமாத்தான் கூறியிருக்கின்றனர்.

அரவக்குறிச்சி செந்தில் பாலாஜிக்குத்தான் என ஏறக்குறைய அ.தி.மு.க-வே முடிவுசெய்துவிட்டநிலையில், தனக்கு நெருங்கியவர்களிடம் குமுறியிருக்கிறார் செந்தில்பாலாஜி. இது தொடர்பாக விசாரித்தபோது, ``தி.மு.க-வின் நம்பிக்கைகுரியவராக வலம் வந்துகொண்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. கட்சியில் இணைந்த சில நாள்களிலேயே மாபெரும் கூட்டம் ஒன்றைக் கூட்டி தனது பலத்தை நிரூபித்தார். ஆனால், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள தி.மு.க-வினர் அவருக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை” என்று விவரித்தவரிடம் என்ன காரணம் எனக் கேட்டபோது, ``தி.மு.க-வின் கரூர் மாவட்டப் பொறுப்பாளாரக இருந்தவர் நன்னியூர் ராஜேந்திரன். அவரது பொறுப்பைத்தான் செந்தில் பாலாஜிக்குக் கொடுத்துள்ளனர்.

இது நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதை அவர் வெளியில் காட்டிக்கொள்ளாதபோதும், செந்தில்பாலாஜிக்கு எதிரான நடவடிகைக்களில் ஈடுபட்டு வருகிறார். அரவக்குறிச்சியில் ராஜேந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் யாரும் செந்தில்பாலாஜிக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இது தொடர்பாகத் தனக்கு நெருங்கியவர்களிடம், `எனக்கு ஸ்டாலின்தான் பொறுப்பு கொடுத்தார். ஆனால், நான் என்னவோ ராஜேந்திரன் பொறுப்பை தட்டிப்பறித்தாக நினைத்து எனக்கு எதிராக அவர்கள் செயல்படுகின்றனர். என் மீது நம்பிக்கை வைத்து தளபதி அரவக்குறிச்சியைக் கொடுத்துள்ளார். ஆனால், இங்கிருக்கும் தி.மு.க-வினர் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதேநிலை நீடித்தால் என்ன செய்றதுனு தெரியல” என்று புலம்பியுள்ளார்.

`மண்டல கமிட்டி ஒன்றை அமைத்து, தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் செந்தில்பாலாஜி. ஆனால், அந்த மண்டல கமிட்டியில் தனக்கு நெருங்கிய அ.ம.மு.க-வில் இருந்தவர்களையே பொறுப்பாளராக அமர்த்தியுள்ளார். தி.மு.க-வினருக்கு அவர் முக்கியத்துவமே அளிப்பதில்லை. அதனால்தான இந்த இடைவெளி தொடர்கிறது. இது தேர்தலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது” என்கின்றனர் எதிர்தரப்பினர்.