Published:Updated:

``தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். பயிற்சி" - இலங்கை அதிபர்

வெங்கட சேது.சி
``தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். பயிற்சி" - இலங்கை அதிபர்
``தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். பயிற்சி" - இலங்கை அதிபர்

இலங்கையில் ஈஸ்டர் நாளன்று வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படைத் தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பயிற்சி அளித்திருப்பதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 21-ம் தேதி, ஈஸ்டர் பண்டிகை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்த தேவாலயங்கள் இரண்டிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 370 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டில் செயல்படும் இரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை விதிக்க அதிபர் மைத்ரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ``இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருடன் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதை தங்கள் நாட்டு உளவு அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்" என்றும் கூறினார்.

அந்தவகையில் ஈஸ்டர் நாளன்று தற்கொலைப்படையாகச் செயல்பட்ட தீவிரவாதிகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பயிற்சி அளித்துள்ளனர் என்றும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்றும் சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கை முழுவதும் சுமார் 140 ஆதரவாளர்கள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அரசுப் படைகள் இறங்கியிருப்பதாகவும் ஏற்கெனவே அதிபர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.